பலத்தை நிரூபித்த பாஜக : பரிதவிக்கும் எதிர்க்கட்சிகள்

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2022, 8:22 pm
BJP -updatenews360
Quick Share

பீகார், ஹரியானா, உத்தரபிரதேசம், ஒடிசா, தெலுங்கானா, மராட்டியம் ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஆம் ஆத்மி போன்ற பிரதான எதிர்க்கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றே சொல்லவேண்டும்.

எதிர்க்கட்சிகளை கலங்க வைத்த இடைத்தேர்தல் முடிவு

அதுமட்டுமின்றி இந்த இடைத் தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்த துடி துடிக்கும் திரிணாமுல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட், தேசிய மாநாட்டு கட்சி போன்றவற்றையும் கவலையில் மூழ்க வைத்து இருக்கிறது என்பதும் உண்மை.

இதற்குக் காரணம் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய பாஜக அதில் நான்கு இடங்களை கைப்பற்றி தனது பலத்தை நிரூபித்து இருப்பதுதான்.

மராட்டிய மாநிலம் அந்தேரி கிழக்கு, பீகாரில் மோகாமா, கோபால்கஞ்ச், ஹரியானாவின் ஆதம்பூர், ஒடிசாவில் தாம்நகர், உத்தரபிரதேச மாநிலம்
கோலா கோக்ரநாத், தெலுங்கானா முனுகோடே ஆகிய 7 சட்டப் பேரவை தொகுதிகளில் கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

பாஜக வெற்றி

பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் திடீரென வெளியேறி, ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரசுடன் கை கோர்த்துக்கொண்டு அங்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் மீண்டும் அரசு அமைத்துள்ள நிலையில், அந்த மாநிலத்தில் 2 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்கள் முக்கியத்துவம் பெற்றன.

அதேபோல மராட்டிய மாநிலத்திலும் சிவசேனா பிளவு பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவு மொத்தம் உள்ள 55 எம்எல்ஏக்களில் 40 பேர் ஆதரவைப் பெற்று பாஜகவுடன் கரம் கோர்த்து அங்கு புதிய அரசை அமைத்தது. முதலமைச்சராக இருந்த உத்தவ் தாக்கரே பதவி இழந்து, புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார். இதனால் அங்குள்ள அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து பாஜக விலகிக் கொண்டதால் சுவாரஸ்யம் இல்லாமல் போனது.

இந்த நிலையில்தான் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் கோபால்கஞ்ச், ஆதம்பூர் தாம்நகர், கோலா கோக்ரநாத் தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.

நவீன் பட்நாயக் அதிர்ச்சி

ஒடிசாவில் நவீன் பட் நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளத்தின் ஆட்சி கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அங்கு 2009-க்கு பிறகு இதுவரை நடந்த எந்த இடைத் தேர்தலிலும் பிஜு ஜனதாதளம் தோல்வியை சந்தித்ததே கிடையாது. ஆனால் முதல்முறையாக அக் கட்சி ஒரு இடைத்தேர்தலில் தோல்வி கண்டிருக்கிறது. தாம்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற ஓட்டுகள் வெறும் 3533தான். அதாவது ஒரு சுயேச்சை வாங்கும் அளவிற்கான ஓட்டுகளையே காங்கிரஸ் பெற்றுள்ளது.

அதேநேரம் அந்த மாநிலத்தில் 2024ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலும் சேர்ந்து நடக்க உள்ள நிலையில் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கும் இந்த முடிவு பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

ஷாக்கில் பீகார் அரசியல் தலைவர்கள்

அதைவிட சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் லாலு பிரசாத்தின் அணிக்கு, தாவி முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாருக்கும் இந்த இடைத்தேர்தல் முடிவு பெரும் சோதனையாக அமைந்திருக்கிறது.

lallu prasath yadav - updatenews360

லாலு பிரசாத்தின் மகனும் மாநிலத்தின் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ்,கோபால் கஞ்ச் தொகுதியில் பாஜகவை வீழ்த்துவேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். ஆளும் கட்சி கூட்டணியில் இருப்பதால் எல்லாவித அஸ்திரங்களையும் பாஜக வேட்பாளருக்கு எதிராக ஏவிக்கொண்டே இருந்தார். ஆனால் அதையும் மீறி, குசும் தேவி சுமார் 1800 ஓட்டுகள் வித்தியாசத்தில், ராஷ்ட்ரிய ஜனதாதளம் வேட்பாளரை வீழ்த்தி விட்டார்.

இடைத்தேர்தல் நடந்த இன்னொரு தொகுதியான மோகாமாவில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர், நீலம் தேவி வெற்றி பெற்றாலும் கூட பாஜகவை உதறித் தள்ளிய நிதிஷ் குமாருக்கு துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், இனி தனது கட்சியை மதிப்பாரா? என்ற சந்தேகம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் இதனால் எழுந்துள்ளது.

ஹரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதி காங்கிரசின் கோட்டை என்று சொல்வார்கள். ஆனால் அந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாவ்யா பிஷ்னோய், சுமார் 16 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்பிரகாசை தோற்கடித்து காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

காங்கிரசுக்கு பேரிடி

Soniya- updatenews360 (11)

அதைவிட மிக மோசமான தோல்வியை தெலுங்கானா மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ் சந்தித்துள்ளது. முனுகோடே தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளர் பிரபாகர் ரெட்டி, 9 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், பாஜக வேட்பாளர் ராஜகோபால் ரெட்டியை வென்றார். ஆனால் மாநிலத்தில் நாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் காங்கிரஸ் 23 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட் தொகையை பறிகொடுத்துள்ளது.

அந்த மாநிலத்தில் 2023ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும், பாஜகவுக்கும் இடையே ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி இருக்கும் என்ற நிலை தற்போது உறுதியாகி இருக்கிறது.

அதேபோல உத்தரப்பிரதேச மாநிலம் கோலா கோக்ரநாத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாமல், சமாஜ்வாடிக்கு தனது ஆதரவை தெரிவித்தது.
ஆனால் இந்த தொகுதியில், பாஜக வேட்பாளர் அமான் கிரி 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ் வாடி வேட்பாளர் வினய் திவாரியை வீழ்த்திவிட்டார்.

2024 பாஜக வசம்?

“விரைவில் இமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் 6 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு வலிமையான அணியை உருவாக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் எண்ணங்களை சுக்குநூறு ஆக்கிவிட்டது” என்று டெல்லியில் மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Modi - Updatenews360

“அதுவும் காங்கிரஸ் தலைமையில் அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் இந்த முடிவுகள் அமைந்துள்ளன. ஏனென்றால் 7 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் மூன்று இடங்களில் மட்டும் போட்டியிட்டது. ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு அந்த மூன்றிலும் படுதோல்வியையும் சந்தித்து இருக்கிறது. இரண்டு தொகுதிகளில் டெபாசிட் தொகையையும் காங்கிரஸ் இழந்துள்ளது. அதுவும் காங்கிரஸ் வலிமையாக இருப்பதாக கூறப்படும் மாநிலங்களிலேயே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரசை உலுக்கிய பாஜக

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை நடை பயணத்தை ராகுல் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையிலும், காங்கிரஸின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டு கட்சியின் செயல்பாடுகளை முடுக்கிவிட்டு இருப்பதாக கூறப்படும் நிலையிலும் இந்த முடிவுகள் காங்கிரசை ஒரு உலுக்கு உலுக்கியும் விட்டிருக்கிறது.

பீகார், உத்தரபிரதேசம், மராட்டிய மாநிலங்களில் காங்கிரஸ் நான்காவது இடத்தில்தான் உள்ளது. பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் சில தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்ற நிலைதான் இப்போதும் இருக்கிறது.

பிரதமர் கனவு அம்பேல்

Akilesh_UpdateNews360

இதுபோன்ற சூழ்நிலையில் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், கேரளா, சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரசுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கூறப்படுவதை மம்தா பானர்ஜி, ஸ்டாலின், சரத் பவார், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சந்திரசேகர ராவ் ஏற்பார்களா?. என்பது சந்தேகம்தான். அதனால், 18 எதிர்க்கட்சிகளும் ராகுல் தலைமை ஏற்றுக்கொண்டு அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வியே.

ஒரு சில மாநிலங்களில் கூட்டணியின் பிரதான கட்சிகள் ஒதுக்கும் மிகக் குறைவான தொகுதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நெருக்கடியும் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. 2024 தேர்தலில் தமிழகத்தில் திமுக 4 தொகுதிகளை ஒதுக்கினாலும் கூட அதையும் மிகுந்த மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்ளும் நிலையும் உருவாகலாம்.

குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பாஜக ஆட்சி அமைப்பதற்கு சாதகமாக அமையும் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன.

குழப்பத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்

CM Stalin - Updatenews360

இதனால் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை என்ன செய்வது என்ற குழப்ப நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற, சட்டப்பேரவை இடைத்தேர்தல், மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை வைத்து பாஜகதான் 2024 தேர்தலில் வெற்றி பெறும் என்று கூற இயலாது என எதிர்க்கட்சிகள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டாலும் கூட
இப்போதைய நிலையில் எல்லா எதிர்க்கட்சிகளையும் முந்திக்கொண்டு பாஜக,
பல மடங்கு வேகமாக முன்னேறி வருகிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதை தடுத்து நிறுத்துவது கடினம் என்பதை எதிர்க்கட்சிகளும் உணர்ந்துள்ளன.
அந்தப் பரிதவிப்பு அடுத்த ஆண்டு இறுதி வரை தொடரவே செய்யும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 442

0

0