ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ரத்தாகிறதா..? பரபரப்பு தீர்ப்பை வெளியிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!!

Author: Babu Lakshmanan
24 February 2023, 5:49 pm
High Court -Updatenews360
Quick Share

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா.வின் மறைவை தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் என களைகட்டி வரும் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், தேமுதிக என 77 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த கோரி சுயேட்சை வேட்பாளர் கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வினியோகம் தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் புகார் அளித்தேன். அந்தப் புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பணப் பட்டுவாடா புகாரை பொறுத்தவரை, எந்த தேதியில், யார் பணம் கொடுத்தார்கள், பெற்றார்கள் என்பது தொடர்பான விவரங்கள் இல்லை. தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டால் அவற்றில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, தேர்தலை நிறுத்தக் கோரி கண்ணன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், மனுதாரர்களின் புகார்களை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Views: - 266

0

0