மதமாறச் சொல்லி தொந்தரவு… பிளஸ் 2 மாணவி தற்கொலை : சர்ச்சையில் சிக்கிய கிறிஸ்துவ விடுதி : வலுக்கும் எதிர்ப்பு

Author: Babu Lakshmanan
20 January 2022, 1:22 pm
Quick Share

அரியலூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கிறிஸ்துவ விடுதியில் தங்கிப் பயின்று வந்த மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு பின்னணியில் வெளியான திடுக்கிடும் தகவலால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்ள்ளது.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன் முருகானந்தம் (45). இவரது முதல் மனைவி கனிமொழியின் மகள் ஸ்வேதா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மாணவி மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை பள்ளியில் 8 வகுப்பு சேர்த்து தற்போது பிளஸ் 2 படித்து வந்தார். அவர் அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

கடந்த 9ஆம் தேதி பூச்சி மருந்தை குடித்து வாந்தி எடுத்துள்ளார். மாணவி தனக்கு வயிற்று வலி என்று கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மறுதினம் 10ம் தேதி மாணவியின் தந்தைக்கு தெரியப்படுத்தியதால் அவர் வந்து மாணவியை அழைத்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் சனிக்கிழமை 15ஆம் தேதி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்களிடம் மாணவி, தான் பூச்சிமருந்து குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து பைல்களையும் பார்க்கச் சொன்னதாகவும், தான் பிளஸ் டூ படிப்பதால் தன்னால் படிக்க முடியவில்லை என்ற காரணத்தினால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரி (62) கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். இதனிடையே, அந்த மாணவி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அப்பள்ளி மற்றும் விடுதியின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அந்த மாணவி உயிரிழப்பதற்கு முன்பாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தன்னை மதமாற்றம் செய்யக்கோரி பெற்றோரிடம் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், படிக்க விடாமல், விடுதியில் அதிக வேலை சொல்லி கொடுமைப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

எனவே, பள்ளிகளில் மதத்தை புகுத்தி மாணவியின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Views: - 325

5

0