அதிமுகவின் அதிரடிக்குப் பணிந்தது பாஜக : முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்பதாக வி.பி.துரைசாமி அறிவிப்பு

Author: Babu
12 October 2020, 5:12 pm
EPS - cm BJP- updatenews360
Quick Share

சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியை கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதாக பாஜக தலைவர்கள் அடுத்தடுத்துப் பேசுவது 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பதில் அதிமுகவுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளே கூட்டணியில் இருக்கலாம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அதிரடியாக அறிவித்ததைத் தொடர்ந்து, பாஜக தலைவர்கள் ஒருவர்பின் ஒருவராக இறங்கிவரத் தொடங்கிருக்கிறார்கள்.

TN_CM_EPS_UpdateNews360

சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த பாஜகவின் மாநிலத் துணைத்தலைவர் வி.பி. துரைசாமி முதல்வர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக பாஜக ஏற்கிறது என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார். இவரது கருத்துக்கு இதுவரை மறுப்போ, எதிர்கருத்தோ இதுவரை வரவில்லை. மேலும், செய்தியாளர்களிடம் பேசிய மற்ற பாஜக தலைவர்களும் அதிமுகவுடன் கூட்டணி குறித்து நேர்மறையாகவே பேசினார்கள்.

BJP Annamalai- Updatenews360

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மற்றொரு துணைத்தலைவர் அண்ணாமலையும், அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருக்கிறது என்று கூறியதுடன், எடப்பாடி பழனிசாமி ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டுப் பத்திரமும் வாசித்தார். கூட்டணியில் இருக்கும் இரு கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறோம் என்றும் அவர் கூறினார். மேலும், மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் அதிமுக கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது என்று தெரிவித்தார். திமுக அல்லது அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு என்று சில நாட்களுக்கு முன்பு சொன்ன ராதாகிருஷ்ணன் தனது கருத்தைத் திருத்திக்கொண்டு, அதிமுகவுடன்தான் கூட்டணியில் இருக்கிறோம் என்பது மட்டுமல்லாமல் அதிமுக தலைமையில்தான் தமிழ்நாட்டில் கூட்டணி இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொண்டார்.

இதுமட்டுமின்றி, பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது அவருக்கு வாழ்த்து சொன்ன குஷ்புவை பாஜக தனது கட்சியில் இணைத்துள்ளது, மறைமுகமாக பாஜக தேசியத் தலைமையும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் எண்ணுகின்றனர்.

அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவில் பாஜக இருப்பதால் ஏனைய கூட்டணிக் கட்சிகளான பாமகவுக்கும், தேமுதிகவுக்கும் தனி அணி உருவாக்கும் வாய்ப்பும் மிகவும் மங்கிவிட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் பாமகவும், தேமுதிகவும் கைகோர்த்து எதிர்கொண்டன. அப்போதைய கூட்டணியில் தேமுதிகவுக்கே அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டாலும், பாஜகவே அந்தக் கூட்டணியின் மையமாக இருந்தது. தற்போதைய நிலையில் புதிய கூட்டணி அமைக்கும் சூழலில் தேமுதிக இல்லை. தேமுதிக தனித்துப்போட்டியிட்டாலும் வெற்றிகிடைக்காது. ஏற்கனவே, 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்து களம் கண்ட பாமகவும் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.

pmk-aiadmk-alliance- updatenews360

திமுக கூட்டணியில் தற்போது இருக்கும் கட்சிகளுக்கே அங்கே தொடர்ந்து இடம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்குக் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும் என்றும், திமுக சின்னத்தில்தான் மற்றக் கட்சிகளும் போட்டியிட வேண்டும் என்றும் அந்தக் கூட்டணியில் பிரச்சினை உருவாகியுள்ளது. எனவே, திமுக கூட்டணியில் பாமகவோ, தேமுதிகவோ சேர்வதற்கு வாய்ப்பில்லை என்ற நிலைதான் காணப்படுகிறது. எனவே, கூட்டணிப் பேச்சுகளில் அதிமுக வலிமையான இடத்தில் இருக்கிறது.

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு எடுக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் பழனிசாமி கூறியிருக்கிறார். எனவே, எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி சேர்வது என்பதை அதிமுக பின்னர் முடிவுசெய்யும். கூட்டணிப் பேச்சுகளை அதிமுக தொடங்கும்போது ஒவ்வொரு கட்சிகளாக அழைக்கப்படும். தொகுதிப் பேச்சுகள் தொடங்குமுன் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை அந்தக் கட்சிகள் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையே தற்போது இருக்கிறது.

L Murugan - Updatenews360

முதல்வரை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் வெளியே பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, அதிமுகவின் முதல் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்ததாகக் கூறினார். கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதானா என்று இருமுறை பத்திரிகையாளர்கள் கேட்டபோதும், தான் ஏற்கனவே அதுபற்றிக் கூறிவிட்டதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்காத கட்சிகள் கூட்டணியில் இருக்கமுடியாது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அறிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் அதிரடி அணுகுமுறையையே கூட்டணிப் பேச்சுகளில் அதிமுக பின்பற்றும் என்பதை வலியுறுத்தும்விதமாக, அவரது கருத்து அமைந்தது. அந்த அணுகுமுறை அதிமுகவுக்கு வெற்றியையே தருவதாக இருப்பதையே பாஜக தலைவர்கள் இறங்கிவந்தது காட்டுகிறது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணிக்கும் அதிமுகவே தலைமை வகித்தது. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான் என்ற நிலையிலும், தேசிய அளவில் நடைபெற்ற தேர்தலிலும் அதிமுகவின் தலைமையை ஏற்றது பாஜக.

Views: - 51

0

0