கொதித்தெழுந்த சீனியர் அமைச்சர்கள் : செந்தில் பாலாஜியின் பதவி தப்புமா?…

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2023, 9:34 pm
Senthil Balaji - Updatenews360
Quick Share

கரூர், கோவை, ஈரோடு, சென்னை ஆகிய நகரங்களில் தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் ஐந்து நாட்கள் நடத்திய அதிரடி ரெய்டு திமுக அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்து இருக்கிறது.

ஐடி ரெய்டால் திமுக ஷாக்

அதுவும் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் இந்த சோதனை நடந்திருப்பது திமுகவினரை பலத்த அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி விட்டுள்ளது.

ஏனென்றால் 40 இடங்களில்தான் வருமான வரித்துறை அதிகாரிகள் முதலில் சோதனைகளை நடத்தியதாக கூறினாலும் கூட அது டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றி செல்லும் வாகன ஒப்பந்ததாரர், மின்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள், அரசு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் ஒப்பந்ததாரர், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கரூரில் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா என 200 இடங்களுக்கும் மேலாக நீண்டுகொண்டே போனது.

இதுவரை இப்படி ஒரு ரெய்டு நடந்ததே இல்லை

இதுவரை இந்தியாவில் இப்படியொரு நீண்ட சங்கிலித் தொடர் வருமான வரி சோதனை நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையின்போது கணக்கில் வராத இரண்டு கோடி ரூபாய் ரொக்கமும், சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்தது தொடர்பான நூற்றுக்கணக்கான முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் வருமானவரித்துறை அதிகாரிகள் கரூரில் முதல் நாள் நடத்திய சோதனையின்போது அவர்களை திமுகவினர் சூழ்ந்து கொண்டு தாக்கி காயப்படுத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்த காலத்தில் கூட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்த நேரத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடந்ததில்லை என்று கூறப்பட்டதும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

ரெய்டுக்கு காரணம் பிடிஆர்?

வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த திடீர் ரெய்டுக்கு முக்கிய காரணம் ஏப்ரல் மாத மத்தியில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், பேசியதாக கூறப்படும் ஆடியோவில் சபரீசனும், அமைச்சர் உதயநிதியும் ஒரே ஆண்டில் முப்பதாயிரம் கோடி ரூபாயை சம்பாதித்து விட்டு அதை எப்படி வெள்ளை பணமாக மாற்றுவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் இடம்
பெற்றிருந்ததுதான்.

இந்த ஆடியோ வெளியான நேரத்தில்தான், டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனையாளர்கள் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வற்புறுத்தி கேட்கும் விவகாரம் உச்சத்தை எட்டியது. கடந்த ஓராண்டாகவே கரூர் குரூப் என்ற பெயரில் சிலர் டாஸ்மாக் கடை ஊழியர்களை போன் மூலம் மிரட்டி, கட்டாய பண வசூல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்று கூறப்பட்டாலும் கூட, இந்த முப்பதாயிரம் கோடி ரூபாயை எப்படி சம்பாதித்தார்கள் என்பதற்கான விடையை வருமானவரித் துறை அதிகாரிகள் நன்கு யூகித்தும் விட்டார்கள்.

இது தொடர்பான அத்தனை தகவல்களையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்து பார்த்த பிறகே வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த அதிரடி சோதனைக்கு தயாராகி உள்ளனர். விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் நகரங்களில் கள்ளச்சாராயம் குடித்து 25 பேர் பலியான சம்பவத்தையும் அவர்கள் இதில் சந்தேக கண்ணோடு பார்த்தனர்.

அமைச்சர் சகோதரரின் ஆடம்பர பங்களா

தவிர செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் 350 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட ஆடம்பர பங்களா ஒன்றை கரூரில் கட்டி வருவதையும் அறிந்த அவர்களுக்கு முப்பதாயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் மீதான சந்தேகம் இன்னும் வலுத்தது.

இப்படி பல்வேறு மனக்கணக்குகளை போட்டு, ஏற்கனவே தங்களுக்கு இது தொடர்பாக கிடைத்த தகவல்கள், ஆதாரங்களின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனையை வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில்தான் மிக அண்மையில் வெளியாகி இருக்கும் மூன்று செய்திகள் தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்

மாநிலத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. துபானங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்து விற்பது குறித்து தொடர்ந்து ஏராளமான புகார்கள் வருவதால் இந்த சிக்கல் ஏற்படாமல் தடுக்க மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கணினி மயமாக்கப்பட்ட பில்லிங் முறை கொண்டு வர அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்து இருக்கின்றனர்.

மேலும் ஜூன் மாத இறுதிக்குள் கியூ ஆர் கோட், ஜி பே உள்ளிட்ட டிஜிட்டல் சேவை மூலம் தொகை செலுத்தி மதுபானம் பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது.

கரூர் குரூப் : நடவடிக்கை?

அதேநேரம் ‘கரூர் குரூப்’ என்ற பெயரில் டாஸ்மாக் ஊழியர்களிடம் சிலர் அராஜகமாகப் பணம் வசூல் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்கள் கடிதம் எழுதி அனுப்பி இருக்கின்றன.

“இவர்கள் கடைகளின் விற்பனைக்கு ஏற்ப 45 ஆயிரம் 50 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். எதற்காக பணம் கொடுக்கவேண்டும் எனக் கேட்டால் பணம்கொடுக்காத கடைப் பணியாளர்களை சோதனையில் சிக்க வைத்து பணிநீக்கம் செய்துவிடுவோம் என மிரட்டுகிறார்கள். மாவட்ட மேலாளர் நடத்தும் கூட்டத்திலும் கரூர் குரூப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள். இப்படி அதிகாரிகளைக் காட்டி, மிரட்டி வசூலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி, “கரூர் குரூப் என்று கூறப்படும் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை 10 ரூபாய் அதிகமாக வசூலிக்கும் கடைகளின் எண், ஊழியரின் பெயரை கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காத்திருக்கும் 6 அமைச்சர்கள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மத்திய அரசின் வருமானவரித் துறையினர் நடத்திய இந்த அதிரடி சோதனை, திமுகவை நிலைகுலைய வைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சீனியர் அமைச்சர்கள் 6 பேரை, இந்த ரெய்டு கொந்தளிக்க வைத்தும் விட்டது. இந்த சோதனைக்கு மூல காரணம் யார் என்று கேள்வி எழுப்பி அவர்கள்
கொதிக்கவும் செய்கின்றனர்.

விரைவில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்து ஸ்டாலின் அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். இது நூற்றாண்டுக்கான ஆலோசனை கூட்டம் என்றாலும் முழுக்க முழுக்க, வருமான வரித் துறையின் ரெய்டு குறித்தே விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்போது
செந்தில் பாலாஜி குறித்து சீனியர் அமைச்சர்கள் முறையிடுவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கேள்விப்பட்டு அதனை தடுக்கும் விதமாக ஸ்டாலினிடம் விரிவாக விளக்கம் தர செந்தில் பாலாஜியும் தயாராக இருப்பதாகவே தெரிகிறது.

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு குறி?!!

“தனக்கு வலது கரம் போல் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மத்திய அரசு குறி வைத்திருப்பதை, தனக்கே குறி வைத்தது போல ஸ்டாலின் கருதுவதாக தெரிகிறது. அதனால் வெளிநாட்டில் இருந்தபோதும் அவரால் அங்கு நிம்மதியாக இருக்க
முடியாத சூழல்தான் நிலவியது” என்று மூத்த அரசியல் நோக்கர்கள்
கூறுகிறார்கள்.

“சீனியர் அமைச்சர்கள் 6 பேரும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜிக்கு எதிராக போர்க் கொடி உயர்த்துவார்கள் என்பது நிச்சயம். குறிப்பாக, டாஸ்மாக் இலாகாவை அவரிடமிருந்து பறிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தலாம். போக்குவரத்து துறை அமைச்சராக ராஜ கண்ணப்பன் இருந்தபோது, அவர் பட்டியலின அதிகாரி ஒருவரை அவமதித்து பேசியதால் வேறு துறைக்கு மாற்றினீர்கள்.

செந்தில்பாலாஜி பதவி பறிக்கப்படுமா?!!

அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிரான ஆடியோ விவகாரத்தில் அவருடைய துறையும் மாற்றப்பட்டது. ஆவடி நாசர் மீது புகார்கள் வந்ததும் அவரை அமைச்சர் பதவியிலிருந்தே நீக்கினீர்கள். இப்போது, டாஸ்மாக்கை மையமாக வைத்து
5 நாட்கள் தொடர் ரெய்டு நடந்திருக்கிறது. இதனால் கட்சி, ஆட்சி இரண்டின் மீதும் மக்களிடம் அதிருப்தி உருவாகி இருக்கிறது. இதை சரிசெய்ய, குறைந்த பட்சம் டாஸ்மாக் அமைச்சரிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்குங்கள் என்று ஸ்டாலினிடம் வலியுறுத்தும் வாய்ப்பு உள்ளது” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

செந்தில் பாலாஜியின் மதுவிலக்கு துறை அமைச்சர் பதவி தப்புமா?…என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 180

0

1