அனிதாவின் அமைச்சர் பதவி தப்புமா?…ஆதரவாளர்களின் ‘அட்டாக்’!!
Author: Udayachandran RadhaKrishnan8 November 2021, 12:41 pm
திமுக அரசுக்கு பெரும் தலைவலியாக இருப்பது கட்சி நிர்வாகிகள் அடிக்கடி மிரட்டல், தாக்குதல் புகார்களில் சிக்கிக் கொள்வதுதான். கடந்த 3 வாரங்களில் மட்டும் தமிழகத்தில் நடந்த இதுபோன்ற 4 சம்பவங்கள் திமுக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
காவலரை தாக்கிய அமைச்சரின் உதவியாளர்
கடந்த மாதம் 19-ம் தேதி, திருச்செந்தூரில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த தலைமை காவலர் முத்துக்குமார் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் காரை தள்ளி நிறுத்துங்கள் என்று சொன்னதற்காக அவரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாகரன்
கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்ததாக கூறப்பட்ட சம்பவம் தமிழக போலீசாரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுதொடர்பாக முத்துக்குமார் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தார்.
சிறிது நேரத்தில் காவல் நிலையத்திற்கு சென்ற கிருபாகரன் நடந்த சம்பவத்திற்காக தலைமை காவலர் முத்துக்குமாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள அந்த விவகாரம் அத்துடன் முடிவுக்கு வந்தது.
முதலமைச்சர் ஸ்டாலின் வரை இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிகிறது. “நிர்வாகிகளின் அடாவடித்தனத்தால் கட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும். உதவியாளர்களை
கொஞ்சம் அடக்கி வையுங்கள்” என்று அப்போதே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை திமுக தலைமை கடுமையாக எச்சரித்ததாகவும் தகவல்கள் வெளியானது.
திமுக அரசை கண்டித்த எதிர்க்கட்சி
இப்பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக் காட்டி “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இவ்வளவுதானா?’ என்று கேள்வியும் எழுப்பினார்.
இந்து முன்னணி அமைப்பினர் “காவலருக்கு அடி உதை! இதுதான் விடியல் அரசா?” என்று திருச்செந்தூர் நகர் முழுவதும் கைகளால் எழுதிய போஸ்டர்களை ஒட்டி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தினர்.
உயிருக்கு பயந்து விடுப்பு எடுத்த அரசு அதிகாரி
இதேபோல்தான் கடந்த 28-ம் தேதி திமுகவைச் சேர்ந்த, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய தலைவர் அந்த தாலுகாவின் வட்டார வளர்ச்சி அதிகாரியை மிரட்டியதாக கூறப்பட்டது.
ஒன்றியத்தில் முடிக்காத பணிகளை முடித்ததாக ஒப்புக் கொண்டு கணக்கு எழுதும்படி வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு அவர் மிரட்டல் விடுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதனால் தனது உயிருக்கு பயந்த அந்த அதிகாரி 60 நாட்கள் ஈட்டா விடுப்பில் செல்ல அனுமதிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்துவிட்டு சென்றது, அரசு அதிகாரிகளிடையே ஒருவித பய உணர்வை ஏற்படுத்தியது.
ஊராட்சி ஒன்றியத் தலைவரை மிரட்டிய திமுக பிரமுகர்
கடந்த 30-ந் தேதி தென்காசி மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாபன், பட்டியல் வகுப்பைச் சேர்ந்த கடையம் ஒன்றியத்தின் தலைவர் செல்லம்மாளிடம், “நீங்கள் பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் ஒன்றியத்துக்கு கிடைக்கவேண்டிய நிதியை வரவிடாமல் தடுத்து விடுவேன்” என்று மிரட்டல் விடுத்ததாக ஒரு வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை சிவ பத்மநாப மறுத்தாலும் கூட இது தொடர்பான சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை. ஏனென்றால் முதலில் ஒன்றியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த செல்லம்மாள் பதவி விலகல் கடிதத்தை கலெக்டரிடம் கொடுத்தார். பின்னர் அண்மையில் அதை திரும்ப பெற்றுக் கொண்டார். இதனால் சிவ பத்மநாபன் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட விவகாரம்
தற்போது மந்தகதியில் உள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரின் அடாவடி
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர ஆதரவாளரும்
திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஜெகன் என்கிற ஜெகன் பில்லா தற்போது போலீஸ் வலையில் சிக்கியுள்ளார்.
தீபாவளியன்று ஜெகன் பில்லாவும் அவரது நண்பர்கள் 5 பேரும் தூத்துக்குடியில் உள்ள தமிழக அரசின் சுற்றுலா மாளிகைக்கு சென்று அவர்கள் அங்கு மது அருந்தியதாகவும், அங்கிருந்த காவலாளி சதாம் சேட் அத்தனை பேரையும் வெளியே போகும்படி எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
அதற்கு நீதிபதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறையை எங்களுக்கு திறந்து விடுங்கள். அங்கு போய் நாங்கள் மது அருந்தி கொள்கிறோம் என்று ஜெகன்பில்லா கேட்டதாகவும் அதற்கு காவலாளி சதாம் சேட் மறுக்கவே “நான் தான் நீதிபதி, உன்னால் திறக்க முடியுமா? முடியாதா?” என்று மிரட்டி
ஜெகன் பில்லா உள்ளிட்ட 6 பேரும் அவரை கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவலாளி சதாம் சேட் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெகன் பில்லா உள்ளிட்ட 6 பேரையும் தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ஜெகனை கட்சியிலிருந்து திமுக தலைமை கட்டம் கட்டியுள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளரும், ஆதரவாளரும் அடுத்தடுத்து அத்துமீறி நடந்து கொண்டது, இம்முறை அவருடைய பதவிக்கு ஆபத்தை வரவழைத்துவிடும் என்று கோட்டை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
திமுகவுக்கு தர்மசங்கடமான நிலை
இதுபற்றி அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, “ஏற்கனவே கடலூர் எம்பி ரமேஷ் கொலை வழக்கிலும், திருநெல்வேலி எம்பி ஞான திரவியம் பாஜக பிரமுகரை தாக்கிய வழக்கிலும் சிக்கியுள்ளனர்.
இது திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எப்படியும் தங்களை பிரச்சினைகளிலிருந்து விடுவித்து விடுவார் என்ற நம்பிக்கையில் இதுபோல் அவருடைய ஆதரவாளர்கள் அடாவடியாக நடந்து கொள்வது தெரிகிறது. ஆனால் அவர்களின் முரட்டு சுபாவம் அமைச்சரின் பதவிக்கு வேட்டு வைத்து விடும் என்கிறார்கள்.
ஏனென்றால் திருச்செந்தூர் சம்பவம், பொதுமக்கள் முன்னிலையில் போலீசுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல். தூத்துக்குடியில் நடந்திருப்பதும் காவலர்களுக்கு சவால் விடும் தாக்குதலே! இதனால் திமுகவுக்குத்தான் கெட்ட பெயர் என்று பொதுமக்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கிவிட்டனர். இதை திமுக தலைமையும் உணர்ந்துள்ளது. தற்போது 2-வது முறையாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சிக்கல் வந்திருக்கிறது. அது, எதில் போய் முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.
0
0