சுவரில் துளையிட்டு நகைக்கடையில் ரூ.50 சவரன் நகை கொள்ளை : அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

25 September 2020, 12:32 pm
ariyalur gold theft - updatenews360 (2)
Quick Share

அரியலூர் : அரியலூர் நகரின் பிரதான கடைவீதியில் நகை கடையின் சுவரை துளையிட்டு 50 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
அரியலூர் நகரில் சின்னகடைவீதியில் பிரதான இடத்தில் உள்ள ஸ்ரீபாலாஜி தங்கநகை மாளிகை செயல்பட்டு வருகிறது.. இக்கடையின் உரிமையாளர் சௌந்தரராஜன் நேற்று இரவு ஷோகேஷில் நகைகளை வைத்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது கடைக்கு அருகில் தேங்காய்கடை வியாபாரம் செய்து வரும் ராமலிங்கம் என்பவர் தனது கடையை திறந்து பார்த்தபோது, சுவரில் துளையிட்டு நகைகடைக்குள் சிலர் சென்றதற்கான அடையாளம் தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து, ராமலிங்கம் தந்த தகவலின்பேரில், நகைகடை உரிமையாளர் சௌந்தரராஜன் கடையை திறந்து பார்த்தபோது, ஷோகேஷில் வைத்து தோடு, செயின், மோதிரம் உள்ளிட்ட 50 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், கொள்ளையர்கள் நகைக்கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 லட்ச ரூபாய் பணம் உள்ளதை கண்டுகொள்ளாததால் பணம் தப்பியது.

இது குறித்து அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற அரியலூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். டி.எஸ்.பி. மோகன் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மோப்பநாயுடன் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

நகைகடையில் உள்ள கேமராவை கடை உரிமையாளர்களே இரவில் கடையை மூடிச்செல்லும் போது, இயக்கத்தை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம் என்று கூறியது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்துயுள்ளது. நகைக்கடையில் வேலைபார்க்கும் ஊழியர்களிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். துளையிட்டு நகைக்கடை கொள்ளையடிக்கும் குற்றவாளிகள் குறித்த தகவல்களை சேகரித்து விசாரனையை தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தை போலவே செந்துறை நகரில் ரவிக்குமார் என்பவரின் நகை கடையிலும் கொள்ளையர்கள் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். சப்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் எழுந்து வந்ததால் தப்பித்து ஓடிய கொள்ளையர்கள், நகைகடைக்கு பின்னால் குடியிருந்த ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர் வீட்டிற்குள் புகுந்து, ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் பணத்தையும், மூன்று சவரன் நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் ஒரேநேரத்தில் இரண்டு இடங்களில்  நடைபெற்ற கொள்ளைச்சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 8

0

0