ஆன்லைன் தேர்வில் தாமதமாக விடைத்தாள் பதிவேற்றம்…10000 மாணவர்கள் ஆப்செண்ட்: மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அண்ணா பல்கலைக்கழகம்..!!

Author: Aarthi Sivakumar
20 March 2022, 11:18 am
Quick Share

சென்னை: ஆன்லைன் தேர்வில் தாமதமாக விடைத்தாள் பதிவேற்றம் செய்த மாணவர்கள் ஆப்செண்ட் என பல்கலைக்கழகம் அறிவித்ததால் மாணவர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 1ம் தேதியிலிருந்து மார்ச் 12ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பி.இ, பி.டெக் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு தேர்வு துவங்கும் நிலையில் மதியம் 12.30 க்கும் விடைத்தாளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இருந்தபோதிலும் இணையத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக ஒன்றரை மணிநேரம் கிரேஸ் டைமும் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொடுக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் விடைத்தாளை பதிவேற்றம் செய்யாத மற்றும் காலாவகாசத்தை கடந்து விடைத்தாளை பதிவேற்றம் செய்த சுமார் 10,000 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்பதை குறிக்கும் வகையில் ”ஆப்சென்ட்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்சென்ட் போடப்பட்டதால் 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதேபோல் தாமதமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விடைத்தாளை திருத்த வேண்டாம் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் விடைத்தாள் மதிப்பீட்டுக்கு வந்த பேராசிரியர்களிடம் முன்னரே அறிவுறுத்தி இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் 10,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதும் சூழல் ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 253

0

0