அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை… “ஏறு ஏறு ஏறுநெஞ்சில் வலிமைகொண்டு ஏறு” : நடிகர் விஜய்க்கு சீமான் ஆதரவு

15 July 2021, 12:04 pm
seeman - vijay 1- updatenews360
Quick Share

சென்னை : சொகுசு கார் இறக்குமதி வரி தொடர்பாக நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் அபராதம் விதித்த நிலையில், அவருக்கு இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்த்‌ திரைத்துறையின்‌ முன்னணி நடிகர்களுள்‌ ஒருவராக விளங்கும்‌ நடிகர் விஜய்‌ அவர்கள்‌, 2012 ஆம்‌ ஆண்டு வெளிநாட்டிலிருந்து வாங்கிய மகிழுந்திற்குச்‌ செலுத்த வேண்டிய நுழைவு வரியிலிருந்து விலக்குக்‌ கேட்டு நீதிமன்றத்தில்‌ வழக்குத்‌ தொடுத்ததற்காக அவரை வசைபாடுவதும்‌, பழிவாங்கும்‌ போக்கோடு அவதூறு பரப்புவதும்‌ ஏற்புடையதல்ல, நீதிமன்றத்தால்‌ வழங்கப்பட்டத்‌ தீர்ப்பு என்பது தம்பி விஜய்வரிவிலக்குக்காகத்‌ தொடர்ந்த வழக்கின்‌ தீர்ப்புதானே தவிர, வரி ஏய்ப்புச்‌ செய்துவிட்டார்‌ என்பதல்ல, ஆனால்‌, அத்தீர்ப்பு வந்தது முதல்‌ தம்பி விஜய்‌ வரி ஏய்ப்பு செய்துவிட்டதைப்‌ போல ஒரு போலியான கருத்துருவாக்கம்‌ செய்து, வலதுசாரிக்கும்பல்‌ அவரைக்‌ குறிவைத்துத்‌ தாக்க முற்படுவது கண்டனத்திற்குரியது.

தம்பி விஜய்‌ தொடர்ந்து முறையாக வரிசெலுத்தி வரும்‌ நிலையிலும்‌, அரசியல்‌ காரணங்களுக்காக அவரை அச்சுறுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, கடந்தாண்டு அவருடைய வீட்டில்‌ வருமானவரிச்‌ சோதனை நடத்தப்பட்டது. அவர்‌ வரிஏய்ப்புச்‌ செய்ததாக எவ்வித ஆவணங்களும்‌ அப்போது வெளியிடப்படவில்லை. அவர்‌ மீது எந்தவொரு வழக்கும்‌ தொடரப்படவில்லை. அவரை அச்சுறுத்தி மிரட்டிப்‌ பணிய வைக்கவும்‌, இனி எவரும்‌ திரைத்துறையிலிருந்து மோடி அரசுக்குக்கெதிராகக்‌ குரலெடுக்கக்கூடாது என்பதற்காகவுமே வருமானவரிச்‌ சோதனை நடத்தப்பட்டது என்பதை நாடறியும்‌.

அச்சோதனைகளின்போது விஜய்‌ மீது எவ்விதக்‌ குற்றச்சாட்டும்‌ முன்வைக்கப்பட முடியவில்லை என்றபோதிலும்‌, பாஜகவின்‌ ஆட்சி முறையைத்‌ திரைப்படங்களில்‌ சாடியதற்காகவே‌, காழ்ப்புணர்ச்சி கொண்டு தொடர்ச்சியாக அவரை நோக்கிப்‌ பாய்வது, படு அவருக்கெதிராகப்‌ பொய்யுரைகளைக்‌ கட்டவிழ்த்துவிடுவது முழுக்க முழுக்க அரசியல்‌ வன்மத்தின்‌ வெளிப்பாடேயாகும்‌.

தான்‌ வாங்கிய மகிழுந்திற்குச்‌ செலுத்த வேண்டிய நுழைவு வரி மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்ததால்‌, அதற்கு விலக்கு அளிக்க வேண்டி சட்டத்தின்படி அவா்‌ நீதிமன்றத்தின்‌ உதவியை நாடியது எவ்வகையிலும்‌ தவறாகாது. தனக்கான நீதியைப்‌ பெறுவதற்காக நீதிமன்றத்தை நாட இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும்‌ உரிமையுண்டு என்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள தனிமனித உரிமையாகும்‌. அதைத்தான்‌ தம்பி விஜயும்‌ பயன்படுத்தியிருக்கிறார்‌. 9 ஆண்டுக்கு முன்பாகத்‌ தொடுத்த வழக்கின்‌ கீழ்‌ தற்போது வந்துள்ள நீதிமன்றத்தீர்ப்பை அவர்‌ ஏற்கலாம்‌ அல்லது மேல்முறையீடு செய்யலாம்‌. அதற்கான உரிமையும்‌ அவருக்கு உண்டு.

கடந்த காலங்களில்‌ மட்டைப்பந்து வீராகளுக்கு இவ்வாறு வரிவிலக்குச்சலுகை அளிக்கப்பட்ட நிகழ்வுகளும்‌ இந்நாட்டில்‌ நடந்துள்ளது. எனவே, நுழைவு வரிக்கு விலக்குக்கேட்பதும்‌, அளிக்கப்படுவதும்‌ புதிதல்ல. பொதுவாக அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும்‌ எவரும்‌ நீதிமன்றத்தை நாடமாட்டார்கள்‌ என்ற அடிப்படை உண்மையைக்கூட உணராமல்‌, வழக்குத்‌ தொடர்ந்த ஒரே காரணத்திற்காக, தம்பி விஜயை குற்றவாளிபோல சித்தரித்து அவர்‌ மீது அவதூறுகளை அள்ளிவீசுவது எவ்வகையிலும்‌ நியாயமில்லை. இந்த நாட்டில்‌ வரி வரியாக இருந்தால்‌ தவறில்லை. அது மக்களைச்‌ சுரண்டுவதற்குப்‌ பயன்படுத்தப்படும்‌ அரசின்‌ கருவியாக மாறிவிட்டது.

ஒரு பொருளை வாங்கும்‌ விற்பனை விலைக்கு இணையாக அரசாங்கத்திற்குச்‌ செலுத்தவேண்டிய வரி இருப்பதும்‌, அது அனைத்துத்தரப்பு மக்களையும்‌ கசக்கிப்‌ பிழிவதும்தான்‌ தவறு என்கிறோம்‌. இது ஏதோ விஜய்‌ என்ற ஒரு மனிதருக்கான பிரச்சனை அல்ல. இந்த நாட்டில்‌ வாழும்‌ ஒவ்வொரு தனிமனிதனும்‌, ஒவ்வொரு நாளும்‌ எதிர்கொள்ளும்‌ பிரச்சினையாக வரிவிதிப்பு முறைகள்‌ இருக்கிறது. அதனால்தான்‌, இந்நாட்டின்‌ வரிக்கொள்கையும்‌, விதிக்கப்படும்‌ முறையுமே சரியானதல்ல; அது யாவற்றையுமே ஒட்டுமொத்தமாய்‌ மாற்றி, ஏழை மக்களைச்‌ சுரண்டாத வகையில்‌ அமைக்க வேண்டும்‌ என்கிறோம்‌. குறிப்பாக, சரக்கு மற்றும்‌ சேவை வரி நடைமுறைக்கு வந்த பிறகு, வியாபாரிகள்‌, தொழில்துறையினர்‌ முதல்‌ எளிய மனிதர்கள்‌ வரை அனைத்துத்தரப்பு மக்களும்‌ மிகக்கடுமையாகப்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌ என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்‌.

நாமக்கல்லை சோந்த இரண்டு வயது அன்பு மகள்‌ மித்ரா முதுகெலும்பு தசை நார்‌ சிதைவு எனும்‌ அரிய நோயால்‌ பாதிக்கப்பட்டு, நோயைக்‌ குணப்படுத்த மரபணு சிகிச்சை அளிக்கத்‌ தேவைப்படும்‌ ரூ.16 கோடி ரூபாயை உலகெங்கும்‌ வாழும்‌ தொண்டுள்ளம்‌ கொண்டவர்கள்‌ உதவியுடன்‌ மித்ராவின்‌ பெற்றோர்‌ அரும்பாடுபட்டுத்‌ திரட்டியபோதும்‌, அம்மருந்துகளைப்‌ பெறுவதற்கான மத்திய அரசின்‌ இறக்குமதி வரி, சரக்கு மற்றும்‌ சேவை வரி ஆகியவற்றிற்காக மேலும்‌ 6 கோடி ரூபாய்த்‌ தேவைப்படும்‌ நிலையில்‌ அதற்கு விலக்குக்‌ கேட்டுப்‌ பெறும்‌ கொடுஞ்சூழல்‌ இந்த நாட்டில தற்போது நிலவுவதை மறுக்க முடியுமா?

உயிர்காக்கும்‌ மருந்துகளுக்குக்கூட 16 கோடிக்கு 6 கோடி ரூபாய்‌ வரி என்றால்‌ இந்த நாடு எதை நோக்கிச்‌ செல்லுகிறது? விஜய்‌ வரிவிலக்குச்‌ சலுகை கேட்டதற்காகப்‌ பொங்கித்‌ தீர்க்கும்‌ பெருமக்கள்‌ பல ஆயிரம்‌ கோடியிலான மக்கள்‌ வரிப்பணத்தை வாரிச்‌ சுருட்டிய லலித்‌ மோடியும்‌, விஜய்‌ மல்லையாவும்‌ நாட்டைவிட்டுத்‌ தப்பும்போது என்ன செய்தார்கள்‌? அவர்களைத்‌ தப்பிக்கவிட்டு வேடிக்கைப்‌ பார்த்த மோடி அரசு மீது என்ன விமாசனத்தை வைத்திட்டார்கள்‌? இன்றுவரை பல இலட்சம்‌ கோடியிலான மக்களின்‌ வரிப்பணம்‌, வாராக்கடனாக மாற்றப்பட்டு ஒட்டுமொத்தமாகத்‌ தள்ளுபடி செய்யப்பட்டு அம்பானி, அதானி போன்ற தனிப்பெரு முதலாளிகளுக்குப்‌ பெரும்‌ சலுகை வழங்கப்படுகிறதே அதற்கெல்லாம்‌ இவர்கள்‌ எவரும்‌ கேள்விகேட்கவில்லையே ஏன்‌?

அதனையெல்லாம்‌ கண்டும்‌ காணாது போல இருந்து அச்செயல்பாடுகளை மறைமுகமாக ஆதரித்துவிட்டு இப்போது விஜயின்‌ வரிவிலக்குச்‌ சலுகை கோரும்‌ வழக்குக்கு எதிராகப்‌ பொங்கித்‌ தீர்ப்பது எவ்வகையில்‌ நியாயம்‌ என்பது புரியவில்லை.

“வேலோடு நின்றான்‌ இடுவென்றது போலும்‌ கோலோடு நின்றான்‌ இரவு”

என வள்ளுவப்பெருந்தகை கூறியதுபோல, வரி என்பது மக்களிடமிருந்து பறிக்கும்‌ வழிப்பறிக்கொள்ளையாய்‌ இருக்கக்கூடாது என்பதைக்‌ கூறிக்‌ கண்டிக்கிறோம்‌. நேர்முக வரியைவிட மறைமுக வரி அதிமாக இருக்கும்‌. மிகப்பெரும்‌ மோசடித்தனத்தைக்‌ கடுமையாக எதிர்க்கிறோம்‌. வரி போன்ற அரசின்‌ கொள்கை முடிவுகளே மக்களுக்கெதிராக இருக்கும்போது அதனைக்‌ கூறினாலும்‌, அரசாங்கம்‌ செவிமடுக்காதபோது ஒரு குடிமகனுக்கு நீதிமன்றத்தை நாடுவதைத்‌ தவிர வேறு வழி என்ன இருக்கிறது? ஆகவே, சட்டம்‌ தனக்கு வழங்கியுள்ள வாய்ப்பின்படி முறையாகவே நீதிமன்றத்தை நாடினார்‌ தம்பி விஜய்‌, அதில்‌ பிழையேதுமில்லை.

இதனைத்‌ தெளிவாக அறிந்திருந்தும்‌, கடந்த காலங்களில்‌ மத்தியில்‌ ஆளும்‌ பாஜக அரசின்‌ ஆட்சிமுறைகளைச்‌ சாடி, திரைப்படங்களில்‌ தம்பி விஜய்‌ கூறிய கருத்துக்களுக்காக, தற்போதைய சூழலைப்‌ பயன்படுத்தி, அவரைப்‌ பழிவாங்கத்‌ துடிப்பது என்பது மிகவும்‌ மலிவான அரசியலாகும்‌. அதனை முறியடிக்கவும்‌ அவதூறு பரப்புரைகளையும்‌, மறைமுக அழுத்தங்களையும்‌ எதிர்கொண்டு மீண்டுவரவும்‌ அவருக்குத்‌ துணைநிற்பேன்‌.

“ஏறு ஏறு ஏறு நெஞ்சில்‌ வலிமைகொண்டு ஏறு” என்று தன்‌ படத்தில்‌ வரும்‌ பாடல்‌ வரிகள்‌ போல, தம்பி விஜய்‌ மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வர வேண்டுமென எனது விருப்பத்தைத்‌ தெரிவிக்கிறேன்‌, எனக் கூறியுள்ளார்.

Views: - 123

0

1

Leave a Reply