அவசர குடுக்கை கே எஸ் அழகிரி?…ஈரோடு தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 8:06 pm
KS Alagiri - Updatenews360
Quick Share

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் வெளியிட்ட செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டது போல அதற்குள் வசமாக சிக்கி விட்டார் என்றே தோன்றுகிறது.

கேஎஸ் அழகிரிக்கு பாதிப்பு

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைப் போலவே கே எஸ் அழகிரியும் கருத்து தெரிவித்தது தான் இதில் அவருக்கு பெரிய வினையாகி விட்டது.

செய்தியாளர்களிடம் இது குறித்து அவர் கூறும்போது, “விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி. அண்ணன் பழ நெடுமாறனை காட்டச் சொல்லுங்கள். நானும் பார்த்து வருகிறேன். இதில் எனக்கு ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.

சர்ச்சை பேச்சால் சிக்கிய அழகிரி

இதை அவர் ஆர்வக்கோளாறில் தெரியாமல் கூறிவிட்டாரா?… அல்லது தெரிந்தே தான் பேசினாரா?… திமுக கூட்டணியில் மிகவும் ஒன்றிப் போய் திமுக அனுதாபி போல் ஆகிவிட்டதால், தான் தமிழக காங்கிரஸ் தலைவர் என்பதையே மறந்து கூட்டணி கட்சிகள் தலைவர்கள் மாதிரி சொல்லி விட்டரா? தனது கருத்துக்கு டெல்லியில் சோனியா, ராகுல், பிரியங்கா மூவரிடமும் அனுமதி பெற்றாரா?…என்பதுதான் தற்போது காங்கிரஸில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவராக நான்காண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் கே எஸ் அழகிரியின் பதவிக்கு இந்த கேள்விகள் விரைவில் ஆப்பு வைத்து விடும் என்றே தெரிகிறது. இதற்கான காரணம் அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான்.

ராஜீவ் – விடுதலைப் புலிகள் இயக்கம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி இரவு ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு வந்தபோது பெண் மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலில் உடல் சிதறி அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தவிர அந்த மேடையில் இருந்தவர்களில் 15 பேரும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை நடத்தியது விடுதலைப்புலிகள் இயக்கம்தான் என்பது மத்திய புலனாய்வு துறையின் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு அப்போது இந்தியாவில் தடை விதிக்கவும் பட்டது. அந்தத் தடை இன்றளவும் நீடிக்கிறது.

ராஜீவ் கொலை குற்றவாளிகளான சிவராஜன், சுபா உள்ளிட்ட ஐந்து பேர்
தப்பியோடிய பின்பு, சம்பவம் நடந்த சில நாட்களில் பெங்களூருவில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தபோது தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிரடிப்படையினரால்
சுற்றி வளைக்கப்பட்டனர். இதனால் அந்த ஐந்து பேரும் சைனைடு விஷம் குடித்து தற்கொலையும் செய்து கொண்டனர்.

இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கும் பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவர்கள் ஏழு பேரும் கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டால் விடுதலையும் செய்யப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால் சம்பவம்

ராஜீவ் காந்தியின் கோரப் படுகொலை நடந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு
2009 மே மாதம் 18-ம்தேதி இலங்கையின் முள்ளி வாய்க்கால் பகுதியில் தீவிரமடைந்த இறுதிக் கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தங்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டதாக அந்நாடு அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது.

இப்படி அடுக்கடுக்கான தொடர் சம்பவங்களால் அகில இந்திய காங்கிரசுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் என்றாலே இதுநாள் வரை வேப்பம் காயாகத்தான் கசக்கிறது.

காங்கிரஸ் தலைவரிடம் பறந்த புகார்

அப்படி இருக்கும்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி. அண்ணன் பழ நெடுமாறனை காட்டச் சொல்லுங்கள். நானும் பார்த்து வருகிறேன் என்று எப்படி கூறலாம்?என்று கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளில் சிலர் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு மனவேதனையுடன் நீண்ட கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி இருப்பதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இன்னும் சிலர் தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் போனில் தொடர்பு கொண்டு தங்களது மன குமுறல்களை கொட்டி தீர்த்தும் உள்ளனர்.

சோனியாவுக்கு வந்த கடிதம்

அவர்கள் சோனியாவுக்கு எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், “தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடந்த சில மாதங்களாகவே அகில இந்திய தலைமைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பொருளாதார ரீதியாக நலிவடைந்தோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தபோது தானும் அதை ஏற்றுக் கொள்வதாக ஊடகங்களுக்கு உடனடியாக பேட்டியும் அளித்தார்.

ஆனால் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையோ இந்த இட ஒதுக்கீட்டை நான் எதிர்க்கிறேன். கட்சித் தலைமை என்னிடம் தெரிவித்த தகவலின்படி இதைச் சொல்கிறேன் என்று உறுதியாக கூறினார். மறுநாளே டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே 10 சதவீத இட ஒதுக்கீட்டில் மத்திய பாஜக அரசுக்கு எதிரான கருத்தை தெரிவித்தார். இதனால் கே எஸ் அழகிரியை விட செல்வப் பெருந்தகையே டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

பொங்கிய நிர்வாகிகள்

அதேபோல ரூபி மனோகரன் எம்எல்ஏ ஆதரவாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் கே எஸ் அழகிரி அத்துமீறி நடந்து கொண்டார். அதனால்தான் ஈ வி கே எஸ் இளங்கோவன்,
கே வி தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு எதிராக டெல்லியில் தங்களிடம் முறையிடவும் நேர்ந்தது.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே ஏற்கனவே காங்கிரஸ் வென்ற தொகுதி என்ற அடிப்படையில் மீண்டும் நாங்கள் தான் போட்டியிடுவோம் என்று அழகிரி தன்னிச்சையாக அறிவித்து விட்டார். அவர் தங்களையோ அல்லது மல்லிகார்ஜுன கார்கேயையோ தொடர்பு கொண்டு பேசியதாக தெரியவில்லை.

காங்கிரஸ் வேட்பாளராக ஈ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று கட்சி தலைமை அறிவித்த பிறகும் இரண்டு வாரங்கள் வரை பிரச்சாரத்திற்காக தொகுதி பக்கம் கே எஸ் அழகிரி செல்லவே இல்லை. கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிடுவதிலும் மிகுந்த தாமதம் காட்டினார். காங்கிரஸ் வேட்பாளர் தனக்கு பிடிக்காதவர் என்ற ஒரே காரணத்திற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் இப்படி நடந்து கொள்கிறாரோ என்று சந்தேகிக்க வேண்டி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் நமது முன்னாள் பிரதமரும், தங்களின் அருமை கணவருமான ராஜீவ் அவர்கள் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்திக் கொன்ற இயக்கத்தினர் மீது தற்போது பரிந்து பேசுகிறார். தமிழகத்தில் நமது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக கூட பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறப்படுவது பற்றி எந்த கருத்தையும் உடனடியாக தெரிவிக்கவில்லை. அந்த நாகரிகம் கூட கே எஸ் அழகிரிக்கு தெரியவில்லை.

மாறாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடும் நிலையில் நமது கட்சியின் வெற்றியை சீர்குலைக்கும் விதமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி. நானும் பார்த்து வருகிறேன் என்று சொல்கிறார்.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது நமது கட்சிக்கு தேவையற்ற விஷயம். அதை விவாதிக்க எந்த ஒரு காங்கிரஸ் தொண்டனும் விரும்பவும் மாட்டான்.

காங் தோற்றால் அழகிரிதான் காரணம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைக்கக்கூடிய ஓட்டுகளை ஒரு சிறிய கட்சிக்கு மடைமாற்றம் செய்து நம்மை தோல்வியடைய வைக்கும் முயற்சியாகவே இப்படிப்பட்ட தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. ஆனால் இதை கே எஸ் அழகிரி புரிந்துகொண்ட மாதிரியே தெரியவில்லை. மேலும்
32 ஆண்டுகளாக துயரக் கடலில் தத்தளித்து வரும் நம்மை இழிவு படுத்துவது போல தமிழக காங்கிரஸ் தலைவரின் செயல்பாடுகள் உள்ளன.

ஒருவேளை தனக்கு பிடிக்காத ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவதால் இப்படி திட்டமிட்டு அவர் பேசுகிறாரோ என்பது போலவும் தெரிகிறது.

ஈரோட்டில் நாம் தோல்வியை தழுவினால் அதற்கு முழு முதற் காரணம் கே எஸ் அழகிரியாகத்தான் இருப்பார். அதனால் அவரை உடனடியாக தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கொந்தளித்து உள்ளனர்.

அரசியல் நோக்கர்கள் கருத்து

“இப்படிப்பட்ட முணுமுணுப்பு, ஆவேசம் தமிழக காங்கிரசின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் கே எஸ் அழகிரியின் பதவியை டெல்லி மேலிடம் பறித்து விடாது என்பதே எதார்த்த நிலை” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

“ஏனென்றால் ராஜீவ் படுகொலையும், முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போரும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. இலங்கை ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த இந்த யுத்தத்தில் 2009 மே 18ம் தேதி மட்டும் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர். அதற்கு முன்பாக 20 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் தமிழர்கள் வடக்கு இலங்கை பகுதியில் ராணுவ வேட்டையால் தங்களது உயிர்களை பலி கொடுத்துள்ளனர்.

திமுக – காங்., கூட்டணிக்குள் பாதிப்பு

முள்ளி வாய்க்கால் இறுதி கட்ட போருக்கு இந்தியாவின் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைத்து விதமான ராணுவ தடவாளங்களையும் கொடுத்து உதவியது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அப்போது மத்திய அரசில் திமுக அங்கம் வகித்ததும் தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்ததும் நினைவு கூரத்தக்கது.

இந்த இரு வரலாற்று துயரச் சம்பவங்களையும் விரிவாக விவாதித்துக் கொண்டே போனால் அது காங்கிரஸ் திமுக கூட்டணிக்குத் தான் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தால் அது மீண்டும் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தலாம். அதனால்தான் பிரபாகரன் உயிரோடு இருப்பது பற்றி வெளியான செய்தி குறித்து திமுக அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் இப் பிரச்சினையில் உள்ளார்ந்த அர்த்தம், அரசியல் நோக்கம் எதுவும் கேஎஸ் அழகிரிக்கு புரியவில்லை. தற்போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் தங்களது வேதனையை கட்சி மேலிடத்திற்கு தெரிவித்து இருப்பதன் மூலம் தமிழக காங்கிரஸ் தலைவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகளே அதிகம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு வெளியான பின்பு எந்த நேரத்திலும் கே எஸ் அழகிரியின் தலைவர் பதவி பறிக்கப்படலாம்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இவர்கள் சொல்வதும் நியாயமாகவே தெரிகிறது!

Views: - 324

0

0