ரூ. 61,843 கோடியிலான மெட்ரோ ரயில் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா!!

21 November 2020, 5:37 pm
cm eps - amit shah - updatenews360
Quick Share

சென்னை : ரூ. 61,843 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உள்பட பல்வேறு திட்டப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் எல். முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வெளியே பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடக்க, அதனை பார்வையிட்டவாறே ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு புறப்பட்டார்.

செல்லும் வழியில் திடீரென தனது கான்வாயை நிறுத்தி சாலையில் சிறிது தூரம் நடந்து சென்று, தொண்டர்களை பார்த்து கையை அசைத்தார். பிறகு மீண்டும் காரில் ஏறி லீலா பேலஸ் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுத்தார்.

இதையடுத்து, கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் மேடைக்கு சென்ற அவர், முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு, அமைச்சர் அமித்ஷாவிற்கு பொன்னாடை அணிவித்து, விநாயகர் சிலை உள்ளிட்ட நினைவு பரிசுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களையும், பல்வேறு பணிகளுக்கான அடிக்கல்லையும் காணொளி காட்சி மூலம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். திருவள்ளூரில் ரூ.380 கோடியில் அமைக்கப்பட்ட தேர்வாய் கண்டிகையில் நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணித்ததுடன், ரூ. 61,843 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லையும் நாட்டினார். 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ. தூரத்திற்கு சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும், கோவை – அவினாசி சாலையில் ரூ.1,620 கோடியிலான உயர்மட்ட சாலை திட்டத்தையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 406 கோடி மதிப்பில் கதவணை திட்டம், ரூ. 309 கோடி மதிப்பில் சென்னை வர்த்த மையத்தை விரிவுபடுத்தும் திட்டம், ரூ.900 கோடியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் வல்லூரில் பெட்ரோலிய முனையம், ரூ.1,400 கோடி செலவிலான முல்லை வாயலில் LUBE PLANET திட்டம் உள்ளிட்டவற்றை அவர் தொடங்கி வைத்தார்.

Views: - 0

0

0

1 thought on “ரூ. 61,843 கோடியிலான மெட்ரோ ரயில் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா!!

Comments are closed.