பாஜக புது பிளான் : புதுச்சேரி காங்கிரஸ் அரசு ‘அவுட்’ !
27 January 2021, 8:45 pmபுதுச்சேரி மாநில அரசியல் களம் விறுவிறுப்பு அடையத் தொடங்கி இருக்கிறது. அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.
முதல்வர் நாராயணசாமி டெல்லி மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, மாநிலத்தில் தலை தூக்கும் காங்கிரஸ் தலைவர்களை ஓரம் கட்டும் போக்குதான் இப்பிரச்சனைக்கு பிரதான காரணம். அக்கட்சியில் அவர் வைப்பதுதான் சட்டம் என்றாகிவிட்டது. கட்சிக்குள் பெரும் கோஷ்டி பூசல், அதிகாரத்தில் கவர்னர் கிரண்பெடியுடன் மோதல் என்று கடந்த மூன்று நான்கு வருடங்களாகவே முதல்வர் நாராயணசாமி திக்கித் திணறியபடிதான் ஆட்சி நடத்தி வருகிறார்.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி போட்டியிட்டது.
இதில் காங்கிரஸ் 14 இடங்களிலும் திமுக மூன்று தொகுதிகளையும் கைப்பற்றின. இந்தத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தித்தான் காங்கிரஸ் தீவிர பிரச்சாரமே மேற்கொண்டது. தேர்தல் முடிந்த பிறகு அவரே முதல்வர் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் நாராயணசாமி உள்ளே புகுந்து ஆட்டத்தை கலைத்தார்.
எனக்கிருக்கும் ஆங்கில அறிவு நமச்சிவாயத்திற்கு சுத்தமாக கிடையாது, அவர் N.R. காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமியின் அண்ணன் மருமகன் என்று கூறி, காங்கிரஸ் தலைவர் சோனியாவை தாஜா செய்து முதல்வர் பதவியை கைப்பற்றினார். ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆதரவும் அவருக்கு கிடைத்தது. புதுவை அரசியலில் கிட்டத்தட்ட சூனிய நிலையில் இருந்த அவருக்கு முதல்வர் பதவி கிடைத்தது மீண்டும் புத்துயிர் பெற்றது போல் ஆகிப்போனது.
முதல்வராக நாராயணசாமி பதவியேற்ற நாளிலிருந்தே காங்கிரஸில் உட்கட்சி பூசல் தலைதூக்கத் தொடங்கியது.
தனது அமைச்சரவையில் நமச்சிவாயத்திற்கு இரண்டாமிடம் கொடுத்தார், நாராயணசாமி. அதனால் கட்சியில் சலசலப்பு சிறிது காலம் இல்லாமல் போனது. இதை சாக்காக பயன்படுத்திக்கொண்ட நாராயணசாமி, மாநில கவர்னர் கிரண் பெடியுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கினார்.
மாநிலத்தின் திட்டங்களுக்கு நிதி பெறுவதில் கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார் என்று கூறி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய சண்டையை இதுவரை அவர் கைவிடவில்லை. இதனால் மாநிலத்தில் எந்த திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை. இவ்வாறான சூழ்நிலையில்தான் இம்மாத தொடக்கத்தில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியது. ஆனால், இது தெரிந்தும் கூட நாராயணசாமி எந்த கவலையும் இல்லாமல் தொடர்ந்து கவர்னருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
அதேநேரம் கூட்டணிக் கட்சியான திமுகவிடம் இருந்தும் புதுவை மாநில காங்கிரசுக்கு நெருக்கடி வந்தது.
கட்சியிலும் பிரச்சனை, ஆட்சியை நடத்துவதிலும் மோதல் என்று இருபக்க நெருக்கடியையும் சமாளிக்க கம்பு சுற்றிக்கொண்டிருந்த நாராயணசாமிக்கு திமுகவில் இருந்தும் எதிர்ப்பு வலுத்தது.
கடந்த 18-ம் தேதி புதுச்சேரி திமுக நிர்வாகிகள் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நடக்கவிருக்கும் புதுவை சட்டப்பேரவை தேர்தலில் திமுகவும் 30 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றிபெறும் என்று தடாலடியாக அறிவிக்க நாராயணசாமி நிலைகுலைந்துதான் போனார்.
ஒரே நேரத்தில் மும்முனை தாக்குதல் நடத்தினால் யார் தான்
தாங்குவார்கள்? பின்னர் ஒரு வழியாக காங்கிரஸ் மேலிடத்திடம் பேசி திமுகவை நாராயணசாமி சரிக்கட்டி விட்டார். திமுகவுக்காக ரொம்பவே கூவிய ஜெகத்ரட்சகனை வலிக்காமல் கொட்டுவதுபோல் நடித்து கொஞ்சம் அடக்கி வைத்தார், திமுக தலைவர் ஸ்டாலின்.
ஆனால் இந்த நேரத்தில் டெல்லி பாஜக மேலிடம் மெதுவாக காய் நகர்த்த தொடங்கியது. அப்போது கவர்னர் கிரண்பெடி திடீர் என்று அமைதி காத்தார். அதற்கு என்ன காரணம் என்பதை நாராயணசாமி புரிந்துகொள்ளாமல் போனது, அவருடைய துரதிர்ஷ்டமே.
அப்பாடா! ஒருவழியாக பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்தது என்று அவர் நினைத்திருந்த நேரத்தில் அமைச்சர் பதவி வகித்த நமச்சிவாயத்தையும், ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தானையும் பாஜக ஒரே அமுக்காக அமுக்கி தங்கள் வசம் கொண்டு வந்துவிட்டது. இருவருமே சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு பாஜகவில் இணைய டெல்லிக்கு பறந்தனர்.
இவர்கள் இருவரும் நாராயணசாமி மீது வைத்த குற்றச்சாட்டு என்ன தெரியுமா? “கவர்னருடன் அனுசரித்து செல்லாமல் மாநிலத்தை முதல்வர் குட்டிச்சுவராக்கி விட்டார். இதனால் கடந்த நான்கரை ஆண்டுகளாக எந்த வளர்ச்சி பணிகளும் மாநிலத்தில் நடைபெறவில்லை. இதை நாங்கள் கட்சி மேலிடத்திற்கு கொண்டு சென்றும், அவர்கள் கண்டு கொள்ளவில்லை எனவேதான் இருவரும் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகினோம்” என்று காங்கிரசின் டெல்லி மேலிடம் மீது புகார்ப் பட்டியலை வாசித்தனர்.
தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக இப்போது நாராயணசாமி பரிதவிக்கிறார். மத்திய பாஜக அரசு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர துடிக்கிறது என்று கொந்தளிக்கிறார். இரண்டு பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 12 ஆக குறைந்து விட்டது. இதனால் மயிரிழையில்தான் அவருடைய ஆட்சி நீடிக்கிறது. இதுபோக இன்னும் 4 எம்எல்ஏக்கள் காங்கிரஸிலிருந்து விலகுவார்கள் என்ற தகவல் வேறு வெளியாகி இருக்கிறது.
அப்படி நடந்துவிட்டால் புதுவை காங்கிரஸ் ஆட்சியின் கதை முடிந்துவிடும். நான்கு எம்எல்ஏக்களை பாஜகவுக்குள் கொண்டுவரமுடியா விட்டாலும் கூட, நமச்சிவாயம் அளித்துள்ளதாக கூறப்படும் வாக்குறுதிப்படி இன்னும் இரண்டு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவை நோக்கி வருவார்கள் என்று தெரிகிறது.
சரி, மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடப்பதற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறதே அதற்குள் இவர்கள் ஏன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்கள், கட்சி தாவினார்கள் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். அங்கேதான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மூளை புதுச்சேரி அரசியலுக்குள் நுழைகிறது. பெரும்பான்மை பலத்தை காங்கிரஸ் அரசு இழந்துவிட்டால், அடுத்த நிமிடமே ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அது தள்ளப்படும். அப்போது மாநில கவர்னர் நினைத்தால் நாராயணசாமி அரசை தேர்தல் நடக்கும் வரை இடைக்கால அரசாக நீட்டிக்க வைக்க முடியும். ஆனால் நிச்சயம் கவர்னர் கிரண்பெடி அதற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்.
மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்து அரசு நிர்வாகத்தை தன்வசம் கட்டுப்படுத்தி வைத்திருப்பார்.
புதுவையில் பாஜக அரசு இருப்பது போன்ற சூழல் உருவாக்கப்படும்.
தேர்தலின்போது, நாராயணசாமி இடைக்கால முதல்வராக இருந்தால் அவர் காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெற வைப்பதற்குத்தான் முயற்சிப்பார். அதை முறியடிப்பதற்காகவே புதுவையில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய பாஜக அரசு, குறிப்பாக மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா விரும்புவார்.
வருகிற சட்டப்பேரவை தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ், அதிமுக ஆகியவற்றுடன் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடும். முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி அறிவிக்கப்படுவார். இதன்மூலம் பாஜக தலைமையிலான கூட்டணி அரசை புதுவையில் உருவாக்குவதுதான் பாஜகவின் பிளான்.
தற்போது காங்கிரசிலிருந்து வெளியேறி இருக்கும் நமச்சிவாயத்துக்கு புதுவையில் தனிச் செல்வாக்கு உள்ளது. கூடவே அவருடைய சின்ன மாமனாரான ரங்கசாமி ஏற்கனவே 2011 முதல் 2016 வரை புதுவை முதல்வராக இருந்தவர். இவர்கள் இருவர் மூலமும் புதுவையில் காங்கிரசுக்கு கல்தா கொடுத்த மாதிரியும் ஆகிவிடும். அங்கு பாஜக வலுவாக காலூன்ற வழியும் கிடைத்துவிடும்.
பாஜகவின் இந்த திட்டப்படி காங்கிரஸ் அரசு கவிழ்ந்து விட்டால் அடுத்த மூன்று மாதங்களும் புதுவை மக்களுக்கு கொண்டாட்டம்தான். இதுவரை நடக்காத வளர்ச்சி பணிகள் எல்லாம் இனி வேகம் பிடிக்கும். புதுவையில் தாமரை, வேகமாக மலரும் என்று பாஜக நம்புகிறது. அதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது என்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
எப்படி பார்த்தாலும் புதுவை காங்கிரஸ் அரசின் ஆயுசு இன்னும் சில நாட்கள்தான் என்பதை உறுதியாக கூற இயலும் என்றும் அவர்கள் ஆரூடம் கூறுகின்றனர்.
அப்படியென்றால் புதுவை காங்கிரஸ் அரசு விரைவில் அவுட் ஆகப் போவது நிச்சயம்.