அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை… தமிழக மக்களின் சார்பில் வாழ்த்துக்கள் : முதலமைச்சர் பழனிசாமி!!

4 August 2020, 8:00 pm
EPS- updatenews360
Quick Share

சென்னை : அயோத்தியில்‌ ராமர்‌ கோவில்‌ கட்டுவதற்கு நாளை நடைபெற உள்ள பூமி பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு எனது சார்பாகவும்‌, தமிழ்நாட்டு மக்களின்‌ சார்பாகவும்‌ மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்‌ கொள்வதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-1992 ஆம்‌ ஆண்டு நவம்பர்‌ 23 ஆம்‌ தேதியன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில்‌ கூட்டத்தில்‌ கலந்துக்‌ கொண்ட மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்‌, “அயோத்தியில்‌ ராமர்‌ கோவில்‌ கட்டப்பட வேண்டும்‌”, என்று வலியுறுத்திப்‌ பேசினார்கள்‌. அதே சமயம்‌, மசூதியும்‌ அயோத்தியில்‌ இருக்க வேண்டும்‌ என விரும்பினார்கள்‌. இதன்‌ மூலம்‌, தேசிய ஒற்றுமைக்காகவும்‌, நாட்டின்‌ நன்மைக்காகவும்‌, இந்துக்கள்‌ மற்றும்‌ இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமையை அவர்‌ விரும்பினார்‌ என்பது தெளிவாகிறது.

மாண்புமிகு உச்சநீதிமன்றம்‌ வழங்கிய, அனைத்து தரப்பு மக்களும்‌ வரவேற்கத்தக்க, ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின்படி அயோத்தியில்‌ ராமர்‌ கோயில்‌ கட்டுவதற்கான சுமூகமான சூழல்‌ ஏற்பட்டுள்ளதையடுத்து, மத்திய அரசு, அயோத்தியில்‌ ராமர்‌ கோயில்‌ கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்‌.

அயோத்தியில்‌ ராமர்‌ கோயில்‌ கட்ட வேண்டும்‌ என்ற இந்து மக்களின்‌ கனவை நனவாக்கும்‌ வகையில்‌, ராமர்‌ கோவில்‌ பூமி பூஜை விழாவில்‌ கலந்துகொண்டு அடிக்கல்‌ நாட்டவுள்ள மாண்புமிகு பாரத பிரதமர்‌ அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌, எனத் தெரிவித்துள்ளார்.