அதிமுகவும் திமுகவும் கைகோர்த்த அதிசயம் : சூரப்பாவின் செயல்பாடுகளை எதிர்த்து ஒன்று திரண்ட தமிழக கட்சிகள்!!

Author: Babu
15 October 2020, 8:24 pm
stalin vs edappadi palanisamy - updatenews360
Quick Share

சென்னை : பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் போல தமிழகத்தின் உரிமைகளுக்காக இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒரே அணியில் இணைந்துள்ள அதிசயம் உலகப் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்கும் பிரச்சினையில் நடத்துள்ளது. அண்ணாப் பல்கலைக் கழகத்துக்கு உயர்புகழ்த் தகுதி பெறுவதற்கு முன் அதற்கான நிபந்தனைகள் பற்றி மாநில உயர்கல்வி அமைச்சர், மத்திய அரசிடம் சில விளக்கங்களைக் கேட்டுள்ள சூழலில், மாநில அரசை முந்திக்கொண்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதை இரு கட்சிகளும் ஒரே குரலில் எதிர்த்துள்ளன.

இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி சூரப்பாவுக்கு மாநில அமைச்சர் கே.பி.அன்பழகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக அரசிடம் கூறியதைத்தான் மத்திய அரசுக்குக் கடிதமாக எழுதியுள்ளேன் என்று சூரப்பா சொல்லிவரும் நிலையில், மாநில அரசு விளக்கம் கேட்டிருப்பது துணைவேந்தரின் கருத்தின் உண்மையில்லை என்பதையும், மாநில அரசை மீறி அவர் செயல்பட்டுவருகிறார் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

ஏற்கனவே, அரியர் மாணவர்களில் பிரச்சினையிலும் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுவுக்கு அவராகவே கடிதம் எழுதி அந்தப் பிரச்சினையைப் பெரிதாக்கி குழப்பம் ஏற்படுத்தினார். இப்பிரச்சினை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சினையிலும் மாநில அரசுக்குத் தெரியாமலே அவர் கடிதம் எழுதியுள்ளது அன்பழகனின் பேட்டி மூலம் பின்னர் தெரியவந்தது. இவர் மாநில அரசுக்குத் தெரியாமலேயே அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை ஒரு பாடமாக அறிமுகம் செய்தார். பின்னர் எதிர்ப்புகள் எழுந்தபிறகு அது விருப்பப்பாடமாக இருக்கும் என்று அறிவித்தார். சூரப்பா நியமிக்கப்பட்டபோதே அவர் மத்திய அரசுக்கு சார்பாக செயல்படுவார் என்று பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

EPS - stalin - updatenews360

வழக்கமாக தமிழக அரசுக்கு எதிராக ஒரு அரசு அதிகாரி செயல்பட்டால் அவரை ஆதரித்து அரசை எதிர்த்து அரசியல் செய்வதுதான் திமுகவின் பழக்கம். ஆனால், அதிசயமாக, மாநில அரசை மீறி செயல்படும் சூரப்பாவை திமுகவும் கடுமையாக எதிர்த்துள்ளது ஒரு அரசியல் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

உயர்புகழ்த் தகுதிக்கு கட்டமைப்பை பெருக்க வேண்டும் என்றும் அதற்கு ரூ. 2,750 கோடி செலவாகும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. அதில் ரூ.1000 கோடியை மத்திய அரசு வழங்கும் என்றும் மீதி ரூ.1,750 கோடியை அடுத்த 5 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இது குறித்து முடிவெடுக்க அமைச்சர்கள் குழுவை அறிவித்திருக்கிறது. ஆனால் துணைவேந்தர் சூரப்பாவோ, “தமிழக அரசு ஒன்றும் நிதி தர வேண்டியதில்லை; அண்ணா பல்கலைக்கழகமே 5 ஆண்டுகளில் ரூ.1570 கோடியைத் தன் சொந்த நிதியிலிருந்து செலவழித்துக் கொள்ள முடியும்; எனவே உயர்புகழ்த் தகுதி வழங்க வேண்டும்” என்று, தமிழக அரசைக் கேட்காமலேயே, மத்திய அரசுக்கு எழுதியிருக்கிறார்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ்த் தகுதி வழங்கப் பட்டாலும் கூட, 69% இட ஒதுக்கீடு தொடரும் என ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தமிழக அதிமுக அரசு வலியுறுத்துகிறது. ஆனால் இதைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளும் மத்திய அரசு, எழுத்துப்பூர்வமாக எந்த உத்தரவாதமும் அளிக்க மறுக்கிறது.

உயர்புகழ்த் தகுதி என்பது என்பது அண்ணா பல்கலைக்கழகத்தை மத்தியப் பல்கலைக்கழகமாக்கி மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் சதி எனவும் அதன்பின் கல்விக்கட்டணம், தேர்வுக் கட்டணம் கடுமையாக உயரும்; ஏழை எளி நடுத்தர வர்க்க மாணவர்கள் அதில் சேர முடியாத நிலை உருவாகும் என்றும் தமிழ்நாட்டு கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இது மத்திய பல்கலைக் கழகமாகும்போது பெரும்பாலும் வட இந்திய மாணவர்களே இதில் சேர்ந்துபடிக்கும் நிலை ஏற்படும் என்று அனைத்து கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன.

anna university updatenews360

உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகமாக அண்ணா பல்கலைக் கழகம் ஒளிவீசிக் கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பல்கலைக் கழகத்தை உயர்ப் புகழ் நிறுவனமாக ஆக்குவது என்ற பெயரில் மத்திய அரசிடம் தந்துவிடக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

உலகத் தரத்தில் உயர்த்த ரூ. ஆயிரம் கோடியை மத்திய அரசு தரத் தயாராக இருந்தால், அந்த நிதியை மாநில அரசுக்கே அளித்து, அண்ணா பல்கலைக் கழகத்தை உலகத் தரத்துக்கு உயர்த்தலாமே! மத்திய அரசுக்குக் கொண்டு சென்றால்தான் இதைச் செய்யவேண்டுமா என்ற வினாவையும் அனைவரும் எழுப்புகிறார்கள்.

அண்ணா பல்கலைக் கழகம் தமிழ்நாட்டின் வரிப் பணத்தில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்குப் பயன்படவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. நுழைவுத் தேர்வு கிடையாது. இந்த நிலையில், மத்திய அரசு வசம் ஒப்படைக்கப்பட்டால், நுழைவுத் தேர்வை வைத்து, ஏழை, எளிய, நடுத்தர, முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களை உள்ளே நுழையவிடாமல் கதவடைக்கும் நிலை ஏற்படும்.

சூரப்பா பிரச்சினையில் எதிர்க்கட்சிகளும் தங்களது கைகளை வலுப்படுத்தி தங்களை ஆதரிப்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட தமிழக அரசு எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் சூரப்பாவுக்கு விளக்கம் கடிதம் எழுதியுள்ளது. தொடர்ந்து அவர் இப்படி செயல்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு தயங்காது என்பதையும் அரசு உணர்த்தியுள்ளது, இதன் மூலம் மத்திய அரசுக்கு அஞ்சி மாநில அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் மாநில அரசு தவிடுபொடியாக்கியுள்ளது.

Views: - 40

0

0