பள்ளிக்கட்டணம் கட்டுமாறு பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகள் டார்ச்சர் : தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Author: Babu Lakshmanan
29 June 2021, 1:54 pm
Chennai High Court- Updatenews360
Quick Share

மாணவர்களின் பள்ளிக் கட்டணத்தை கட்டுமாறு பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகள் அழுத்தம் கொடுப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்களின் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள வேண்டுமெனில், கடந்த ஆண்டு செலுத்த வேண்டிய பள்ளிக் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தனியார் பள்ளிகள் கூறி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரன் பொதுநல மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்க கூடாது. கட்டணம் செலுத்தாத மாணவர்களின் கல்வியில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கட்டணத்தை செலுத்த தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று கடந்த ஆண்டே தமிழக அரசு உத்தரவிட்ட நிலையிலும், தனியார் பள்ளிகள் பெற்றோர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி ஏற்படுத்தித் தருவதாகவும், ஆனால், தமிழக அரசு இதனை கண்டு கொள்வதில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதோடு, பொருளாதார ரீதியில் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள தேவையான உபகரணங்களையும், இணையதள வசதியையும் கொரோனா நிவாரண உதவியாக வழங்க வேண்டும் எனவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீது அடுத்த வாரத்துக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.

Views: - 150

0

0