மக்கள் மீது பாயப்போகும் வரிகள்… ! வெள்ளை அறிக்கை கிளப்பும் பீதி…? தேர்தல் வாக்குறுதிகளை திசைதிருப்பும் நாடகமா..?

Author: Babu Lakshmanan
9 August 2021, 9:50 pm
PTR - white paper - updatenews360
Quick Share

கடந்த 10 வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை திமுக அரசு வெளியிட்டுள்ளது. 120 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார்.

முக்கிய துறைகளில் தமிழகத்தின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இதில் கூறப்பட்டிருக்கிறது.

பட்ஜெட்டின் வெள்ளை அறிக்கை

PTR - updatenews360

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது கேட்ட தகவல்களை ஆளுங்கட்சியாக வரும்போது நாங்களே வெளியிடுகிறோம். தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றவும் வெளிப்படைத்தன்மையுடன் அரசு செயல்படுகிறது என்பதை தெளிவுபடுத்தவும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ளை அறிக்கையை ஆய்வு செய்து இதை தயாரித்தோம்.

 • 2001-ல் அதிமுக வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் அமைச்சர் பொன்னையன் பெயர் இல்லை. ஆனால் இதில் என்னுடைய பெயர் இருக்கிறது. அதற்கு காரணம் இதில் தவறு ஏதும் இருந்தால் அதற்கு முழு பொறுப்பு நான்தான்.
 • திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2 மாதங்கள் கொரோனா 2-வது அலை தடுப்பு பணியில் போய்விட்டது.
 • கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் வருமானம் சரிந்துள்ளது. 2020-21ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை 61 ஆயிரத்து 320 கோடி ரூபாயாக உள்ளது.
 • இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறையில் இவ்வளவு சரிவு ஏற்பட்டதில்லை.
 • தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் மீதான கடன் சுமை 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாயாக உள்ளது.
 • 2011-16-ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 17 ஆயிரம் கோடி. 2016 -21 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடி.
 • அந்தக் கால கட்டத்தில் வாங்கிய 3 லட்சம் கோடி ரூபாய் கடனில் 50 சதவீதம் இந்தப் பற்றாக்குறையை சமாளிக்கச் செலவிடப்பட்டது.
 • அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம், அரசாங்க அலுவலகங்களை நிர்வகிப்பது, மின் கட்டணம் கட்டுவது ஆகியவற்றுக்கே கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்.
 • தமிழக அரசின் தற்போதைய கடன் 5,70,189 கோடி ரூபாயாக உள்ளது. தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 5.24 லட்சம் கோடி. தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால், வட்டி அதிகரித்து விட்டது.
EB - Updatenews360
 • தமிழகத்தின் பொதுத்துறை நிறுவனங்களான தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் 90% மற்றும் போக்குவரத்து கழகங்கள் 5% கடன் பெற அதிமுக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
 • 4 வழிகளில் மாநில அரசுக்கு வருமானம் வருகிறது. மாநில வரி, வரியில்லா வருவாய், மத்திய அரசின் வரிபங்கீடு, திட்ட மானியம் ஆகியவையே வருமானத்திற்கான வழிகள்.
 • 2008–09-ம் ஆண்டில் 13.35 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2020–21-ல் 8.7 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4 சதவீதமாக சரிவு.
 • வருமானவரி, ஜிஎஸ்டி, பெட்ரோல் வரி என நேரடி வரியை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
 • ஜீரோ வரியால் ஏழை மக்கள் பயன் அடைவது இல்லை. பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் மட்டுமே பயனடைகிறார்கள். வரியில்லா பட்ஜெட் என்பது வளர்ந்த நாடுகள் மட்டுமே சாத்தியம்.
  சரியான வரியை சரியான நபரிடம் வசூலித்து வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை கொண்டு செல்லவேண்டும்.
 • கடந்த ஆட்சியில் சரியான நேரத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் 2577 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு இழந்துள்ளது.
 • தமிழகத்தில் கடந்த 15 வருடங்களாக மோட்டார் வாகன வரி உயர்த்தப்படவில்லை. இது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
 • பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை. வரியை உயர்த்தாததால் பணக்காரர்களுக்கு பலன்.
 • தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.20,033 கோடியுள்ளது.
 • அதிமுக ஆட்சியில் சொத்து வரி முறையாக வசூலிக்கப்படவில்லை,  உயர்த்தப்படவும் இல்லை.
 • தமிழ்நாடு அரசு ஒரு நாள் வட்டியாக 87.31 கோடி ரூபாயை செலுத்துகிறது.
 • உள்ளாட்சி அமைப்புகள் மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்கள் 1,743 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன.
 • மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மின்துறைக்கு தர வேண்டிய தொகை ரூ.1200 கோடி.
 • போக்குவரத்துத்துறை மின்சாரத்துறை, மின்சார பகிர்மான கழகத்தால் மட்டும் அரசாங்கத்தில் 2 லட்சம் கோடி கடன்.
 • அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகள் 1கி.மீ ஓடினால் 59 ரூபாய் 57 காசு நஷ்டம் ஏற்படுகிறது.
 • ஒரு லிட்டர் பெட்ரோல் டீசல் மீதான வரி ரூபாய் 12 லிருந்து 32 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
 • ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீதான வரியில் ரூ.32-ல் , ரூ.31.50 மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. 50 பைசா மட்டுமே அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுக்கிறது.
 • மின்சாரத்துறையில் ஒரு யூனிட் வாங்கினால் 2 ரூபாய் 36 காசுகள் இழப்பு. மின்சாரத்துறையில் மட்டும் அரசுக்கு 1.34 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது.

நிதிநிலைமை எப்போது சரியாகும் என்பதை கூற முடியாது. 5 வருடத்தில் சரி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை திசைத்திருப்ப இந்த அறிக்கை வெளியிடப் படவில்லை” என்று குறிப்பிட்டார்.

நிதிநிலை சீர்கேடு என்பது தவறு

தமிழக நிதியமைச்சர், இப்படிக் கூறிய நிலையில் முன்னாள் முதலமைச்சரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, “2011-ம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் இருந்தது. எல்லா மாநிலங்களும் கடன் வாங்கித்தான் இயங்கி வருகின்றன. கடன் சுமை அதிகரித்து இருந்தபோதும் அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில் நிதிநிலை சீர்கேடு என்பது தவறான தகவல்.

eps - updatenews360

அதிமுக ஆட்சியில் இருந்த கடன்கள் திமுக ஆட்சியிலும் இருந்தவைதான்.100 நாட்களில் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறிய திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்வதற்கு என்ன தீர்வு கண்டுள்ளது? தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இப்படி கூறுகிறார்கள்” என்று ஆவேசப்பட்டார்.

வரிகளை உயர்த்த திட்டம்

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பதிவில், “திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாததற்கான காரணம் தேடும் வெற்று அறிக்கையாகவே இன்றைய வெள்ளை அறிக்கை உள்ளது. திமுகவின் பட்ஜெட்டுக்கு முன்பான வெள்ளை அறிக்கை வாண வேடிக்கையாக இருக்கும் என பெரிது எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் புஷ்வாணமாகி விட்டது.

ptr - krishnasamy - updatenews360

வரி விதிப்பு இல்லாத ஜீரோ பட்ஜெட் இருக்க முடியாது என்று சொல்வதன் மூலம், 13-ஆம் தேதி பட்ஜெட்டில் பெரிய அளவிற்கு வரி விதிப்புகள் உண்டு என்பதை சொல்லாமல் சொல்வதாகவே உள்ளது” என்று கேலி செய்து இருக்கிறார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுமா திமுக?

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை பற்றி, அரசியல் ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, “தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்த விஷயம் தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்தான். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை,கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், உள்ளூர் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற ஏராளாமான வாக்குறுதிகளை திமுக ஏன் அளித்தது என்று தெரியவில்லை.

திமுக அரசு வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கையை படித்தால் தேர்தலின்போது அக்கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமா? என்ற சந்தேகம்தான் வருகிறது.

மேலும் நிதியமைச்சர் கூறுவதைப் பார்த்தால் மின்கட்டணம், பேருந்து கட்டணம், சொத்து வரி, மோட்டார் வாகன வரி போன்றவை விரைவில் உயர்த்தப்படலாம் என்ற பீதியும் மக்களுக்கு ஏற்படுகிறது.

சரிந்துள்ள நிதி நிலையை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சீரமைக்க முடியுமா? என்ற சந்தேகமும் அமைச்சர் வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கையில் தென்படுகிறது.

மின் கட்டணம், பேருந்து கட்டணம், சொத்து வரி போன்றவற்றை அதிமுக அரசு சிறிதளவு உயர்த்தியபோதும் கூட அதை எதிர்த்து திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தின. இதனால் கட்டணத்தை குறைக்க வேண்டிய நெருக்கடிக்கு முந்தைய அதிமுக அரசு தள்ளப்பட்டது. இதுவும் தமிழக அரசுக்கு வருவாய் குறைந்துதற்கான முக்கிய காரணம்.

தடை போட்ட திமுக

அதிமுக ஆட்சியின்போது தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் வழக்கு மேல் வழக்கு போட்டு சுப்ரீம் கோர்ட் வரை இழுத்தடித்தது திமுகதான். இப்போது சரியான நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் அரசுக்கு இழப்பு என்று திமுகவே சொல்வது வேடிக்கை.

Stalin Olympic- Updatenews360

அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம், அரசாங்க அலுவலகங்களை நிர்வகிப்பது, மின் கட்டணம் கட்டுவது ஆகியவற்றுக்கே கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்.
என்றும் நிதியமைச்சர் கூறுகிறார்.

முந்தைய திமுக அரசுதான் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தது. இந்த தேர்தலில் கூட பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதியும் அளித்தது. அரசின் மொத்த வருவாயில் 47 சதவீதம் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கே போய் விடுகிறது. இப்படி இருந்தால் நிலைமை கைமீறித்தான் போகும்”
என்று ஆதங்கப்பட்டனர்.

Views: - 643

0

0