நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான விருதை தமிழகத்திற்கு வழங்கினார் குடியரசு துணை தலைவர்!!

11 November 2020, 2:20 pm
idukki dam 1- updatenews360
Quick Share

சென்னை : இந்தியாவில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்காக தேர்வாகிய தமிழக அரசுக்கு, தேசிய விருதை குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நீர் மேலாண்மைக்கு என ஜல்சக்தி துறையை தனியாக உருவாக்கியுள்ளது.
இந்தத் துறையின் மூலம், நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2வது ஆண்டாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. அதில், நாட்டிலேயே நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி முதல் மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, டெல்லியில் இன்று காணொலி காட்சியின் மூலம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழகத்திற்கான விருதை காணொலிக்காட்சி மூலம் வழங்கினார். இதனை சென்னையில் இருந்தபடி தமிழக அரசின் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசகம் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், “நாடு முழுவதும் தற்போது மாறி வரும் பருவ நிலை மாற்றம், மக்கள் தொகை அதிகரிப்பு இந்தச்சூழ்நிலையில் நீர் மேலாண்மை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய மாநிலமாக நாட்டிலேயே தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டதற்கு எனது வாழ்த்துக்கள்,” என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதில், இரண்டாவது இடம்பிடித்த மகாராஷ்டிரா மாநிலத்திற்கும், மூன்றாவது இடத்தை பிடித்த ராஜஸ்தான் மாநிலத்திற்கும் விருது வழங்கப்பட்டது.

Views: - 38

0

0