பிரதமரின் பாதுகாப்பை கேலி செய்வதா…? ஜோதிமணி வாய் ஜாலத்துக்கு பூட்டு… பதிலடி கொடுத்த பாஜக..!!

Author: Babu Lakshmanan
8 January 2022, 6:07 pm
Quick Share

கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவ்வப்போது நடப்பு அரசியல் குறித்து ஏதாவது ஏடாகூடமாக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். இப்படி போட்டு தாக்குவதில் சொந்தக் கட்சி, கூட்டணி கட்சி என்ற பாகுபாடெல்லாம் அவருக்கு கிடையாது.

எம்பி ஜோதிமணி

கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தமிழக காங்கிரசில் பணம் வாங்கிக் கொண்டு கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கிறார்கள் என்று அதிரடியாக கருத்து தெரிவித்து கட்சியின் மூத்த தலைவர்களிடம் செமையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

அதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரிக்கும், அவருக்கும் அப்போது ஏற்பட்ட பகைமை இதுவரை தீர்ந்தபாடில்லை.

இந்த நிலையில்தான் கடந்த நவம்பர் மாதம் கரூர் மாவட்ட ஆட்சியர் மீது ஒரு குண்டை தூக்கிப் போட்டார், ஜோதிமணி. எந்தவொரு திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் இரண்டு சதவீத கமிஷன் வாங்குகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.

இதற்காக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு நாட்கள் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பினார். அது திமுக ஆட்சி மீது நேரடியாக ஊழல் புகார் கூறுவது போலவும், உள்ளூர் அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டிப் பார்ப்பது போலவும் இருந்தது.

கொளுத்திப்போட்ட டுவிட்!!

இதனால் திமுக- காங்கிரஸ் இடையே மனக் கசப்பையும் அப்போது அவர் ஏற்படுத்தினார்.

இந்த நிலையில்தான் அவர் அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில், பூடகமாக பதிவிட்ட ஒரு கருத்து தற்போது தமிழக பாஜகவை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

ஜோதிமணி தனது ட்விட்டர் பதிவில்,” வந்த பிறகு எதிர் நின்று திரும்பிப் போக வைப்பது ஒரு விதம். வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொரு விதம். தமிழகம் இரண்டாவது பெருமையை தட்டிச் செல்கிறது அந்த பயம் இருக்கட்டும்!” என்று கூறியிருக்கிறார்.

அவர், எதற்காக இப்படியொரு கருத்தைச் சொன்னார் என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு தெரிந்த விஷயம்.

கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி சுமார் 43 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்வதற்காக பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகேயுள்ள உசைனிவாலா என்னும் இடத்திற்கு காரில் சென்றார். அப்போது சாலையில் வாகனங்களை குறுக்கே நிறுத்தி திடீர் மறியலில் ஈடுபட்ட போராட்டக் காரர்களால் பிரதமரின் வாகன அணிவகுப்பு தடுத்து நிறுத்தப்பட்டது.

இதனால் சாலையின் மேம்பாலத்தில் பிரதமர் மோடி தனது காருக்குள்ளேயே 20 நிமிடங்கள் அமர்ந்து இருக்கும்படியான நெருக்கடி நிலை ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் மோடி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு, டெல்லி திரும்ப வேண்டிய கட்டாயமும் உருவானது. சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பிரதமரை தாக்க
திட்டமிட்டிருந்தனர் என்ற பகீர் தகவலும் பின்னர் தெரிய வந்தது.

பிரதமர் பயணிக்கும் பாதை மாநில முதலமைச்சருக்கும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரியும் என்கிற நிலையில், அவர் சாலை மார்க்கமாக வருவது எப்படி போராட்டக்காரர்களுக்கு தெரியவந்தது? பிரதமரின் வாகன அணிவகுப்பை தடுக்க முயன்றவர்கள் மீது பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அவர்களை அப்புறப்படுத்தாமல் பிரதமரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக ஏன் வேடிக்கை பார்த்தது? என்ற கேள்விகளெல்லாம் எழுந்தது. இதுதொடர்பாக பஞ்சாப் அரசும், மத்திய அரசும் தனித்தனியாக விசாரணை நடத்த உத்தரவிட்டும் உள்ளன.

இந்த சம்பவத்தையும் 2018-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் ராணுவ தளவாட கண்காட்சியை மாமல்லபுரத்தில் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, கோ பேக் மோடி என்று கோஷம் எழுப்பி, கருப்பு பலூன்களை பறக்கவிட்டு திமுகவினரும் அதன் கூட்டணி கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை நினைவுபடுத்தும் விதமாகவே ஜோதிமணி தனது கருத்தை பதிவிட்டு இதுபோல் அகம் மகிழ்ந்திருந்தார்.

யாராவது இதற்கு பதில் அளித்து காட்டமாக சாடினால் நீங்களாக பிரதமர் பற்றி நான் சொன்னதாக நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல என்பதுபோல முன் ஜாக்கிரதையுடன் ஜோதிமணி இப்படி மொட்டையாக கருத்து கூறி இருக்கிறார் என்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது.

ஆனாலும் மாநில பாஜக தலைவர்கள், ஜோதிமணியை விடவில்லை. வறுத்து எடுத்து விட்டார்கள். இதனால் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்ட கதையாக அவருடைய நிலைமை மாறிப் போனதுதான் பரிதாபம்!

பொன்னாரின் பதிலடி

முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தலைவர்களில் ஒருவருமான பொன் ராதாகிருஷ்ணன், “பிரதமர் வரும்போது முறையாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யாத பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு பிரதமரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் பிரதமரை மட்டுமல்ல, அவர்களின் முதலமைச்சரையும் சேர்த்துக் தீர்த்து கட்டுவார்கள். அது பஞ்சாப் முதலமைச்சராகவும் இருக்கலாம். தமிழக முதலமைச்சராகவும் இருக்கலாம்” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

Madurai Pon Radhakrishnan Byte - updatenews360

வாஜ்பாய் காட்டிய அதிரடி

தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “வந்த பிறகு எதிர் நின்று உயிரை விடுப்பது ஒரு விதம், வரும் முன் காத்து எதிரிகளை பந்தாடுவது இன்னொரு விதம். முதல் விதத்தில் தமிழகம் சிறுமையை பெற்றது. இரண்டாவது விதத்தில் யாருக்கு பெருமை என்பதை காலம் பதில் சொல்லும்.” என்று ஜோதிமணிக்கு அவருடைய பாணியிலேயே பூடகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

இன்னொரு பதிவில், “முன்னாள் பிரதமராக இருந்த ஒருவரை இழந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமராக இருந்த ஒருவரை பறிகொடுத்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். காங்கிரஸ் ஏன் அவர்களை இழந்தது என்பதை இந்த பதிவிலேயே உணர முடிகிறது. பாவம் அந்த தலைவர்கள்” என்று சூடும் வைத்திருக்கிறார்.

மேலும் நாராயணன் திருப்பதி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “2001-ம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்துக்குள் புகுந்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சோனியாகாந்தி பத்திரமாக இருக்கிறாரா? முதலில் அவருக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று சொன்னார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற குற்றவாளிகளில் ஒருவருக்கு ஆதரவாக பாஜக மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி ஆஜரானதால் அப்போதே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் பயங்கரவாதிகளால்தான் படுகொலை செய்யப்பட்டார் என்பதை காங்கிரஸ் மறந்து விடக்கூடாது.

எனவே பிரதமர் மோடியை தனிமனிதனாக பார்ப்பது சரியல்ல. அவர் ஒரு நாட்டின் தலைவர். அரசியலுக்கும் அப்பாற்பட்டவர். எனவே நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவர் என்றுதான் பார்க்கவேண்டும். அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது பற்றி கவலைப்பட்டு இருக்க வேண்டும். மாறாக இதில் தனி மனித விருப்பு, வெறுப்புகளை காண்பித்து மகிழ்ச்சி கொள்வது பெருமைக்குரிய விஷயம் அல்ல” என்றும் காங்கிரசை சாடினார்.

பக்குவப்பட வேண்டும்

அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, “பிரதமர் மோடியின் உயிரைப் பற்றிய விஷயத்தில் காங்கிரஸ் கொஞ்சமும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை. மோடியை பஞ்சாபில் போராட்டக்காரர்கள் நுழைய விடாமல் தடுத்து விட்டார்களே என்கிற மகிழ்ச்சிதான் அவர்களுடைய பேச்சிலும், செயல்பாட்டிலும் தெரிகிறது.

ஒரு நாட்டின் பிரதமர் உயிரை அவர்கள் மிகச் சாதாரணமாக கருதுவது போலவும் தெரிகிறது. என்ன செய்தும் மோடியை வீழ்த்த முடியவில்லையே?…என்ற கோபமும் இப்படி அவர்களை கருத்து தெரிவிக்க வைக்கிறது. அதனால்தான் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் பிரதமரை கேலியும், கிண்டலும் செய்கிறார்கள். இது நல்ல அணுகுமுறை கிடையாது.

தனி மனித துவேஷம் மூலம் மோடியை வீழ்த்த நினைப்பது சரியல்ல. அரசியல் ரீதியாக அவருடன் மோதுவதுதான் சிறந்தது.

அண்மையில் நமது தாய்நாட்டின் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தபோது, இறந்தவர் நாட்டைக் காத்த ராணுவ தளபதி என்று கூட பார்க்காமல் அந்தத் துயரத்தை தங்களது ட்விட்டர் பதிவுகள் மூலம் தேச விரோத சக்திகள் சிலர் கொண்டாடி மகிழ்ந்ததற்கும், ஜோதிமணி போன்ற ஒரு தேசிய கட்சியின் மக்களவை எம்பி தற்போது தெரிவித்திருக்கும் கருத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றே தோன்றுகிறது.
ஒரு நாட்டின் பிரதமரை மறைமுகமாக எச்சரித்து மகிழ்ச்சி கொள்வது மிகவும் கண்ணியக் குறைவானது.

அதுவும் நாட்டின் இரு பெரும் தலைவர்களை பயங்கரவாதத்திற்கு பறிகொடுத்த ஒரு தேசிய கட்சியின் நாடாளுமன்ற எம்பி இதுபோல் கருத்து தெரிவித்திருப்பது துரதிஷ்டவசமானது.

mp jothimani - updatenews360

விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவராக ஜோதிமணி நியமிக்கப்படலாம் என்கிற பேச்சு பரவலாக அடிபடுகிறது. ஒரு மாநிலத்தில், கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ள ஒருவர் இதுபோல் கருத்து கூறுவது சரியல்ல. எனவே அவர் தன்னை பக்குவப்பட்ட அரசியல்வாதிபோல் கருத்து சொல்ல பழகிக்கொள்ள வேண்டும்”என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் அறிவுறுத்தினர்.

Views: - 357

0

0