ஜன.,26 சுதந்திர தினம் அல்ல.. இந்த முறை மறந்துடாதீங்க : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ரிமைண்ட் பண்ணிய அண்ணாமலை..!!!

Author: kavin kumar
18 January 2022, 10:43 pm
Quick Share

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாவின் போது, மாநிலங்களின் சிறப்பை பறைசாற்றும் விதமாக, வடிவமைக்கப்பட்ட வாகன ஊர்திகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குடியரசு தினம் அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களின் வாகன ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வாகன ஊர்தியில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை மையமாக வைத்து வாகனம் உருவாக்கப்பட இருப்பதாக பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இதனை மத்திய அரசு நிராகரித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதியளிப்பது தொடர்பாக மறுபரிசீலனை வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதனை ஏற்க மறுத்த மத்திய அரசு, குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி இடம்பெறாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இதையடுத்து, சென்னையில் நடக்கும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி காட்சிப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட் போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “ஜனவரி 26 ஆம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தின விழாவில் மரியாதை செலுத்துவதற்கு முன்பாக, பின்வரும் விஷயங்களை மனதில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். தேசியவாத எண்ணமும், ஆழ்ந்த ஆன்மீகத்தையும் கடைபிடித்தவர் மகாகவி சுப்பிரமணி பாரதி. பாரதம் என்னும் மந்திரமே அவர் கண்ட கனவாகும். தற்போது திமுக செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் எதிராகவே பாரதியார் நின்றார். மேலும், பாரதி எப்போதும் நெற்றியில் திலகமிடுவதை விரும்புவார் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழன் மற்றும் இந்தியன் என்பதே அவர் பெருமையாக கருதினார்.

அதேபோல, வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் தலைசிறந்த குயிலியும், எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தலைவராகலாம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு அரசியலுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். ஆனால், நீங்கள் நடத்துவது குடும்ப அரசியலாகும். தலைசிறந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை தேசியவாதி ஆவார். அவர் எப்போதும் தனிமாநிலம் என்று ஒருபோதும் பேசியதில்லை. உரிமைக்காக போராடியதால் அவர் கடுமையான தண்டனைகளை அனுபவித்தார். அவருடைய ஆன்மீகத் தன்மையையும், ஸ்ரீ ராமகிருஷ்ணரிடமிருந்து அவர் பெற்ற உத்வேகத்தையும் தயவு செய்து காட்டலாம்.

தலைசிறந்த இந்த தலைவர்களின் உண்மை கதாபாத்திரங்களை எந்தவித மாற்றமும் செய்யாமல் திமுக ஆளத் தொடங்கிய 1967ம் ஆண்டு முதல் பள்ளிப் புத்தகங்களில் அப்படியே கொண்டு வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். இறுதியாக, ஜனவரி 26ம் தேதி நமது நாட்டின் குடியரசு தினம்.. சுதந்திரம் தினம் அல்ல என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 285

0

0