மகளின் ஆன்மா இளைப்பாறாட்டும்.. இறுதிச்சடங்கை நடத்துங்க… நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்ற பெற்றோர்கள்…!!

Author: Babu Lakshmanan
22 July 2022, 2:05 pm
Chennai High Court- Updatenews360
Quick Share

சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கை நடத்த பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகள் ஸ்ரீமதி (17). இவர், கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலம் அடுத்த கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த 13ம் தேதி விடுதியில் தங்கி இருந்த அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். ஆனால், இதனை ஏற்க மறுத்த அவரது பெற்றோர், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால், அவர்கள் தொடங்கிய போராட்டம் வன்முறையில் முடிந்தது.

கடந்த 17ம் தேதி மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது. போலீஸ் வாகனம் மற்றும் பள்ளிப் பேருந்துகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மாணவியின் உடல் கடந்த 14-ந்தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதேவேளையில், மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. அதேவேளையில், பிரேத பரிசோதனையின் போது, மாணவியின் பெற்றோர் உடனிருக்கலாம் என்றும், மனுதாரர் தரப்பில் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவர்களை நியமிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மாணவியின் தந்தை ராமலிங்கம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதேநேரம், உயர்நீதிமன்றம் நியமித்த டாக்டர்கள் குழு, அந்த மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்தது. மாணவியின் தந்தை மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மறுபிரேத பரிசோதனை தொடர்பான கோரிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றத்திலேயே வைக்கலாம் என தெரிவித்ததோடு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோருக்கு உத்தரவிடுமாறு காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம் மாணவியின் பெற்றோரிடம் சரமாரி கேள்வி எழுப்பியது.

அப்போது, நீதிமன்றம் மீது மனுதாரருக்கு நம்பிக்கை உள்ளதா…? இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெறவதில்லை, என நீதிபதி காட்டமாக தெரிவித்தார். அதேவேளையில், மாணவியின் 2-வது பிரேத பரிசோதனையில் புதிதாக ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை சரிபார்த்துக்கொள்ளால் என இந்த வழக்கில் நியமிக்கப்பட்ட கீழ்பாக்கம் மருத்துவமனை தடயவியல் நிபுணர் தெரிவித்தார்.

அந்த சமயம், பிரேத பரிசோதனை திரிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தந்தை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து, மாணவியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். 3 மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும். கண்ணியமான முறையில் மாணவியின் இறுதிச்சடங்கை நடத்துங்கள். மாணவியின் ஆன்மா இளைப்பாறட்டும் என்றும் நீதிபதி ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில், உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள மாணவியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். நாளை காலை 7 மணிக்குள் உடலை பெற்றுக்கொண்டு மாலைக்குள் மாணவியின் உடலுக்கு இறுதிச்சடங்கை முடிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Views: - 441

0

0