லஞ்சம் வாங்கிய அதிகாரியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிபிஐ அதிகாரிகள்…!!! லஞ்சம் கொடுத்தவர்களுக்கும் வேட்டு…!!

11 June 2021, 3:23 pm
madurai arrest - updatenews360
Quick Share

சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களிடம் சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய மதுரை மண்டல மத்திய பொதுப்பணித்துறை அதிகாரி உள்பட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

சென்னை மற்றும் மதுரையைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் சட்டவிரோதமாக பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக மதுரை மண்டல மத்திய பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர் பாஸ்கர் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்தன.

இது தொடர்பான விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடங்களிலும், அதிகாரிகளிடமும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையில் மதுரையைச் சேர்ந்த பிரம்மா டெவெலப்பர்ஸ் மற்றும் சென்னையைச் சேர்ந்த எஸ்கே எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்த நிறுவனங்கள் செலுத்திய சேவை வரிகளை திரும்பப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, நிர்வாகப் பொறியாளர் பாஸ்கர், பிரம்மா டெவலெப்பர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் ராஜா மற்றும் எஸ்கே எலக்ட்ரிக்கல்ஸ் ஒப்பந்ததாரர் நாராயணன் ஆகிய 3 பேரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட பாஸ்கரிடம் ரூ.70 ஆயிரமும், அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.85 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், 3பேரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர்.

Views: - 90

1

0

Leave a Reply