மத்திய அமைச்சரவை விரிவாக்கம்… பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளான்… அதிமுகவுக்கு இடம் கிடைக்குமா…?

7 July 2021, 11:16 am
EPS_Modi_UpdateNews360
Quick Share

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் நிலையில் கூட்டணி கட்சிகளுக்கும் அதில் கிடைக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2019ம் ஆண்டு பதவியேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இதுவரையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா, சிரோமணி அகாலிதளம் கட்சிகள் விலகல் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் அங்காடி ஆகியோரின் மறைவால், அமைச்சர் பதவிகள் காலியாகின. இருப்பினும், அந்தப் பதவிகளை அமைச்சர்கள் கூடுதல் பொறுப்பாகவே வகித்து வந்தனர்.

இதனிடையே, மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கர்நாடகா ஆளுநராக நியமிக்கப்பட்டதால், மத்திய அமைச்சரவையில் மேலும் ஒரு இடம் காலியானது. இதனால், மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சி மட்டுமே இடம் பெற்றுள்ளது. எனவே, இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Modi Cabinet Cancel - Updatenews360

குறிப்பாக, ஆண்டு உத்தரப்பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மாநிலத்தைச் சேர்ந்த அப்னா தளத்தின் தலைவர் அனுபிரியா படேல், பாஜக அலகாபாத் எம்.பி. ரீட்டா பகுகுணா ஜோஷி, கான்பூர் எம்.பி. சத்யதேவ் பச்சாரி மற்றும் ராம்சங்கர் கத்தேரியா, ராஜ்குமார் சாஹல், கவுசல் கிஷோர் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. அதேபோல, காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு கேபினெட் அமைச்சர் பதவி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

அதேவேளையில், மத்திய அமைச்சரவையில் தங்களின் கட்சிக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டார். இதனால், அவரது கட்சிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது. மேலும், மேற்கு வங்கத்தில் பாஜக வளர்ச்சி பெற்று வருவதை கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்தைச் சேர்ந்த லாக்கெட் பானர்ஜி, மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் ஆகியோரில் ஒருவர் அமைச்சராக வாய்ப்பு உள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைப்பதில் சற்று சிக்கல் இருப்பதாகவே டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுக சார்பில் மக்களவையில் ஒரு எம்.பி.யும் மாநிலங்களவையில் 5 எம்.பி.களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 166

0

0