புதிய பாதையில் பயணிக்கும் எல். முருகன் : பெரியார் எதிர்ப்பாளர்களை ஓரம் கட்டியது பாஜக தேசியத் தலைமை!!

28 September 2020, 9:35 pm
bjp murugan - updatenews360
Quick Share

சென்னை : திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியாரையும், அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்ச்சித்து வந்த பாஜக அவரை வாழ்த்துகிறோம் என்று புதிய பரிணாமம் எடுத்து புதிய பாதையில் பயணம் தொடங்கியுள்ளது. பெரியாரை அவமதித்துப் பேசியும், அவரின் சிலையை அகற்றுவோம் என்று பேசிவந்த எச். ராஜா போன்ற தலைவர்களை ஓரம்கட்டியுள்ள பாஜக, தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த எல்.முருகனைத் தனது முகமாக மாற்றியுள்ளது.

பெரியார் தேர்தலில் நிற்காதபோதும் எந்தப் பதவியிலும் இல்லாதபோதும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தலைவராக மக்களால் போற்றப்படுகிறார். தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா தான் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த அமைச்சரவையே பெரியாருக்குக் காணிக்கை என்று அறிவித்தார். அதற்குப் பின் 50 ஆண்டுகளுக்கு மேலாக பெரியாரின் வழிவந்த திராவிடக் கட்சிகளே தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து வருகின்றன. தமிழ்நாட்டின் அனைத்து தலைவர்களுக்கும் பெரியாரே தலைவராக இருந்துவருகிறார். தமிழ்நாட்டில் எல்லாக்கட்சிகளும் பெரியாரைப் போற்றியே வந்தன.

ஆனால் பாஜக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் பாஜக தலைவர்களாக இருக்கும் எச்.ராஜா. கே.டி.ராகவன் போன்ற தலைவர்களும் நடிகர் எஸ்.வி.சேகர், செய்தித் தொடர்பாளர் நாராயணன் போன்றவர்களும், பெரியாரையும் அவரது கொள்கைகளையும் இழிவாகப் பேசி வந்தனர். அவரது சிலையையே அகற்றுவோம் என்று எச்.ராஜா பேசினார். பெரியாரை ஈ.வெ.ரா என்றே சில தலைவர்கள் அழைத்தனர். பெரியார் சிலை பல இடங்களில் காவி சாயம் பூசப்பட்டும் உடைக்கப்பட்டும் அவமரியாதை செய்யப்பட்டு வந்தது. இது போன்ற செயல்களை பாஜக தலைவர்கள் கண்டிக்க மறுத்தனர்.

Periyar Statue Insult - Updatenews360

பெரியார் குறித்து பாஜக தலைவர்களின் பேச்சும், நடவடிக்கையும் தமிழ்நாட்டு மக்களிடம் கடும் வெறுப்பை ஏற்படுத்தின. பாஜக தனியாகத் தேர்தலில் போட்டியிட்டால் நோட்டவுக்குக் கீழே வாக்குகள் பெற்றது. அதிமுக போன்ற வலிமையான கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை.

இந்நிலையில், புதிதாக பாஜகவின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற ஜெ.பி. நட்டா பாஜகவின் அணுகுமுறையை மாற்றியுள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைத் சேர்ந்த எல்.முருகனை பாஜகவின் தமிழ்நாடு தலைவராக அவர் தேர்வு செய்தார். பாஜக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கட்சியென்ற கருத்தமைப்பை தேசிய பாஜக தலைவர்கள் உருவாக்க நினைத்தாலும், தமிழ்நாட்டில் பெரியாருக்கு எதிரான பேச்சுகள், அவர்களின் திட்டத்துக்கு எதிராக அமைந்தன. பெரியாருக்கு எதிராகப் பேசிவரும் எச், ராஜா, நாராயணன், எஸ்.வி. சேகர், கே.டி. நாராயணன் போன்றவர்கள் மேல்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பாஜகவுக்கும் மேல்தட்டு சமூகத்தினரின் கட்சி முத்திரை விழுவதை பாஜக தலைவர்கள் உணர்ந்ததால், பெரியாருக்கு எதிராகப் பேசிவரும் யாருக்கும் தேசிய அளவில் பதவி தரவில்லை.

மிகவும் ஆணவத்துடன் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தமது ஜாதி நலன்களையே முக்கியமாகக் கருதிப் பேசிவந்த இந்தத் தலைவர்களால் பாஜகவுக்கு எந்த லாபமும் இல்லை. இவர்களுக்கு மக்கள் ஆதரவு சிறிதும் இல்லை என்பதால் தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜக தனது பாதையை மாற்றியுள்ளது. வேறு தலைவர்கள் யாருக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லையென்பதால் முருகன் மட்டுமே கட்சியின் முகமாகப் பார்க்கப்படுகிறார்.

L Murugan - Updatenews360

பெரியார் பிறந்தநாள் அன்று பேசிய முருகன், “பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர். அவரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை” என்றார். இந்த நிலையில், திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்புக்கு உள்ளான விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியார் சிலை அவமதிப்புக்கு பாஜக கண்டனம் தெரிவிப்பது இதுவே முதல் முறையாகும்.

ஆனாலும் பாஜகவின் புதிய பாதையை விமர்சித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமிழ் மண்ணை ஏமாற்றி பாஜக காலூன்ற முடியாது என்று தெரிவித்துள்ளார். பொய்க்கால் குதிரைகளைக் கண்டு தமிழக இளைஞர்கள் ஏமாற மாட்டார்கள் என்கிறார் அவர். சட்ட மன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே இருக்கும் நிலையில் பாஜகவின் புதிய உத்தி தமிழ்நாட்டு மக்களிடம் ஆதரவைப் பெற்றுத்தருமா என்பது போகப்போகத்தான் தெரியும்.