மத்திய அமைச்சராக காய்நகர்த்தும் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா : அதிமுகவுக்கு பதவி கொடுத்து கூட்டணியை உறுதி செய்ய மத்திய பாஜக யோசனை!!

17 October 2020, 9:01 pm
Narendra Modi with Edappadi K. Palaniswami

New Delhi: Prime Minister, Narendra Modi with Chief Minister of Tamil Nadu, Edappadi K. Palaniswami during their meeting New Delhi on Monday. PTI Photo(PTI2_27_2017_000203B)

Quick Share

சென்னை : மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைத் சேர்ந்த யாரும் இல்லாத நிலையில், மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், பாஜக முன்னாள் தேசியத் தலைவர் எச்.ராஜாவும் கடும் போட்டியில் இறங்கியுள்ளனர். ஆனால், கூட்டணிக் கட்சிகள் யாருக்கும் தற்போது கேபினட்டில் இடம் இல்லை என்பதால், அதிமுக போன்ற வலுவான கூட்டணிக்கட்சிகளுக்கே தரலாமே என்ற சிந்தனையில் இருப்பதாக ஏனைய பாஜக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்றார். 2014-ஆம் ஆண்டும் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தபோது அவர் மத்திய அமைச்சரானார். ஆனால், 2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரிடம் தோல்வி அடைந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட வசந்தகுமார் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்துக்குள் கன்னியாகுமரியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Parliment 01 updatenews360

மத்திய அமைச்சரவையில் இருந்து அகாலி தளம் வெளியேறி இருக்கிறது. மற்றொரு மத்திய அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் இறந்துவிட்டார். இந்த நிலையில், மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது. எனவே, மீண்டும் மத்திய அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் காய் நகர்த்தி வருகிறார்.

கன்னியாகுமரிக்குத் தேர்தல் இன்னும் நான்கு மாதங்களில் நடைபெறும் என்ற நிலையில், அதிமுக தலைமையில்தான் பாஜக இருக்கிறது என்று ராதாகிருஷ்ணன் திடீரென்று அறிவித்தார். யாருடன் கூட்டணி என்பது 2021 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் போதுதான் முடிவு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில், அவர் முதல்வரையும் சந்தித்துப் பேசினார். கன்னியாகுமரி இடைத்தேர்தலில் அவர் போட்டியிட்டால் அதிமுகவின் ஆதரவை அவர் கோரியிருப்பதாக பாஜக நிர்வாகிகள் கூறுகிறார்கள். கன்னியாகுமரியில் நின்று வெற்றிபெற்றால் தமிழத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே பாஜக உறுப்பினர் என்ற முறையில் தன்னை அமைச்சராக்குவார்கள் என்று ராதாகிருஷ்ணன் எண்ணுகிறார்.

இந்நிலையில், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் பாஜக சார்பில் நிற்க வாய்ப்பு கேட்டுள்ளார்கள். குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, முக்கிய அதிகாரியாகப் பணியாற்றிய ஜெகதீச பாண்டியனுக்கு அந்தத் தொகுதியை ஒதுக்கலாமா என்று பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஜெகதீச பாண்டியன் ஒரு கிறிஸ்துவர் என்பதால் அவரை நிறுத்தி காங்கிரசுக்குச் செல்லும் கிறிஸ்துவர்களில் ஓட்டுகளை வாங்கலாம் என்று பாஜக கணக்கிடுகிறது. ஆனால், ராதாகிருஷ்ணன் ஆதரவு இல்லாமல் இன்னொரு பாஜக வேட்பாளர் வெற்றிபெறமுடியாது. அவரை சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயம் தலைமைக்கு இருக்கிறது. அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் வேறு மாநிலங்களில் இருந்து தன்னை மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய அமைச்சராக்க வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் கூறிவருகிறார் என்று பாஜக நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

Hraja_UpdateNews360

மேலும், தேசியச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட எச்.ராஜாவும் மத்திய அமைச்சர் கனவில் இருக்கிறார். நீக்கப்பட்ட பதவிக்குப் பதிலாக உத்தரப்பிரதேசத்தில் நவம்பர் 9-ல் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் தன்னை நிறுத்துமாறு அவர் கேட்டிருப்பதாகவும் தெரிகிறது. அவர் வடநாட்டு பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர், உத்தரப்பிரதேச பாஜகவினர் அவரை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

பாஜகவில் இருந்து அமைச்சர் பதவிக்கு கடும் போட்டியிடும் நிலையில் ஒருவருக்கு பதவி கொடுத்தால் இன்னொருவர் அதிருப்தி அடைவார் என்பதால், அதிமுக போன்ற வலுவான கூட்டணிக் கட்சிக்கே மத்திய அமைச்சர் பதவி தரலாம என்று பாஜக மத்திய தலைமை சிந்திப்பதாகத் தெரிகிறது. கூட்டணிக் கட்சிகளில் இருந்து மத்திய கேபினட்டில் தற்போது யாரும் இல்லை என்பதால், அதிமுகவுக்கு இடம் அளித்து, மாநிலங்களவையில் அதன் நிரந்தர ஆதரவைப் பெறலாம் என்ற திட்டமும் பாஜகவிடம் இருக்கிறது. ராதாகிருஷ்ணனுக்கோ, ராஜாவுக்கோ பதவி தருவதால், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எந்தவிதமான பலனும் இல்லை என்றும், மத்திய அமைச்சரவையில் அதிமுகவை சேர்த்துவிட்டால் தமிழ்நாட்டில் 2021-ல் நடைபெறும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியை உறுதிசெய்து, அதிக இடங்களை ஒதுக்கும்படி வலியுறுத்தலாம் என்று ஏனைய பாஜக நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

Leave a Reply