தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?…
23 November 2020, 1:35 pmசென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 24ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால்ஆகிய 5 மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, புதுச்சேரி பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நவம்பர் 25ம் தேதி நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலையில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவாரூர், திருச்சி, கரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டையில் மிக மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஈரோடு, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகட்சமாக பேச்சிப்பாறை – 2 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0