என்னை விட கருப்பு தமிழன்.. கருப்பு திராவிடன் யார் இருக்கா…? இளையராஜாவுக்கு பாரத ரத்னா கொடுங்க… புயலை கிளப்பிய அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
18 April 2022, 6:22 pm
Quick Share

நானும் கருப்பு தமிழன், கருப்பு திராவிடன்தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக பேசியுள்ளார்.

தூய்மை இந்தியா பணியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கவுரவித்து அவர்களுக்கு பிரியாணி வழங்கி சமபந்தி போஜனம் விழா போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் பா.ஜ.க சார்பில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை பனியாளர்களுடன் அமர்ந்து சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்டு மதிய உணவை அருந்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :- 25 ஆயிரம் டன் குப்பை இந்தியாவில் உள்ள நகரங்களில் சேகரிக்கப்பட்டது. தற்போது 1 லட்சம் டன் குப்பையாக உயர்ந்து உள்ளது. 11 கோடியே 50 லட்சம் கழிப்பறைகளை மத்திய அரசு கட்டி உள்ளது. தமிழகம் முழுதும் தூய்மை பணியாளர்களை கவுரபடுத்தி கொண்டிருக்கிறோம்.

ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை சமூகநீதி நாட்களாக சமூக நீதி வாரங்களாக இந்தியா முழுவதும் பாஜக கொண்டாடி வருகிறது. இன்றைய தினம் தூய்மை பணியாளருக்கு கௌரவம் கொடுக்க வேண்டிய நாள்.

கோடை காலத்தில் துப்புரவு பெண் பணியாளர்களுக்கு சிரமங்கள் உள்ளன. கோடை காலத்திலாவது அவர்களுக்கு சேலை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றுவோம். துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுப்போம்.

புத்தக வெளியீட்டு விழாவில் முன்னுரையாக இளையராஜா எழுதி இருந்தார். அம்பேத்கரை வைத்து அரசியல் செய்ய கூடிய கட்சிகள் இளையராஜாவைப் பற்றி பதிவுகள் வெளியிட்டனர். இளையராஜாவுக்கு சொல்வதற்கு கருத்து சுதந்திரம் உள்ளது. அவர் பாஜகவைச் சேர்ந்தவர் கிடையாது. பாஜகவிற்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லை.

திமுக ஐடி விங் இளையராஜா குறித்து தரக்குறைவான விமர்சனங்கள் செய்தனர். சமூகநீதி பற்றி பேசக்கூடிய நீங்களே, ஒருவர் சொல்லக் கூடிய கருத்தை தரக்குறைவான விமர்சனங்கள் செய்தால், உங்களின் சமூக நீதி என்பது போலி சமூகநீதி என்பதை தமிழக மக்கள் பார்த்து விட்டார்கள். முடிவு செய்து விட்டார்கள். பாஜகவிற்கும் குறிப்பாக ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய எம்பி பதவிக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது.

இளையராஜா பாஜகவை சார்ந்தவரல்ல. தமிழக மக்களின் அன்பை பெற்றவர். இதை யாரும் அரசியலாக்க வேண்டாம். ராஜ்யசபா எம்.பி.பதவி கொடுத்து அடைக்க வேண்டாம் என்பது எனது கருத்து. அவருக்கு பாரத ரத்னா கொடுத்து கவுரவபடுத்த வேண்டும் என்பது எங்களது வேண்டுகோளாக உள்ளது.

கவர்னருக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. கட்சியாக திமுக தடுத்து நிறுத்தினால், பாரதிய ஜனதா கட்சி கவர்னரை வரவேற்க அங்கே இருக்கும். எது ஏற்பட்டாலும் மாநிலத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்க வேண்டும். கோவிலில் விவிஐபி தரிசனம் தடுக்க வேண்டும்.

கோவிலுக்கு வரும் வருமானத்தில் மக்களுக்கு செலவு செய்திட வேண்டும். தற்போது கோடைகாலம் என்பதால் கோவிலுக்கு வெளியே நீர் மோர் பந்தல், தர்பூசணி கடைகளை திறக்க வேண்டும். என்னைவிட கருப்பு தமிழன், கருப்பு திராவிடன் யார் உள்ளார்கள். நானும், கருப்பு தமிழன் தான் கருப்பு திராவிடன் தான், எனக் கூறினார்.

இந்த நிகழ்வில் பா.ஜ.க.மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன், லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 759

0

0