அரியர் மாணவர்களின் தேர்ச்சி உறுதி..! ஏ.ஐ.சி.டி.இ. மின்னஞ்சல் போலியானது : அண்ணா பல்கலை., துணைவேந்தர் விளக்கம்..!

8 September 2020, 12:48 pm
college exam - updatenews360
Quick Share

அரியர் மாணவர்களின் தேர்ச்சி விவகாரத்தில் ஊடகங்களில் வெளியாகியுள்ள ஏ.ஐ.சி.டி.இ.யின் மின்னஞ்சல் போலியானது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கினால் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை எழுதும் மாணவர்களை தவிர்த்து, பிற ஆண்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதோடு, அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அரியர் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்து வரவேற்பு தெரிவித்தனர்.

இதனிடையே, அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கழகம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாக அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் சூரப்பா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தமிழக அரசின் முடிவிற்கு ஏ.ஐ.சி.டி.இ. எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனக் கூறி உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அதுபோன்ற மின்னஞ்சலோ, கடிதமோ இருந்தால் அதனை வெளியிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த சூழலில் அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்க முடியாது என்ற ஏ.ஐ.சி.டி.இ.யின் மின்னஞ்சல் வெளியானதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. இதனால் அரியர் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், அரியர் மாணவர்கள் விவகாரத்தில் ஏ.ஐ.சி.டி.இ. அனுப்பியதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் மின்னஞ்சல் போலியானது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது தரப்பில் இருந்து எந்த மின்னஞ்சலையும் வெளியிடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்மூலம், தமிழக அரசு அறிவித்ததை போல,அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

Views: - 0

0

0