கனமழையால் ஸ்தம்பிக்கும் சென்னை : நத்தம் வேகத்தில் நகரும் வாகனங்கள்… மெட்ரோவில் பயணிக்க அலைமோதும் பொதுமக்களின் கூட்டம்…!!
Author: Babu Lakshmanan30 December 2021, 8:23 pm
சென்னை: சென்னையில் திடீரென பெய்து வரும் நிலையில், நகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று மதியம் முதல் திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக புறநகர் பகுதிகளான செங்குன்றம், புழல், மாதவரம், கொளத்தூர், வில்லிவாக்கம், ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், மதியத்திற்கு மேல் கனமழை கொட்டித் தீர்த்தது.
முக்கியமாக சென்னை எம்ஆர்சி நகரில் 94 மிமீ மழை இதுவரை பெய்துள்ளது. மீனம்பாக்கத்தில் 50 மிமீ மழை வரை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 25 மிமீ மழை வரை பெய்துள்ளது. எழும்பூர், கிண்டி, சேத்துப்பட்டு, சென்ட்ரல், புரசைவாக்கம் விடமால் கனமழை பெய்து வருகிறது.
இதனால், சாலைகளில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. முட்டியளவு தண்ணீரால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நீடிக்கும் கனமழையினால், மேட்லி, ஆர்பிஐ மற்றும் துரைசாமி சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திற்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்ததால் அரசு ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், கனமழையால் சென்னை மிதக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் நத்தம் வேகத்தில் நகர்ந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுவதால், மெட்ரோவில் பயணிக்க கூட்டம் அலைமோதுகிறது.
0
0