அதிமுகவை பலவீனப்படுத்தி வளரனும் என்ற அவசியம் எங்களுக்கு கிடையாது : கூட்டணி தர்மம் ரொம்ப முக்கியம் : அண்ணாமலை பேச்சு!!

Author: Babu Lakshmanan
4 February 2023, 4:06 pm
Quick Share

சென்னை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் வலுவான வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க‌. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜ.க. சில முன்னெடுப்புகளை எடுத்துள்ளோம். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் நிலைப்பாடு எடுக்க உள்ளோம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் 8 நாட்களாக பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா அறிவுறுத்தல் பேரின் பேசினேன்.

கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அ.தி.மு.க.‌இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. முப்பத்து ஒன்றாம் தேதி வரை காத்திருந்த பின்னர் தான் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் என்னை‌ தொடர்பு கொண்டு பேசினார்கள். அதன்படி 2 தனித்தனியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

கூட்டணி கட்சி விஷயங்களில் பாஜக எப்போதுமே தலையிடவில்லை. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். இரட்டை இலை சின்னம் என்பது இடைத்தேர்தலில் நமக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

ஓ.பி.எஸ்.சிடம் நாங்கள் ஒரு வேண்டுகோள் விடுத்தோம். நேற்று அவரிடம் தமிழக மக்கள் நலனுக்காக பன்னீர்செல்வம் அவர்கள் எடப்பாடி தரப்பு வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் சில நிபந்தனைகளை வைத்தார்.

தி.மு.க.வின் அசுரபலத்தை எதிர்க்க வேண்டும் என்றால் நாம் கூட்டணி கட்சி சார்பாக வலுவான வலிமையான ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை நாம் பார்த்தோம். எங்களின் ஒரே நோக்கம் ஒரு வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும்.

அவருடன் இணைந்து நாங்கள் அவரை வெற்றி பெற செய்வோம். எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. நேற்று அகில இந்திய பொதுச்செயலாளர் சொன்னது ஒரு வேட்பாளர் மட்டுமே தேவை. எங்கள் கூட்டணி 2024ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்த இருக்கிறது.

எங்களின் ஒரே வேண்டுகோள்‌ மீண்டும் அ.தி.மு.க. சார்பில் ஒரே வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் அறிவித்த உடனேயே நாங்கள் (பா.ஜ.க.) போட்டியிட வில்லை என இரு தலைவர்களிடம் தெரிவித்து விட்டோம். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து பிரிந்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறைவு, என தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையனின் கருத்திற்கு பதில் அளித்தவர், ஆடியோ சர்ச்சையில் சிக்கி பிறகு அதை நான் பேசவில்லை என்று கூறியவர் தானே அவர். அதற்குள் நாம் போக வேண்டாம். சமூக வலைதளங்களில் 2ம் கட்ட மற்றும் 3ம் கட்ட தலைவர்கள் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சரித்திரங்களை தலைவர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும், என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இபிஎஸ் அணியின் வேட்பாளருக்கு தான் உங்கள் ஆதரவா என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை :- தேர்தலை பொருத்தவரையில் வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளருக்கு பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டும். அந்த வகையில் ஓ பன்னீர்செல்வம் இடம் வேண்டுகோள் வைத்ததன்படி இன்று மாலை நல்ல செய்தி தெரிவிப்பார் என்று நம்புகிறேன்.

தேர்தல் வெற்றிக்காக இரட்டை இலையை கொண்டு செல்ல வேண்டும். பிற கட்சிகளை வலு இழக்க செய்து நாங்கள் வளர வேண்டும் என நினைப்பதில்லை. நாங்கள் சுயமாக தான் வளர வேண்டும். கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மேலிட இணைப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் வேலைப்பளு மீண்டும் அதிகரித்துள்ளது. நான் ஒன்று நினைக்கும் போது கடவுள் ஒன்று நினைக்கிறார். யாத்திரையும் நடக்க வேண்டும். தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும், என்றார்.

Views: - 302

0

0