சிறு,குறு நிறுவனங்களுக்கு மேலும் 3 லட்சம் கோடி கடன்..! இருசக்கர வாகனங்களின் வரியையும் குறைக்கிறது மத்திய அரசு..!
26 August 2020, 12:34 pmடெல்லி : சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மேலும் ரூ. 3 லட்சம் கோடி கடனை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா பேரிடர் சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடையவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற தொழில்துறை கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, அவர் பேசியதாவது :- கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு அரசு முன்னிரிமை அளித்து வருகிறது. இரு சக்கர வாகனங்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை குவிந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களில் இருசக்கர வாகனமும் இடம்பெற்றுள்ளதால், அதன் மீதான வரியை குறைப்பது குறித்த ஆலோசிக்கப்படும்.
மேலும், சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு மேலும் ரூ. 3 லட்சம் கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் இன்னும் தடை விதிக்கப்பட்டுள்ள சுற்றுலா, ரியல் எஸ்டேட், போக்குவரத்து ஆகிய துறைகளில் தளர்வுகள் அளிக்கும் விதமாக, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முக்கிய மொத்த மருந்துகள் மற்றும் செயல்மிகு மருத்துவப் பொருள்கள் ஆகியவற்றின் தயாரிப்பை 6 மாநிலங்களில் பெருக்க இது உதவியது, எனக் கூறினார்.