ரஜினிகாந்த் ஒதுங்கியதால் அதிமுக பக்கமே ஒதுங்கும் பாஜக : கானல் நீரான பாமக, தேமுதிகவின் 3வது அணி கனவு!!

4 November 2020, 8:27 pm
PMK - dmdk - updatenews360
Quick Share

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் புகழ்ந்து பேசியுள்ளதும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இல்லை என்று கூறியிருப்பதும் அதிமுக அணியில் சேர்வதை பாஜக விரும்புவதையே காட்டுகிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இந்த முறை அதிக சட்டமன்ற இடங்களை ஒதுக்கும்படி அதிமுகவை வற்புறுத்தத் தயாராகி வருகின்றன. முதலில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி சேரலாம் என்றும், அல்லது அப்படி செய்திகளைக் கசியவிட்டு அதிமுகவை மிரட்டி தொகுதிப் பங்கீட்டில் அதிக இடங்களைப் பெறலாம் என்றும் திட்டமிட்டன.

pmk-aiadmk-alliance- updatenews360

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்களுக்கு அடுத்தபடியாக மிகவும் எதிர்பார்த்தவர்கள் பாஜகதான். ஒவ்வொரு முறையும் அவர் அரசியல் தொடர்பாக என்ன பேசினாலும் அதை முதலில் வரவேற்றது பாஜக தலைவர்கள்தான். அவர் வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்ததோடு இல்லாமல் அவர் வருவார் என்று ஆவலோடு காத்திருந்தனர். ரஜினி அரசியலுக்கு வராமல் இருந்தால்தான் அதிமுகவுடன் கூட்டணி என்று அதிமுகவை இரண்டாம் நிலையில் வைத்து மத்திய உள்துறை அமித்ஷா பேட்டியளித்தார்.

இதற்கிடையே ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்தும் அவர் அரசியல் கட்சி தொடங்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளதாகவும் ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் பரவியது. நடிகர் ரஜினிகாந்த் அந்தத் தகவல் சரிதான் என்று கூறியதுடன் தகவல் பரப்பியவருக்கு எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்கவில்லை. ரஜினிகாந்தின் தனிப்பட்ட மருத்துவத் தகவல்களை வெளியிட்ட நபர் மீது புகாரும் அளிக்கவில்லை. அதனால், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் வாய்ப்பு மங்கியது. மேலும், அந்தத் தகவல் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து ரசிகர்களுடன் கலந்தோலாசித்தபின் தெரிவிப்பேன் என்றும் கூறினார். அரசியல் கட்சி தொடங்குவது பற்றி என்று கூறாமல் அரசியல் நிலைப்பாடு குறித்து என்று அவர் கூறியதால் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை மட்டும் அவர் முடிவுசெய்வார் என்று தெரிகிறது.

rajini-updatenews360

இதைத்தொடர்ந்து ஏமாற்றம் அடைந்த பாஜகவின் ஆதரவாளர்கள் சிலர் தொடர்ந்து அவரின் முடிவை மாற்ற முயற்சி செய்துவருகிறது. ஆனாலும் பெரும்பாலான பாஜக தொண்டர்கள் ரஜினிகாந்தை நம்பிக்கொண்டிருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். பாமகவும், தேமுதிகவும், பாஜகவையும் இணைத்து மூன்றாவது அணி அமைக்கலாம். இல்லையென்றால், மூன்றாவது அணி என்று எப்படியாவது அதிமுகவை மிரட்டி அதிக இடங்களைப் பெறாலம் என்று திட்டமிட்டன.

ஆனால், பாஜக அந்தத் திட்டத்துக்கு உடன்படவில்லை என்பதை முருகன் வெளிப்படுத்தியுள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய முருகன் ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல ஆட்சியை வழங்கி வருகிறார். எளிமையானவராகவும், மக்கள் எளிதில் அணுகக்கூடிய முதலமைச்சராகவும் எடப்பாடி பழனிசாமி உள்ளார். கொரோனா பேரிடரைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் 3-ம் அணி அமைய வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்தார்.

L Murugan - Updatenews360

பாஜக திமுகவை கடுமையாக எதிர்த்துவரும் சூழலில் மூன்றாவது அணியும் வேண்டாம் என்று முருகன் கூறுவதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே பாஜக விரும்புகிறது என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதிமுகவிடம் அதிக இடங்களைப் பெறலாம் என்பதற்காக பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பாஜகவையும் மூன்றாவது அணி அமைக்கத் தூண்டும் நேரத்தில் முருகனின் கருத்து அந்த இரு கட்சிகளின் முயற்சியை பாஜக ஏற்கவில்லை என்பதையே காட்டுகிறது. அதிமுகவுடன் உடன்பாடு ஏற்படாவிட்டால் அந்தக்கட்சிகள் தனித்துவிடப்படும் நிலைதான் உருவாகும் என்று கணிக்கப்படுகிறது.

ஆனால், கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதால் பாஜகவுடன் கூட்டணி பற்றி அதிமுக இன்னும் முடிவு எடுக்கவில்லை என்பது தெரிகிறது. ஆனாலும் பாஜகவினர் மத்தியில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்ற கருத்தே மேலோங்கியுள்ளது. பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகள்தான் அதிமுக கூட்டணியில் இருக்கலாம் என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி, முனுசாமி தெரிவித்துவிட்டார். பழனிசாமியை கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு பாஜகவின் வலிமைக்கு ஏற்ற எண்ணிக்கையில் தொகுதிப் பங்கீட்டுக்கு சம்மதித்தால் பாஜகவின் விருப்பம் நிறைவேற வாய்ப்புகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Views: - 32

0

0