விஜயகாந்த் போல குறி வைக்கப்படுகிறாரா அண்ணாமலை..? அடுத்தடுத்து பத்திரிக்கையாளர்களுடன் மோதல் : பாஜக உஷார்…!!

Author: Babu Lakshmanan
5 January 2023, 6:11 pm
Quick Share

அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளிக்கும் பேட்டியில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அவரை வம்புக்கு இழுப்பது போல் கேள்விக்கணைகள் பாய்ந்தால் அதற்கு அவர் தக்க பதிலடி கொடுக்கவும் தயங்குவதில்லை.

இதனால் பிற கட்சிகளின் அரசியல் தலைவர்களிடம் இருந்து தனித்தன்மையை வெளிப்படுத்துபவராகவும், மாறுபட்டவராகவும் அவர் திகழ்கிறார் என்பதும் கண் கூடு.

Annamalai - Updatenews360

மாநில பாஜக தலைவராக பதவியேற்று ஒன்றை வருடங்கள் ஆன பிறகும் கூட அவரிடம் இந்த வேகம் சுறுசுறுப்பு சற்றும் குறையவே இல்லை.

அதேநேரம் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் அவ்வப்போது பார்க்க முடிகிறது. இது சில நேரங்களில் உச்சகட்டத்தையும் எட்டி விடுகிறது.

வாக்குவாதம்

இந்த நிலையில்தான் சமீபத்தில், சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது முன்னாள் எம்.பி. மஸ்தான் மரணத்தை பற்றியும் ஈரோடு பெண் மரணம் குறித்தும் அவர் பேசியபோது, செய்தியாளர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையே காரசார வாக்குவாதம் எழுந்தது. ஈஷா மையத்தில் கொலை நடந்ததாக ஒரு ஒரு செய்தி சேனலின் நிருபர் கூற, நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்? கொலையாளிக்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்று அண்ணாமலை எதிர்கேள்வி எழுப்ப கேள்வி கேட்டவர் திண்டாடித்தான் போனார்.

Annamalai - Updatenews360

அதே நிருபர், “நீங்கள் ஒவ்வொரு முறையும் ஆதாரங்களை வெளியிடுகிறேன் என்று சொல்கிறீர்கள். ஆனால் ஒருபோதும் கொடுப்பதில்லை” என்று குறை கூற அதற்கு அண்ணாமலை, “திமுக அமைச்சர் மீது மிக முக்கியமான குற்றச்சாட்டு வீடியோ ஆதாரத்துடன் என்னிடம் உள்ளது. நான் கொடுக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் அரை மணி நேரம் உங்கள் சேனலில் ஒளிபரப்ப வேண்டும். இந்த நிருபரிடம் இப்போது நான் ஆதாரங்களை தருவேன் அவர் அதை அரை மணி நேரம் ஒளிபரப்பு செய்துவிட்டு வந்து அடுத்த கேள்வியை கேட்க வேண்டும். நான் கொடுக்கும் ஆதாரங்களை போடாமல் ஒரு கட்சிக்கு ஜால்ரா அடித்து விட்டு இங்கே வந்து கேட்கக்கூடாது.

நான் பிஜிஆர் ஆதாரத்தை பிரஸ் மீட்டில் கொடுத்தும் அதை நீங்கள் ஒளிபரப்பு செய்யவில்லை. சும்மா வந்து கேள்வி கேட்டு கதை விடக்கூடாது. நான் கொடுக்கும் ஆதாரத்தை போடாமல் முதலமைச்சர் டீ குடித்தார், காபி குடித்தார், முதலமைச்சர் சைக்கிளில் போகிறார் என்று தானே செய்தி போடுகிறீர்கள். நீங்க வாங்க நான் ஆதாரம் தருகிறேன் அதை ஒளிபரப்ப வேண்டும். முதலில் பிஜிஆர் எனர்ஜி பற்றிய ஆதாரம் தருகிறேன் வரிசையாக ஒவ்வொன்றாக தருகிறேன்” என்று ஒரு பிடி பிடித்தார்.

காயத்ரி ரகுராம்

அதேபோல் ஒரு செய்தி நிறுவனத்தின் நிருபர், அண்ணாமலை மீது பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, திமுக பெண் எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துகொண்ட கூட்டத்தில் ஒரு பெண் காவலருக்கு திமுக இளைஞரணியை சேர்ந்த இருவரால் பாலியல் வன் கொடுமை நடந்துள்ளது. அது குறித்து நீங்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டீர்களா?… டிஜிபியிடம் கேட்டீர்களா?… என்று கிடுக்குப்பிடி கேள்விகள் எழுப்பி அவரை திக்கு முக்காட வைத்தார். அதேநேரம் காயத்ரி ரகுராம் கூறிய குற்றச்சாட்டுக்கும், அவருடைய பெயரைக் குறிப்பிடாமல் அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்தினார்.

BJP Gayathri - Updatenews360

ஒரு முன்னணி ஆங்கில நாளிதழின் செய்தியாளர் ரபேல் வாட்ச் குறித்து கேள்வி எழுப்ப, இந்த கடிகாரத்தை நீங்கள் ஒரு நாள் முழுவதும் வைத்திருந்து யாரை வேண்டுமானாலும் வைத்து இதில் கேமரா, ஒட்டு கேட்கும் கருவி ஏதாவது இருக்கிறதா? என்று சோதித்து கொள்ளுங்கள். அதற்கான முழுச் செலவையும் நானே தருகிறேன் என்று கூறி, ரபேல் வாட்சை அவரிடம் கழற்றி கொடுக்க அந்த செய்தியாளர் அதை வாங்கி பார்த்து விட்டு அண்ணாமலையிடமே திரும்ப கொடுத்த பரபரப்பு காட்சியையும் பார்க்க முடிந்தது.

ரூ.2 ஆயிரம் தருவாங்க

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இப்படி செய்தியாளர்கள் சந்திப்பின்போது வாக்குவாதத்தில் ஈடுபடுவது முதல் முறை அல்ல. ஏற்கனவே அவர் சில முறை அனல் பறக்க பேசி இருக்கிறார்.

குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி கேட்ட நிருபரை, “உங்களுக்கு அறிவாலயத்தில் இருந்து 200 ரூபாய் வந்து விடும்” என்று கிண்டலடித்தார். அந்த நிருபர் விடாமல் தொடர்ந்து கேள்விகளை கேட்க, நானூறு, ஐநூறு, ஆயிரத்து ஐநூறு என்று சிரித்தவாறு தொகையை ஏற்றிக் கொண்டே போனார். முடிவில் , “அறிவாலயத்தில் உங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து விடுவார்கள் கவலைப்படாதீர்கள்” என்று அதிரடியும் காட்டினார்.

இப்படி குறிப்பிட்ட செய்தியாளர்களை அண்ணாமலை வறுத்தெடுப்பது போல் சில நேரம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. சமூக ஊடகங்களில் அதுவே ஒரு விவாதப் பொருளாகவும் மாறி விடுகிறது.

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக உள்ள அண்ணாமலை இதுபோல் வாக்குவாதத்தில் ஈடுபடுவது சரியா?… 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலை அலசி ஆராயும் ஆய்வாளர்கள், இது பற்றி என்ன சொல்கிறார்கள்?.

“தமிழக அரசியலில் ஒரு புதிய தலைவர், மாறுபட்ட சிந்தனைகளோடு தீவிரமாக களமிறங்கும் போதும், அவர் சார்ந்த கட்சிக்காக தீவிரமாக செயல்படும்போதும் குறிப்பிட்டதொரு கட்சியின் சித்தாந்தத்தை நீண்ட காலம் தாங்கிப் பிடித்து வளர்ந்த, அனுபவம் வாய்ந்த செய்தியாளர்கள் சிலர் அதை ஜீரணிக்க முடியாமல் கடும் கேள்வி கண்களால் துளைத்தெடுக்கப்படுவது சர்வ சாதாரணமாக உள்ளது.

அதுவும் அவர்கள் தமிழகத்தின் மாற்று சக்தியாக உருவெடுக்கும் போதெல்லாம் இது போன்ற பிரச்சினைகளை குறிப்பிட்ட சில செய்தியாளர்கள் கிடுக்குப்பிடி கேள்விகள் என்ற பெயரால், கோபத்தை கிளறி விடும் வகையிலும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தும் விதமாகவும் நெருக்கடியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதும் உண்மை.

விஜயகாந்த்

இதில் இரண்டு விதமாக அந்த செய்தியாளர்கள் தங்களது சாதுர்யத்தை நிறைவேற்றிக் கொள்வதும் நடக்கிறது. அதாவது வாயைக் கிளறினால் ஆத்திரத்துடன் அந்தத் தலைவர்கள் கொந்தளித்து எழுவார்கள். பேசக் கூடாததை பேசுவார்கள். அதை பரபரப்பு செய்தியாக்கி,அவர்களின் இமேஜை முழுமையாக டேமேஜ் செய்து அடியோடு ஒடுக்கி விடலாம் என்பது முதல் கணக்கு. அதேநேரம் தாங்கள் மனதுக்குள் பூஜிக்கும் கட்சிக்கும் மறைமுகமாக வலு சேர்த்தது போலவும் ஆகிவிடும்.

இதில் முன்பு வைகோவும் டாக்டர் ராமதாசும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏராளமான கசப்பு அனுபவங்களையும் அவர்கள் சந்தித்தனர். சமீப காலமாக சீமானும் படாத பாடு பட்டு வருகிறார்.

இதுபோல 2014, 15, 16-ம் ஆண்டுகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில செய்தியாளர்களிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.

2014 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக சென்னையில் பேட்டியளித்த விஜயகாந்த், தனியார் டிவியின் செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் கோபத்தின் உச்சிக்கே சென்று ‘போயா! உனக்கு பதில் சொல்ல முடியாது’ என்று நாக்கை துறுத்திக்கொண்டு எகிறினார்.

இதேபோல், பிரதமர் மோடியை 2015 ஏப்ரல் மாதம் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், ஒருவரின் குதர்க்கமான கேள்வியால் ருத்ர தாண்டவம் ஆடி, “உன்னை தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க” என்று கொந்தளித்தார்.

இன்னொரு முறை சென்னை விமான நிலையத்தில் ஒரு செய்தியாளரை ‘நாய், நாய்’ என்று திட்டி பரபரப்பையும் கிளப்பினார்.

இப்படி எளிதில் உணர்ச்சி வசப்பட்டு விடும் விஜயகாந்தை மனோரீதியாக நிலை குலைய வைத்ததும், 2017-ம் ஆண்டுக்குப் பின்பு அவருடைய உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டதற்கு குறிப்பிட்ட செய்தியாளர்களும் ஒரு காரணம் என்ற பேச்சு தேமுதிக நிர்வாகிகள் வட்டாரத்தில் இன்றளவும் நிலவுகிறது.

பதைபதைப்பு

அதேபோல் தான் தமிழகத்தில், முன்பு மாநில பாஜக தலைவர்கள் தங்கள் கட்சியை வளர்க்க பாடுபட்டதை விட 10, 15 மடங்கு கூடுதல் உழைப்பைக் காட்டும் அண்ணாமலை மீது அவர்களுக்கு கோபம் ஏற்படுகிறது. அதுவும் முதல்முறையாக வாக்களிக்க இருக்கும் இளைஞர்களிடம் அவரின் பன்முகத் திறன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதையும் அந்த செய்தியாளர்கள் உணர்ந்துள்ளனர். கிராமத்திலும் மெல்ல மெல்ல அண்ணாமலையால் பாஜகவுக்கு செல்வாக்கு வளர்ந்து வருவது சில அரசியல் கட்சிகளின் கண்களை உருத்தத் தொடங்கி இருக்கிறது.

என்னதான் மடக்கி மடக்கி கேள்வி கேட்டாலும் சாதுர்யமாக பதில் அளித்து தன்னை அனைத்து துறைகளிலும் கை தேர்ந்தவர் என்பதை அண்ணாமலை ஒவ்வொரு செய்தியாளர்கள் சந்திப்பிலும் நிரூபிக்கிறார். இது ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தில் ஊறிய செய்தியாளர்களுக்கு தமிழகத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு காலூன்றி விடுமோ என்ற பதைபதைப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அண்ணாமலையிடம் எந்த வகையிலும் குறை காண முடியாததால் அந்த சித்தாந்த செய்தியாளர்கள் குழப்பத்தில் இருப்பதையும் பார்க்க முடிகிறது. அதனால் அவர்கள் அவரை எந்த அளவிற்கு இழிவுபடுத்தவும் தயங்க மாட்டார்கள் என்பதும் நன்றாக புரிகிறது. இதுவரை அதற்கு அண்ணாமலை எந்த விதத்திலும் இடம் கொடுக்கவில்லை என்றாலும் கூட அவர் இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது அவசியம்” என்று அந்த அரசியல் ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Views: - 405

0

0