ரஜினியை அரசியலில் இறங்க வற்புறுத்தும் பாஜக : கொந்தளிப்பில் ரஜினி ரசிகர்கள்!!

11 November 2020, 8:00 am
Rajini - updatenews360
Quick Share

சென்னை: உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வருவதற்கு ரஜினிகாந்த் மறுக்கும் நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக அவரை அரசியலில் இறக்க தீவிரமான முயற்சி நடைபெறுவதால், அவர் மீது உண்மையான அக்கறைகொண்ட ரசிகர்களும், ஆதரவாளர்களும் அதிர்ச்சியிலும், கொந்தளிப்பிலும் இருக்கின்றனர். ரஜினியின் உடல்நிலை நேரடி அரசியலுக்கு இறங்குவதற்கு இடம் தராது என்ற சூழலில் பாஜக ஆதரவாளரான குருமூர்த்தி ரஜினியை சந்தித்து பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக களம் இறங்கும்படி அவருக்கு மன உளைச்சல் கொடுப்பதாக பொதுமக்களும் கருதுகின்றனர்.

கடுமையான நெருக்கடி கொடுத்து ரஜினியை அரசியலில் இறக்கிவிட்டாலோ அல்லது பாஜகவுக்கு வாய்ஸ் கொடுக்க வைத்தாலோ அவரது ரசிகர்களில் பெரும்பாலோனோர் அவர்களுக்குப் பிடித்த கட்சிக்கு ஓட்டுப்போடும் சூழல்தான் உருவாகும் என்று கருதப்படுகிறது.

rajini updatenews360

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்களைவிட மிகவும் தீவிரமாக எதிர்பார்த்தவர்கள் பாஜ கட்சியினர்தான். ஒவ்வொரு முறையும் அவர் அரசியல் தொடர்பாக என்ன பேசினாலும் அதை முதலில் வரவேற்றது பாஜக தலைவர்கள்தான். அவர் வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்ததோடு. இல்லாமல் அவர் வருவார் என்று ஆவலோடு காத்திருந்தனர். ரஜினி அரசியலுக்கு வராமல் இருந்தால்தான் அதிமுகவுடன் கூட்டணி என்று அதிமுகவை இரண்டாம் நிலையில் வைத்து மத்திய உள்துறை அமித்ஷா பேட்டியளித்தார்.

இதற்கிடையே ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்தும் அவர் அரசியல் கட்சி தொடங்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளதாகவும் ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் பரவியது. அந்தத் தகவல் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து ரசிகர்களுடன் கலந்தோலாசித்தபின் தெரிவிப்பேன் என்றும் கூறினார். அரசியல் கட்சி தொடங்குவது பற்றி என்று கூறாமல் அரசியல் நிலைப்பாடு குறித்து என்று அவர் கூறியதால் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை மட்டும் அவர் முடிவுசெய்வார் என்று தெரிகிறது.

Rajini-BJP - updatenews360

இதனால், ரஜினியை நம்பி தமிழ்நாட்டில் பாஜகவை எப்படியாவது காலூன்ற வைக்கலாம் என்று கனவுகண்ட குருமூர்த்தி போன்ற பாஜக ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் பாஜகவின் கதி என்னவாகுமோ என்ற கலக்கத்தில் அவர்கள் இருக்கின்றனர். இதனால், ரஜினியின் உடல்நிலையைவிட பாஜகவின் நலனே முக்கியம் என்று கருதும் குருமூர்த்தி ரஜினியை சந்தித்துப்பேசினார். உடல்நலனைப் பற்றி கவலைப்படாமல் அரசியலில் இறங்கவேண்டும் என்று ரஜினியை வற்புறுத்தியதாகத் தெரிகிறது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் இருக்கின்றனர்.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் பாஜக கைகாட்டும் ஒருவரே முதல்வராவார் என்றும் தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளரை பாஜக மத்திய தலைமை முடிவு செய்யும் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் கூறிவருகிறார். அடுத்தமுறை தமிழக ஆட்சியில் பாஜகவும் பங்குபெறும் என்றும் அவர் கூறிவருகிறார். தமிழகத்தில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சி ஏற்கனவே கூறிவிட்டதால் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகியுள்ளது.

ஒருவேளை ரஜினியை வற்புறுத்தி பாஜகவின் முதல்வர் வேட்பாளராக களம் இறக்க முயன்றாலும் எப்படியாவது அவர் நழுவிவிடவே வாய்ப்புகள் அதிகம். பாஜக ஆட்சிக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுத்தாலும் வருமான வரித்துறையைக் கையில் வைத்துள்ள மத்திய அரசின் நெருக்கடி காரணமாகவே அவர் பேசுகிறார் என்பதை ரஜினி ரசிகர்கள் எளிதில் உணர்ந்துகொள்வார்கள் என்று கருதப்படுகிறது. இதனால், பாஜகவுக்கு எந்த தேர்தல் ஆதாயமும் கிடைக்க வாய்ப்பில்லை என்றே அவரது ரசிகர்களும் பொதுமக்களும் நினைக்கின்றனர்.

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதால் பாஜகவுடன் கூட்டணி பற்றி அதிமுக இன்னும் முடிவு எடுக்கவில்லை என்பது தெரிகிறது. பழனிசாமியை முதல்வர் ஏற்றுக்கொள்ளும் கட்சிகள்தான் அதிமுக கூட்டணியில் இருக்கலாம் என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி, முனுசாமி ஏற்கனவே கூறியுள்ளார்.

Views: - 20

0

0