ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுதலாம்: அண்ணா பல்கலை., அறிவிப்பு..?

19 April 2021, 9:20 am
anna university - updatenews360
Quick Share

சென்னை: அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளை இரவு 10 மணி முதல் 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் எடுக்கப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் வரும் 3ம் தேதி நடைபெற இருந்த 12ம் வகுப்புத் தேர்வும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொறியியல் செமஸ்டர் தேர்வின்போது, மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவரி கேள்வி பதில் போல் இல்லாமல், விரிவாக பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. கேள்விக்கு சந்தேகம் ஏற்பட்டால் புத்தகம், இணையத்தளம் பார்த்து எழுதவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சியடைய முடியும் என்றும் தெரிகிறது.

ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட உறுப்புக் கல்லூரிகளில் மாணவ மாணவியருக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகள் 30 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது . அத்துடன் 70 சதவீத மாணவர்கள் பெரும்பகுதியினர் தோல்வி அடைந்து விட்டதாகவும் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 30 சதவீத மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்த சூழலில் அண்ணா பல்கலைக் கழகமே ஆன்லைன் செமஸ்டர் தேர்வை இணையம் மற்றும் புத்தகம் வழியாக பார்த்து எழுத அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 47

1

0