ஸ்டாலினிடம் கேட்க துணிச்சல் இருக்கிறதா…? பாஜகவால் விழி பிதுங்கும் திருமா.,! தமிழகத்தில் வெடித்த புதிய சர்ச்சை!

Author: Babu Lakshmanan
14 February 2022, 2:21 pm
Quick Share

விசிக தலைவர் திருமாவளவன், பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அவர்களுக்கு ஆதரவாக அத்தனை பிரச்சனைகளிலும் உரக்க குரல் கொடுப்பவர் என்று கூறுவார்கள்.
அதேநேரம் இந்து மதத்தை கிண்டலாகவும், கேலியாகவும் பேசுவதில் அவருக்கு இணை தமிழகத்தில் யாரும் கிடையாது எனவும் சொல்லலாம்.

சர்ச்சை பேச்சு

அண்மையில் ஒரு குறிப்பிட்ட உடை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவர் கொதித்தெழுந்து தமிழில் ஆவேசமாக பேசியது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘கூட்டாட்சி கோட்பாடும் நாடாளுமன்ற ஜனநாயகமும்’ என்ற தலைப்பில் புதுச்சேரியில் ஒரு கருத்தரங்கு நடந்தது.

Thirumavalavan - updatenews360

இதில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் திருமாவளவன் எம்பி அனல் பறக்க பேசினார்.

“பகுத்தறிவு கருத்துகள் மூலமாக மக்கள் சிந்திக்க கூடாது என்பதற்காகவே ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண, இதிகாச குப்பைகளை மக்களின் மூளையில் திணித்துள்ளனர். இந்த சனாதன இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், நீதி கிடையாது. தனித்தனி தீவுகளாக இருந்த சமூகங்களை மாற்றி அமைத்ததில் இந்த இரண்டு இதிகாசங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஐப் பொறுத்தவரை மத மாற்றத்தைத் தடுத்து காங்கிரசின் வாக்கு வங்கியை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என்ற இரண்டு காரணங்களுக்காக பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுடன் அவர்கள் நெருங்கிப் பழகி வருகின்றனர்.

இந்தியர்களை மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் இரு அமைப்பினரும் பிரிக்கிறார்கள். பட்டியலின மக்களை சேர்த்துக்கொண்டு சிறுபான்மை வெறுப்பு அரசியலைக் விதைக்கிறார்கள். வன்முறை யுக்திகளை கையாளுகிறார்கள். பாஜகவுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் முதல் எதிரியே இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான். அதனை தூக்கி எறிவதே அவர்களது மறைமுக நோக்கம்” என்று பரபரப்பு காட்டினார்.

பாஜக எதிர்ப்பு

பொதுவாக புதுச்சேரி மாநிலத்தில் திருமாவளவன் பேசுவது, அவ்வளவாக எடுபடாது. இதனால் ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுவதும் இல்லை.
ஆனால் அங்கு பாஜக ஆதரவுடன் என்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவதால் திருமாவளவன் பாஜக மீது தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு பாஜகவைச் சேர்ந்த மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சரான எல்.முருகன் கடும் எதிர்வினை ஆற்றியிருக்கிறார்.

புதுச்சேரிக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் இது பற்றி பேசும்போது, “புராணங்கள் இதிகாசங்களை குப்பைகள் என திருமாவளவன் கூறியிருப்பது கலவரத்தை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது.

சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை ராமாயணம் மகாபாரதம் இதிகாசங்கள் சிதைப்பதாக அவர் கூறுவதும் தவறானது. ராமாயணமும், மகாபாரதமும் இந்திய தேசத்தின் இதிகாசங்கள். நம்முடைய முன்னோர்கள் அதனை நல்நெறி இதிகாசங்கள் என போற்றியுள்ளனர்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் உள்ள ஒருவர் பாஜகவில் பிரபலமாக இருந்தால் அவர் சுயநலவாதி என திருமாவளவன் கூறுகிறார். அதனால் அவர் எந்த சுயநலமும் இல்லாமல் இருக்கிறாரா என்று ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அவருடைய நோக்கம் என்ன? சுய நலம் இல்லாமல்தான் செயல்படுகிறாரா? என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்.

பிற மாநிலங்களில் பட்டியலினத்தவர்களுக்கு நிதித்துறை போன்ற முக்கிய இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது,

எந்தத் தகுதியும் இல்லை

நமது மாநிலத்திற்கு அருகே இருக்கும் கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பட்டியலின அமைச்சர் எந்த இடத்தில் இருக்கிறார்? ஆனால் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் தமிழகத்தில் கடைசி இடத்தில் இருப்பது நியாயமா?…எங்கே போனது சமூக நீதி? என்று இதுவரை முதலமைச்சர் ஸ்டாலினிடம் திருமாவளவன் ஏன் கேட்காமல் இருக்கிறார். அதை எதிர்த்து அவர் கேள்வி கேட்டிருக்கவேண்டும் அல்லவா?…

இது ஒரு ஜனநாயக நாடு எந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். தீண்டாமையை கடைபிடிக்க மாட்டேன் என உறுதிமொழி எடுத்தவர்கள்தான் பாஜகவின் உறுப்பினர்களாக உள்ளனர். திருமாவளவன் தற்போது மிகுந்த பயத்தில் உள்ளார். அதனால் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என முயற்சிக்கிறார். ராமாயணமும், மகாபாரதமும் நம் நாட்டின் இதிகாசங்கள் அதைப்பற்றி பேச அவருக்கு எந்த தகுதியும் கிடையாது.

அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டமும் ஒரு தேசிய நூலான பகவத்கீதை போன்றதுதான். அந்த சட்டத்தை வணங்கிவிட்டுத்தான் மோடி பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

புதுச்சேரியில் பிரதமரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தென் இந்தியாவில் முதன்முறையாக புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவது பெருமை சேர்க்கிறது” என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன், விசிக தலைவர் திருமாவளவனுக்கு சுடச் சுட பதிலடி கொடுத்துள்ளார்.

வேறு வழியில்லை

இதுபற்றி அரசியல் நோக்கர்கள் கூறும்போது” பாஜக இந்துக்களை தம் பக்கம் திரட்டிக்கொள்ள அவர்களுக்கு பயன்படப்போகும் ஒரேயொரு திட்டம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது மட்டுமே. இந்த கோவில் கட்டப்பட்டால், இந்துக்கள் ஓரணியில் திரண்டு விடுவார்கள். இதை எப்படி நாம் எதிர்கொள்ளப்போகிறோம்? என முன்பு திருமாவளவன் உசுப்பேற்றி விட்டார்.

எந்த மதமாக இருந்தாலும் பிரச்சனை வந்த பிறகு அணுகுவது என்பது வேறு விஷயம். ஆனால் பிரச்சனை உருவாகும் முன்பே, அதை தூண்டி விடும் வகையில் திருமாவளவன் போன்ற சிலரின் பேச்சு அமைகிறது. அவரைப் போலவே சில தலைவர்களும் பேசி வருகிறார்கள். அவர்களது நோக்கம் மக்களை எப்போதும் பரபரப்புக்கு உள்ளாக்க வேண்டும். பதற்றத்திலும், பயத்திலும் வைத்திருக்க வேண்டும். அதனை வைத்து அரசியல் நடத்த வேண்டும் என்பதாகவே இருக்கிறது.

Thiruma - Updatenews360

திருமாவளவன் போன்றவர்கள் இப்படி அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதற்கு முக்கிய காரணமே பாஜகவின் இன்றைய தலைவர்களில் பெரும்பாலானோர் சட்ட மேதை அம்பேத்கரை மனதார ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பதுதான். அதனால் திருமாவளவனால் அதை பூதாகர பிரச்சினையாக்கி பேச முடியாது. தவிர, அது பற்றி விமர்சித்தால் அரசியல் ரீதியாக பெரும் பாதிப்பையும் அவருடைய கட்சி சந்திக்க நேரிடும்.

அதனால்தான் இந்துக்கள் புனித நூலாக போற்றும் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை கடுமையாகத் தாக்கிப் பேசுவதை திருமாவளவன் தற்போது வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 829

0

0