டிச., முதல் வாரத்திற்குள் மெரினா கடற்கரையை திறப்பது குறித்து முடிவெடுக்கவும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

18 November 2020, 1:06 pm
Merina Case-Updatenews360
Quick Share

சென்னை : டிசம்பர் முதல் வாரத்திற்குள் மெரினா கடற்கரையை திறப்பது குறித்த முடிவை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மீனவ நல அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவின் ஒரு பகுதியாக, மெரினா கடற்கரை பராமரிப்பது மற்றும் தள்ளுவண்டி கடைகளை முறைப்படுத்துவது குறித்து விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, இதுவரையில் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், ஆனால், தற்போது, ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த மாதம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நவ.,1ம் தேதி முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க வாய்ப்புள்ளதாகவும், ஆக்கிரமிப்பு கடைகளை முழுவதும் அகற்றப்பட்டு, மீன் வியாபாரிகள் கடைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது.

தற்போது வரை மெரினா கடற்கரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறப்பது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிசம்பர் முதல் வாரத்திற்குள் மெரினா கடற்கரையை திறப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், முடிவு எடுக்கப்படவில்லை என்றால், நீதிமன்றம் உரிய நடவடிக்கையை எடுக்கும் என எச்சரித்த நீதிபதிகள்,
மெரினாவில் 900 தள்ளுவண்டி கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைக்கு அனுமதியளித்தனர். அதோடு, லூப் சாலையில் மீன் அங்காடிகளை அமைப்பது குறித்து 2 வாரத்திற்குள் ஆய்வு நடத்தி அறிக்கையை சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 0

0

0