‘ஒரு ஓட்டு பாஜக’ இருக்கட்டும்… ஒருவரை அடித்தே கொன்ற திமுக எம்பி பற்றி பேசாதது ஏன்..? ஊடகங்கள் மீது பாஜக பாய்ச்சல்..!!!

Author: Babu Lakshmanan
13 October 2021, 1:12 pm
narayanan thiruppathi- updatenews360
Quick Share

சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக ஒரு ஓட்டு வாங்கியதை பூதாகரமாக்கிய ஊடகங்களை பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 2வது நாளாக இன்றும் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் திமுக கூட்டணி 130க்கும் மேற்பட்ட மாவட்ட கவுன்சிலர் பதவிகளிலும், 1,000க்கும் மேற்பட்ட ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. எதிர்கட்சியான அதிமுக 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளிலும், 200க்கும் மேற்பட்ட ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பாமக 44 இடங்களை கைப்பற்றியுள்ளது.

மேலும், ஒரு சில இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், கோவை குருடம்பாளையம் வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க ஆதரவு வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்றது தமிழக அரசியலில் பேசு பொருளானது. அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி வெளியிடப்பட்டது. இதனால், சமூக வலைதளங்களில் இது தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. இதனை விமர்சித்தும், ஆதரவாகவும் சமூக கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, பாஜக வேட்பாளர் குறித்த விமர்சனத்திற்கு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நேற்று டுவிட்டரில் விளக்கம் அளித்திருந்தார். அதில், கோவை குருடம்பாளையம் வார்டு உறுப்பினராக போட்டியிட்டவர் பாஜக நிர்வாகியாக இருந்திருந்தாலும்கூட, சுயேட்சை என்றுதான் குறிப்பிட்டுள்ளார் எனக் கூறி, அவரது வேட்புமனுவை பகிர்ந்திருந்தார்.

இதற்கு, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பதிலளித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதாவது, கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சுயேட்சையாகவே போட்டியிடச் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, பாஜக – திமுகவைச் சேர்ந்தவர்கள் டுவிட்டரில் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பாஜக ஒரு ஓட்டு வாங்கியதை பூதாகரமாக்கிய ஊடகங்களை பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதாவது, “ஒருவரை அடித்தே கொலை செய்த திமுக எம்பி’ என செய்தி வெளியிட துணிவில்லாத ஊடகங்கள், சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளரை ‘பாஜக வேட்பாளர்’ என செய்தி வெளியிட்டு அகமகிழ்ந்தது தான் நடுநிலையோ? ஊடக அறமோ?,” எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தக் கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சியினர் கமெண்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 610

1

0