ராகிணி திவேதி எங்கள் கட்சியில் உறுப்பினராக இல்லை:கர்நாடகா பாஜக அறிக்கை

6 September 2020, 9:12 pm
Quick Share

பெங்களூரு: போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ராகிணி திவேதி எங்கள் கட்சியில் உறுப்பினராக இல்லை என கர்நாடக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் நடிகை அனிகா உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்ததில் நடிகை ராகிணி திவேதிக்கும் போதைப்பொருள் விற்கும் கும்பலை சேர்ந்த சிலருக்கு தொடர்பு உள்ளதாக ஆதாரங்கள் கிடைத்தது. இதையடுத்து நடிகை ராகிணி திவேதி போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது.இந்த நிலையில் அவர் கடந்த காலங்களில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாதாகவும், அவருக்கும் பாஜகவிற்கும் தொடர்பு உள்ளதாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகை ராகிணி திவேதி எங்கள் கட்சி உறுப்பினர் இல்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நூற்றுக்கணக்கான பிரபலங்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக சொந்த விருப்பத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ராகிணியும் ஒருவராக இருக்கலாம். தேர்தலில் பிரசாரம் செய்யும்படி அவருக்கு கட்சியில் இருந்து பொறுப்பு எதுவும் அளிக்கப்படவில்லை. அவர் சொந்த விருப்பத்தின்பேரில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கலாம். அவரது சொந்த மற்றும் தொழில் முறை சார்ந்த வாழ்க்கை செயல்பாடுகள் பற்றி பா.ஜ.க. பொறுப்பேற்கவோ அல்லது பதிலளிக்கவோ முடியாது. இதில் இருந்து நாங்கள் விலகியே இருக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 8

0

0