திசை மாறிய தேர்தல் களம் : கொரோனா பரவலுக்கு மோடியை சாடும் மம்தா; பதிலடி தந்த பாஜக!!

19 April 2021, 8:36 pm
modi - mamata - updatenews360
Quick Share

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷன் 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. 294 உறுப்பினர்களுடன் நாட்டின் 2-வது மிகப்பெரிய சட்டப்பேரவையை கொண்டுள்ள மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அங்கு ஏற்கனவே 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. 6-வது கட்ட தேர்தல் 43 தொகுதிகளில் வருகிற 22-ம் தேதியும், 46 தொகுதிகளுக்கு 7-வது கட்டமாக 26-ம் தேதியும், இறுதிக்கட்டமாக 35 தொகுதிகளுக்கு 29-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

Mamata_Banerjee_UpdateNews360

இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- காங்கிரஸ் கூட்டணி என மூன்று பிரதான அணிகள் மோதுகின்றன.
கேரள அரசியலில் எலியும் பூனையுமாக உள்ள மார்க்சிஸ்டுகளும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது இந்த மாநிலம் இதுவரை காணாத விசித்திரம்.

மேற்கு வங்காளத்திலும் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டி இருப்பதால்தான் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் உள்ள
42 தொகுதிகளில் 18-ஐ பாஜக கைப்பற்றியதால் தற்போது அங்கு ஆட்சியை பிடித்து விட முடியும் என்ற நம்பிக்கையில் முழுவீச்சில் அக்கட்சி இறங்கி உள்ளது.

மேற்கு வங்காள தேர்தலுக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் ஒரு விதத்தில் மிகப் பெரியதொரு ஒற்றுமை உண்டு. இங்கே எதிர்க்கட்சியாக உள்ள திமுகவுக்கு அரசியல் ஆலோசகராக உள்ள பிரசாந்த் கிஷோர்தான், மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வருகிறார்.

எனினும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர், ரொம்பவே வரிந்து கட்டிக்கொண்டு தனது ஐபேக் ஊழியர்கள் மூலம் தீவிர களப்பணி ஆற்றி வருகிறார்.

தமிழகத்தில் திமுகவிற்கு கூட பிரசாந்த் கிஷோர் இவ்வளவு மெனக்கெட்டு இருப்பாரா? என்பது சந்தேகம்தான். மேற்கு வங்காளத்தில் பாஜக 100 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டால் எனது தொழிலையே விட்டு விடுகிறேன் என்று பாஜக தலைமைக்கு அவர்
சவால் வேறும் விடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. இதனால் கடுப்படைந்த, பிரசாந்த் கிஷோர் இரட்டை இலக்கத்தை பாஜக தாண்டாது என்கிற சவாலை மீண்டும் ஒரு முறை விடுத்திருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க, தேர்தல் பிரச்சாரத்துக்காக காரில் சென்றபோது தன்னை இடது காலில் யாரோ தாக்கி விட்டதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். இந்த சம்பவத்திற்கு பாஜகதான் காரணம் என்பதுபோல் பிரதமர் மோடியையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கடுமையாக தாக்கிப் பேச தொடங்கினார்.

காலில் கட்டுப் போட்டுக் கொண்டு சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே அவர் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் வாக்காளர்களிடம் அனுதாப ஓட்டுகளை அறுவடை செய்ய முடியும் என்பது பிரசாந்த் கிஷோர் போட்டுக்கொடுத்த கணக்கு என்கிறார்கள். ஆனால் இந்தப் பிரச்சாரம் எதிர்பார்த்த அளவிற்கு மம்தாவுக்கு பொதுமக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த நேரத்தில்தான் மேற்குவங்காளத்தில் கொரோனா வேகமாக பரவ ஆரம்பித்தது.
அந்த மாநிலத்தில் நாளொன்றுக்கு 8500 பேர் வரை கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மேற்கு வங்காள தேர்தல் பிரச்சாரத்தையே ரத்து செய்துவிட்டார். மக்கள் அடர்த்தியாக வாழும் கொல்கத்தாவில் தான் பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதில்லை என்று மம்தா பானர்ஜியும் அறிவித்திருக்கிறார்.

Modi - mamata - updatenews360

கொரோனா பரவலுக்கு பிரதமர் மோடியும் அமித்ஷாவும்தான் காரணம் என்பது போல், வெளியிலிருந்து பிரச்சாரத்திற்கு வந்தவர்கள் கொரோனாவை மாநிலத்தில் பரப்பி விட்டு போய் விட்டார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டையும் சில நாட்களுக்கு முன் மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

இங்கேதான், அவர் தேர்தல் களத்தை தன் விருப்பம் போல் திசை மாற்றிவிட்டார்.
“பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் துணை ராணுவ வீரர்களை முற்றுகையிடுங்கள்” என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார். இதைத்தொடர்ந்து அவர் பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் கமிஷன் 24 மணி நேரத் தடையும் விதித்தது. இப்படி அவர் எடுக்கும் முடிவுகள், திருப்பி அவரையே தாக்குவதால் இப்போது கொரோனா பரவலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்.

அவர் கூறும்போது ” நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு பிரதமர் மோடியே காரணம். சொந்த நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் நேரத்தில் தனது சொந்த செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக மோடி வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் எந்த திட்டமிடலும் இல்லை. நிர்வாகத்திறமையும் கிடையாது. அவராக திட்டமிட்டு எதையும் செய்ய மாட்டார் மற்றவர்களையும் செய்ய விடமாட்டார். எனவே கொரோனா 2-வது அலை பரவலுக்கு பொறுப்பேற்று அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று ஆவேசப் பட்டார்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகளின் முழு ஒத்துழைப்பும் அவசியம். அதை எந்த அளவிற்கு மேற்கு வங்காள அரசு செய்தது என்று கேள்வியும் எழுகிறது.

மோடியுடன் மோதல் போக்கு ஏற்பட்ட பிறகு கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசின் எந்த உத்தரவுகளையும் மம்தா பானர்ஜி மதித்து நடந்ததே இல்லை. பிறகு எப்படி அவர் மோடியை குறை கூற முடியும்? என்ற கேள்வியும் எழுகிறது.

piyush_goyal_updatenews360

இதுபற்றி மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், “கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பு. அதை அவர்கள் தான் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

மம்தாவின் குரலை தமிழ்நாட்டிலும் சில அரசியல்வாதிகள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த, எவ்வாறு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது பற்றி மம்தா பானர்ஜியோ, மோடியை பதவி விலகக் கோரும் தமிழக அரசியல்வாதிகளோ இதுவரை பொதுமக்களை வலியுறுத்தியதாக தெரியவில்லை.

மத்திய, மாநில அரசுகள் கொரோனா 2-ம் அலை பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கி தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியபோது அதை பொது மக்கள் பின்பற்றும்படி இப்போது மோடிக்கு எதிராக குரல் கொடுக்கும் எந்தவொரு தலைவரும் பெயரளவிற்கு கூட அதை வரவேற்கவில்லை. மாறாக வட மாநில காங்கிரஸ் தலைவர்களில் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதை கிண்டலும், கேலியும் செய்தனர்.

இதுபற்றி தமிழக பாஜக நிர்வாகிகள் கூறும்போது, “பிரதமர் மோடி மீது தொடர்ந்து வெறுப்புணர்வு பிரச்சாரம்தான் தமிழகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி தினமும் மோடியை திட்டித் தீர்க்கவில்லை என்றால் இவர்களுக்கு தூக்கமே வராது,போலிருக்கிறது. அதனால்தான் பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று சம்பந்தமில்லாமல் உளறுகிறார்கள். மம்தா பானர்ஜிதான் ஓட்டுக்காக இப்படி உளறுகிறார் என்றால், இங்கே இவர்களும் ஏன் அலறுகிறார்கள் என்று தெரியவில்லை” என்று கொந்தளித்தனர்.

Views: - 105

0

0