பாலுக்கு ஜிஎஸ்டியா…? திடீரென பல்டி அடித்தாரா அமைச்சர் நாசர்…? மக்களை இனியும் ஏமாற்ற முடியாது… ஆடியோவை வெளியிட்டு அண்ணாமலை கொடுத்த ரிப்ளை..!!

Author: Babu Lakshmanan
5 November 2022, 1:14 pm
Quick Share

சென்னை : பாலுக்கு ஜிஎஸ்டி போட்டிருப்பதாகக் அமைச்சர் நாசர் கூறிய விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

ஆவின் பாலின் விலையை ரூ.12 வரை தமிழக அரசு உயர்த்தியது. இது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், பால் விலையேற்றம் தொடர்பாக அண்மையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது :- திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலையை மூன்று ரூபாய் குறைத்து அறிவித்தது. இதனால் ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் செலவினர் ஏற்படுகிறது.

தற்போது கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பாலின் விலை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் பயன்படுத்தும் பால் விலை உயர்த்தப்படவில்லை. வரலாற்றில் இல்லாத நிகழ்வாக பாஜக அரசு பாலுக்கு கூட ஜிஎஸ்டி போட்டுள்ளனர், என்று தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இப்படிப்பட்ட அமைச்சர்களின் வாய் கோளாறினால் தான் தமிழக அரசு நிர்வாகக் கோளாறால் சிக்கி தவிக்கிறது. பாலுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர். பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல் பால் விலை உயர்வைத் திறனற்ற திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்,” எனக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், பாலுக்கு ஜிஎஸ்டி போட்டிருப்பதாகக் கூறியது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நாசர் பதிலளித்த ஆடியோவை அண்ணாமலை பகிர்ந்துள்ளார். அதில், எலைட் பாலுக்கு மட்டும்தான் ஜிஎஸ்டி போட்டிருப்பதாகவும், மற்ற பால்களுக்கு இல்லை என்று அமைச்சரே கூறும் ஆடியோ இடம்பெற்றுள்ளது. அப்போது, பின்னர், ஏன் பொத்தாம் பொதுவாக எல்லா வகை பால்களுக்கும் ஜிஎஸ்டி போட்டிருப்பதாகக் கூறியது எனக் கேள்வி எழுப்பும் ஆடியோவும் அதில் உள்ளது.

இந்த ஆடியோவை பகிர்ந்த அண்ணாமலை, “மெஜந்தா, சிகப்பு, நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற ஆவின் பால் வகைகளுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்பதை ஒப்புக்கொண்ட பால்வளத்துறை அமைச்சர். பொத்தாம் பொதுவாகப் பொய்களை சொல்லி மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்பதைத் திறனற்ற திமுக அரசு உணர வேண்டும்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 422

0

0