அதிமுக ஆதரவை எதிர்பார்த்திருக்கும் மத்திய அரசு : முக்கிய கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரும்பியதால் திருப்பம்!!

21 September 2020, 7:50 pm
bjp-aiadmk - updatenews360
Quick Share

சென்னை: பாஜகவின் தயவில்தான் அதிமுக அரசு நடக்கிறது என்று எதிர்க்கட்சிகளும் சில பாஜகவினரும் கூறிவரும் நிலையில், தேசிய அளவில் அதிமுக ஆதரவு பாஜகவுக்குத் தேவைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாநிலங்களவையில் இதுவரை மத்திய அரசுக்கு ஆதரவளித்து வந்த சிரோன்மணி அகாலிதளம் டிஆர்எஸ், பிஜேடி ஆகிய கட்சிகள் பாஜகவுக்கு எதிராகத் திரும்பிய நிலையில், முக்கிய சட்டங்களை நிறைவேற்ற அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு நரேந்திர மோடி அரசுக்கு மிகவும் முக்கியமானதாகிறது.

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்தது. மத்திய பாஜக அரசுடன் சுமூக உறவைக் கடைபிடிக்கும், அதிமுக அரசு தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் முக்கிய பிரச்சினைகளில் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தும் வருகிறது. மத்திய பாஜக தலைவர்கள் யாரும் அதிமுகவை விமர்சனம் செய்யாத சூழலில், எச். ராஜா போன்ற தமிழ்நாடு மாநில பாஜக தலைவர்கள் சிலர் அதிமுகவுக்கு எதிராகக் கடுமையான கருத்துகளைக் கூறிவந்தனர். அவர்களின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் உரிய முறையில் பதில் அளித்தும் வந்தனர்.

மத்திய அரசின் தயவின் அதிமுக அரசு இருப்பதாக தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறிவரும் நிலையில் சில பாஜக தலைவர்களும் தங்கள் தயவில்தான் அதிமுக அரசு இருப்பதுபோல் பேசி வந்தனர். இருந்தாலும், மத்திய அரசின் சரியான திட்டங்களை அதிமுக தொடர்ந்து ஆதரித்து வந்தது.

admk upatenews360

மக்களவையில் பாஜகவுக்கு கூட்டணிக்கட்சிகளின் ஆதரவு இல்லாமலே அறுதிப்பெரும்பான்மை இருக்கிறது. ஆனால், 245 உறுப்பினர்கள் இருக்கும் மாநிலங்களவையில் பாஜகவுக்கு 86 உறுப்பினர்களே இருக்கின்றனர். நியமன உறுப்பினர்கள் 12 பேர் சட்ட மசோதாக்களில் வாக்களிக்க முடியாது என்ற நிலையில், அகாலிதளம் போன்ற கூட்டணிக்கட்சிகள் ஆதரவுடனும் பிஜூ ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற நடுநிலையான கட்சிகளின் ஆதரவுடனும் மாநிலங்களவையில் பாஜக சட்டங்களை இயற்றிவருகிறது.

ஆனால், வேளாண்மை தொடர்பான சட்டங்களில் கடுமையான கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அகாலிதளம் கட்சி அரசிலிருந்து வெளியேறி உள்ளது. மாநிலங்களவையிலும் மத்திய அரசை ஆதரிக்க மறுத்துவிட்டது. பிஜூ ஜனதா தளத்துக்கும் 9 உறுப்பினர்களும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு 7 உறுப்பினர்களுகளும் இருக்கின்றனர். இவர்களும் வேளாண்மை தொடர்பான மூன்று சட்டங்களுக்கும் ஆதரவு தர மறுத்துவிட்டனர்.

நேற்று, மாநிலங்களவையில் குரல் வாக்கு அடிப்படையில் இரண்டு நிறைவேறியுள்ளது. உறுப்பினர்கள் சட்டங்களின் மீது வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அப்படி வாக்கெடுப்பு நடந்திருந்தால் அதிமுக ஆதரித்தால் மட்டுந்தான் அச்சட்டங்களை பாஜக அரசால் நிறைவேற்றி இருக்க முடியும்.

தற்போது பாஜகவுக்கு எதிராக பிஜூ ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட 117 உறுப்பினர்கள் அணி திரண்டுள்ளனர். சுயேச்சைகள் சிறிய கட்சிகள் சேர்த்து பாஜகவுக்கு ஆதரவாக 109 பேர் உள்ளனர். இதில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும் வேளாண்மை தொடர்பான சட்டங்களுக்கு மட்டுமே ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர். அதிமுகவுக்கு இருக்கும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களே மாநிலங்களவையில் மத்திய அரசின் வெற்றிதோல்வியைத் தீர்மானிப்பார்கள்.

இனிவரும் காலங்களிலும் முக்கிய சட்டங்களுக்கும் சட்டத்திருந்தங்களுக்கும் அதிமுக ஆதரவு தேவை என்ற நிலை மத்திய அரசுக்கு உருவாகியுள்ளது. அதிமுகவுடன் நல்லுறவைத் தொடர வேண்டிய தேவை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. இன்று, பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்த பாஜக மாநிலத் தலைவர் முருகனும் இரு கட்சிகளுக்கும் நல்ல உறவு தொடர்கிறது என்று அரசியல் நிலைமை உணர்ந்து பேசியுள்ளார். கட்சியின் மக்கள் தலைவரான ஜெ.ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் கழிந்த சூழலில், அகில இந்திய அளவில் அதிமுகவின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்து வருவதுடன், மாநில அரசியலிலும் கட்சி அசைக்க முடியாத சக்தியாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Views: - 11

0

0