தமிழகத்தில் அதிமுக கூட்டணியிலேயே நீடிப்போம் : புதுச்சேரியை கையில் எடுத்து டீலுக்கு தயாராகும் பாஜக!!
19 November 2020, 6:56 pmசென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் மட்டுமல்லாமல் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி தலைமை தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக தேர்தலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இதுமட்டுமல்லாமல் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது பாஜக. பாஜகவின் நேரடி எதிரான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை புதுச்சேரியில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறார் ஜே.பி.நட்டா.
புதுச்சேரியில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு கூட்டணி பலம் மிகவும் அவசியமாகிறது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு திமுக விட்டுக்கொடுத்துள்ளதோ, அதேபோல் அதிமுகவும் பாஜகவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதே தற்போது எழுந்துள்ள கோரிக்கையாக உள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தெரியாமல் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டது. கூட்டணியில் இருப்பவர்களிடம் கூட சொல்லாமல் ரங்கசாமி இவ்வாறு நடந்துகொள்வது முறையல்ல எனக்கூறி தனித்துப் போட்டியிடுவோம் என பரபரப்பு கிளப்பினார் பாஜக புதுச்சேரி தலைவர் சாமிநாதன். இதனால் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் சுமூக உறவு இல்லாத நிலையே நீடித்துவருகிறது.
மேலும், ரங்கசாமியை முதலமைச்சர் ஆக்கினால் நமக்கு என்ன பயன் என்றும், உள்ளூர் தலைவர்கள் மேலிடத்தில் கேள்வியை எழுப்பியுள்ளனர். இதனால் எல்லா வித பலன்களையும் கணக்கிட்டு, புதுச்சேரியில் ஏன் நாம் ஆட்சி அமைக்கக் கூடாது என பாஜக சிந்திக்கத் தொடங்கிவிட்டது.
இதன் வெளிப்பாடாகவே அதிமுகவுடன் நடத்தவுள்ள கூட்டணி பேச்சுவார்த்தையில் இதுகுறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பாஜகவின் இந்த டீலிங்கை அதிமுக ஏற்றுக்கொள்ளுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
0
0