களம் மாறிவிட்டது… இனி நம்ம ஆட்டம்தான்… திமுக – பாஜகவுக்கு என்றுமே செட் ஆகாது : தொண்டர்களிடையே அண்ணாமலை பேச்சு!!

Author: Babu Lakshmanan
24 March 2023, 6:13 pm
Quick Share

தமிழகத்தின் தொப்புள் கொடி உறவான பாரத பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கையால் இந்தியா இல்லாமல் இலங்கை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவுளதால் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியை வெல்ல வழிகாட்டுதல் கருத்தரங்கு நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு அண்ணாமலை பேசியதாவது :- நாட்டில் கடந்த 70 ஆண்டுகளாக ஏழை, எளியவர்கள், விவசாயிகள், மகளிர்கள் அனைவருமே வாக்கு வங்கியாக மையப்படுத்தி ஆட்சி நடத்தினார்கள். பாரதிய ஜனதா கட்சி அனைத்து மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மகளிர்க்கு வீடு கட்டி கொடுத்துள்ளது. நாட்டில் 11 கோடி கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 46 கோடி பெண்களுக்கு ஜன் தன் யோஜனா திட்டத்தில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி இந்துக்களுக்கான கட்சி என்று சொல்பவர்கள் எல்லாம் தற்போது வாயடைத்துள்ளனர். கிறிஸ்தவர்கள் அதிகம் வாழக்கூடிய மாநிலங்களில் உள்ள மக்கள் கூட பாரதிய ஜனதா கட்சியை ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழகம் உட்பட நாடு முழுவதும் களம் மாறிவிட்டது. தமிழகம் பாரதி ஜனதா கட்சியின் களமாக மாறி உள்ளது. நம்பிக்கை வந்தால் புரட்சி தானாக வந்துவிடும். தமிழகத்தில் ஒரு கட்சி ஒரு குடும்பம் ஆட்சி நடத்துகிறது. திமுக அமைச்சர்கள் அனைவருமே கொள்ளை அடிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, குஜராத் முதல் நாக்பூர் வரை அனைத்து பகுதிகளுக்குமான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எனவே, பாஜகவினர் நெஞ்சை நிமிர்த்து ஓட்டு கேட்க வேண்டும். கடந்த காலங்களை விட தற்போது இஸ்லாமிய சமூகத்தினருக்கு 44 சதவீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த 2014க்கு முன்பு ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதியில் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றால் திரும்பி வருவார்களோ என்று சந்தேகம் இருந்தது. அந்த அளவிற்கு மீனவர்கள் நடுக்கடலில் சுடப்பட்டனர். இதனை வைத்து காங்கிரஸ் திமுக அரசியல் செய்து வந்தது. இந்த 9ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் யாரும் சுட்டு கொல்லப்படவில்லை. மத்திய அரசு இலங்கை அரசுடன் இணக்கமாக உள்ளது. அதனால், தற்போது இந்தியா இல்லாமல் இலங்கை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழர்களின் தொப்புள்கொடி உறவு இலங்கை தமிழர்களுக்கான நலனுக்கான திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது. எனவே இந்தியாவின் உதவியோடு இலங்கையில் 110 கோடி ரூபாய் மதிப்பில் கலாச்சார மையம், இலங்கையின் வடகிழக்கு பகுதியில் 45 ஆயிரம் வீடுகள், மத்திய பகுதியில் 14 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு சாலை, கப்பல் துறை என அனைத்து வளர்ச்சி திட்டங்களும் இந்தியாவின் மூலம் செய்யப்பட்டு வருகின்றன. எனவே பல ஆண்டுகளாக செய்யாத பல திட்டங்களை கடந்த 9 வருட காலத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ளார்.

கச்சத்தீவு 140 வருட கால பிரச்சனை. எனவே, அந்தப் பிரச்சனையும் விரைவில் பாரத பிரதமரால் முடித்து வைக்கப்படும் என்று அவர் கூறினார். தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்துவதிலும் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள பிரச்சனைகளும், உப்பள தொழில் உள்ள சில பிரச்சனைகளும் விரைவில் தீர்க்கப்படும்.

காசி, ராமேஸ்வரம் ஆகியவற்றை தமிழ் சங்கம் மூலமாக பாரத பிரதமர் இணைத்துள்ளார். அடுத்ததாக சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் அடுத்த மாதம் 17ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. தமிழக மக்களை தேசியத்துடன் இந்த அரசு இணைத்து வருகிறது. ஆனால் இங்கு இருப்பவர்கள் பிரிவினைவாதத்தை தூண்டி வருகிறார்கள். தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது.

கடந்த 70 ஆண்டுகளாக செயல்படுத்த முடியாத கனவு திட்டமான ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நேர்மையான அரசு. திமுக அரசு ஊழல் அரசு. எனவே இரண்டுக்கும் பொருந்தாது என்று கூறினார். மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துங்கள். நம்பிக்கை இருந்தால் எழுச்சி தானாக ஏற்படும். அரசியலில் மாற்ற வேண்டும். மாற்றத்துக்கான நேரம் இது. மாற்றம் நிச்சயம் நடக்கும், என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பாரதப் பிரதமரின் 10 ஆண்டு சாதனைகளை சொல்லி பெருமையோடு வாக்கு சேகரிக்க வேண்டும், என கூறினார்.

Views: - 236

0

0