சவால் விட்டுட்டு இப்படி பதுங்கலாமா? ஏன் பயமா? பொறுப்போட நடந்துக்கோங்க : திமுக எம்பியை விளாசிய பாஜக பிரமுகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2022, 4:48 pm
DMK MP - Updatenews360
Quick Share

இலவச திட்டங்களை முறைப்படுத்தக்கோரி அஸ்வினி குமார் உள்ளிட்ட 4 பேர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது, இலவச திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை திவால் நிலைக்கு இட்டுச்செல்லும் என மனுதாரர்கள் தரப்பிலும், மத்திய அரசின் தரப்பிலும் வாதிடப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி, தேர்தலின் போது இலவச வாக்குறுதிகளை அளிக்கவேண்டாம் என கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எப்படி உத்தரவிட முடியும் என்ற கேள்வியை முன்வைத்தார். மேலும், இலவசங்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் வித்தியாசம் என்ன…? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து மத்திய அரசு கூறும்போது, போலியான இலவச அறிவிப்புகள் பொருளாதாரத்தை சீரழிக்கின்றன என்று தெரிவித்தது. அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடும்போது, கடும் கோபம் அடைந்த தலைமை நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி என்ற முறையில் என்னால் எதுவும் கூற முடியவில்லை என்றும், ஆனால் உங்கள் கட்சி நடந்துகொண்ட விதம் மற்றும் உங்கள் அமைச்சர் பேசும் விதத்தை நாங்கள் கண்டும் காணாதது போல் இருக்கிறோம் என்று நினைக்க வேண்டாம் என்றும், அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருப்பதாகக் கூறினார்.உங்கள் கட்சி மட்டும்தான் அறிவாளித்தனமாக செயல்படுகிறது என நினைக்கவேண்டாம் என்றும் அவர் காட்டமாக தெரிவித்தார்.

தலைமை நீதிபதியின் இந்த கருத்தை தர்மபுரி லோக்சபா தொகுதி திமுக எம்.பி., செந்தில்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், “ஆம். சமூகநீதி ஆட்சி மூலம் இதை சாதித்து, தரவுகள் மூலம் நிரூபித்து காட்டிய கட்சி திமுக மட்டுமே. இதில் என்ன சந்தேகம், My UnLords’,” என குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதியை ‛லார்ட்’ என்று குறிப்பிடாமல் அதற்கு எதிர் பதத்தில் ‛அன் லார்ட்ஸ்’ என்று குறிப்பிட்டு திமுக எம்.பி., குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர், ‛உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படாத வரை, அவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் முற்பட்ட சாதியினராக இருந்தனர்.

சமூகநீதி மற்றும் மக்கள் நலன் நடவடிக்கைகளுக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்களை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்போம். கருணாநிதியின் முயற்சியால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தின் முதல் தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நீதிபதிகளாகினர்’ எனவும் கூறியுள்ளார்.

இப்படி பதிவிட்ட எம்பி, அந்த ட்விட்டுகளை எல்லாம் அழித்துவிட்டார். உடனே இதையும் ஒரு ட்வீட்டாக பதிவிட்டு, செந்தில்குமாரை சீண்டி கேள்வி எழுப்பி உள்ளார் நாராயணன்.. அதில், “‘முடிஞ்சா தொட்டு பார்’ என்று சவால் விட்டு விட்டு பதிவிட்ட ட்வீட்டை நீக்கி விட்டீர்களே? ஏன்? பயமா? சவாலில் தோற்று விட்டதாக ஒப்புக்கொள்கிறீர்களா? தலைக்கனம் தவிர்த்து பாராளுமன்ற உறுப்பினர் என்ற பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் டாக்டர் செந்தில்குமார் அவர்களே!” என்று பதிவிட்டுள்ளார். இதற்கும் திமுகவினர் கிளம்பி வந்து நாராயணன் ட்வீட்டுக்கு பதில் தந்து கொண்டிருக்கிறார்கள்.

Views: - 453

0

0