பொதிகையில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிராக வழக்கு..! “பிடிக்கலைன்னா சேனலை மாத்துங்க”.. தலைமை நீதிபதி பொளேர்..!
18 January 2021, 7:31 pmமத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொதிகைத் தொலைக்காட்சியில் சம்ஸ்கிருத மொழியில் செய்தி வாசிக்கத் தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில், சமஸ்கிருத செய்தி பிடிக்காவிட்டால், அந்த சமயத்தில் சேனலை மாற்றிக்கொள்ளுங்கள் என மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்துக்குமார். இவர் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழியில் செய்தி வாசிப்பதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
முத்துக்குமார் தொடர்ந்த வழக்கில், “பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிடங்கள் சமஸ்கிருதச் செய்தி அறிக்கை வாசிக்கப்படுகிறது. தமிழகத்தில் 803 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுகினறனர். சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு மட்டும் மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சமஸ்கிருதத்தை விட மிகப் பழமையான தமிழ் மொழிக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
இந்தப் பாரபட்சமான நடவடிக்கைக்கு மத்தியில், பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்தி அறிக்கை வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. சமஸ்கிருதச் செய்தி அறிக்கை வாசிக்கத் தடை விதித்து, அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ”சமஸ்கிருதச் செய்தி அறிக்கை தேவையில்லை என்றால், மனுதாரர் அந்த நேரத்தில் தொலைக்காட்சியை நிறுத்தி வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு சேனலை மாற்றிக் கொள்ளலாம். இதைவிடப் பல முக்கியமான பிரச்சினைகள் உள்ளன. மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுக்கலாம்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
0
0