எங்கள குறைச்சு மதிப்பிடாதீங்க… இதுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம்… மக்கள் கவனிச்சிட்டுதான் இருக்காங்க.. அண்ணாமலை எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
23 September 2022, 10:39 am
Quick Share

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், அந்த அமைப்பின் ஏ.எஸ் இஸ்மாயிலை கைது செய்தனர். இதற்கு அந்த அமைப்புச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கோவையில் பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில், கோவை வி.கே.கே மேனன் சாலையில் அமைந்துள்ள மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி எறிந்தனர். அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு வெடிக்காத நிலையில், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, கோவை – பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த சரவணன் ஆகியோரின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டது. 2 கார், 2 ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜக அலுவலகம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கோவை பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை திமுக அரசு உணர வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 346

0

0