தமிழகத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

20 November 2020, 3:16 pm
chennai metrology - updatenews360
Quick Share

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Rain - Updatenews360

23ம் தேதி அன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும், 24ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நவம்பர் 20 முதல் நவம்பர் 23 வரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நவம்பர் 20 முதல் 24 வரை மத்திய அரபிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

sooravali - updatenews360

நவம்பர் 23ம் தேதி தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நவம்பர் 24ம் தேதி தென் மேற்கு வங்க கடல் பகுதியில், சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25 தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Views: - 41

0

0