பீகாரில் நிதீஷ்குமாரை ஓதுக்கிவிட்டு முதல்வர் பதவியைப் பிடிக்க பாஜக திட்டமா? கூட்டணிக் கட்சியை எதிர்த்து மூத்த பாஜக தலைவர்கள் போட்டி!!

Author: Babu
14 October 2020, 8:06 pm
JDU - updatenews360
Quick Share

சென்னை: பீகாரில் ஐக்கிய ஜனதாதளத் தலைவரும் முதல்வருமான நிதீஷ்குமாரை ஓரங்கட்டிவிட்டு முதல்வர் பதவியைப் பெறுவதற்கு அவருடன் கூட்டணியில் இருக்கும் பாஜக வியூகம் வகுப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலர் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களை எதிர்த்து நிற்பதால் நிதீஷ்குமார் பெரும்பாலான இடங்களில் தோற்பார் என்றும் பாஜக அதிக இடங்களை வெல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையே காரணமாகக் கூறி மற்றொரு கூட்டணிக்கட்சியான லோக் ஜனசக்தி ஆதரவுடன் பாஜகவே முதல்வர் பதவியில் அமரும் என்று கூறப்படுகிறது.

நிதீஷ்குமாரே மீண்டும் முதல்வர் என்று கூறி பாஜக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் 122 இடங்களிலும் கூட்டணியில் உள்ள பாஜக 121 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. ஆனால், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானின் தலைமையில் இருக்கும் லோக் ஜனசக்தி, பாஜக நிற்காத 122 தொகுதிகளில் மட்டும் ஐக்கிய ஜனதாதளத்தை எதிர்த்து தனித்துப் போட்டியிடுகிறது. கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக நிதீஷ்குமாரை பாஜக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் மற்றொரு கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி நிதீஷ்குமாரை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் தேர்தல் முடிவுகள் வந்தபின்னர் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவு தருவோம் என்றும் தெரிவித்துள்ளது. லோக் ஜனசக்தியில் அறிவிப்புக்குப் பின்னே பாஜக தேசியத் தலைமை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Nithish_UpdateNews360

இந்நிலையில், பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலர் லோக் ஜனசக்தியில் சேர்ந்து நிதீஷ்குமாரின் கட்சிக்கு எதிராகக் களம் காண்கிறார்கள். மூத்த பாஜக தலைவர்கள் ராஜேந்திர சிங், உஷா வித்யார்த்தி, ராமேஷ்வர் சௌரேசியா ஆகியோர் லோக் ஜனசக்தி கட்சியின் சேர்ந்து நிதீஷ்குமாரின் கட்சிக்கு எதிராகப் போட்டியிடுகின்றனர். இது தவிர மேலும் ஆறு பாஜக நிர்வாகிகளும் இதே வழியில் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் வற்புறுத்தியதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்ட பாஜக தலைவர்கள் நீதீஷ்குமாரை கடுமையாக சாடினர். அதுமட்டுமல்லாமல், மாநிலத்தில் தற்போதுள்ள பாஜக தலைவர்கள் நிதீஷ்குமாரின் அடிமைகள் போல் செயல்படுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

நீக்கப்பட்ட பாஜக தலைவர்களும் லோக் ஜனசக்தி வேட்பாளர்களும் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திவருகின்றனர். இதை பாஜக மத்திய தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பது பீகாரில் நிதீஷ்குமாரை ஓரங்கட்டிவிட்டு பாஜக முதல்வர் பதவியைத் திட்டமிடுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான இடங்களில் நிதீஷ்குமாரின் கட்சி தோற்றால் அதிக இடங்களைப் பிடிக்கும் பாஜகவுக்கு முதல்வர் பதவியை நிதீஷ்குமார் விட்டுக்கொடுக்கும் வாய்ப்பு உருவாகும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஒருவேளை யாரும் ஆட்சி அமைக்க முடியாத வகையில் தொங்கு சட்டமன்றம் அமைந்தால் அப்போது யார் அமைப்பது என்பதை முடிவு செய்யும் ‘கிங்மேக்கர்’ என்று சிராக் பாஸ்வானின் கட்சி உருவாகலாம் என்ற வாய்ப்பும் இருக்கிறது.

BJP_UpdateNews360

பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் ஐக்கிய ஜனதாதளத்தின் வாக்குகளைப் பிரித்தால் அந்தக் கட்சி தோற்கவும் வாய்ப்பு ஏற்படும். பெரும்பாலான இடங்களில் ஐக்கிய ஜனதாதளம் தோற்றால் அதனுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்படலாம். இது லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதாதளம் ஆட்சி அமைக்கும் சூழலையும் உருவாக்கலாம்.

கொரோனாக் காலத்திலும் அதைத் தொடர்ந்து ஊரடங்குக் காலத்திலும் நாடு முழுவதும் பாதிப்பு ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் பீகார் சட்டமன்றத் தேர்தல் இந்திய அரசியலில் கொரோனா ஏற்படுத்திய மாற்றங்களைக் காட்டுவதாக அமையும். இதைத் தொடர்ந்து வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடனும் காங்கிரசுடனும் கூட்டணி அமைக்கும் கட்சிகளை பீகார் தேர்தல் முடிவுகள் பாதிக்கும்.

Views: - 35

0

0