நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் திமுக அரசு… விவசாய கிராமங்களை அழிப்பது ஏன்..? பரந்தூர் விமான நிலைய விவகாரம் : கொந்தளிக்கும் விவசாயிகள்!

Author: Babu Lakshmanan
5 September 2022, 7:41 pm
Quick Share

சென்னை : முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலை போன்று ஏகளாபுரம் மக்களை திமுக சித்ரவதை செய்வதாக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது :- பரந்தூர் விமான நிலையம் தொடர்பான வெளிவராத உண்மைகளை எடுத்து கூற வந்துள்ளோம்.

பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள ஏகளாபுரம் கிராமத்திற்கு சென்று விவசாயிகளை சந்திக்க சென்றபோது, கிராமத்திற்கு 2 கிலோ மீட்டர் தூரத்தில் 200 போலீசார் வழிமறித்தனர். குமரி முதல் டெல்லி வரை பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். இதுபோன்ற காவல் துறை அட்டூழியத்தை இதுவரை பார்த்ததில்லை.

தீவிரவாதிகளை, கொலை குற்றவாளிகளை, சமூக விரோதிகளை கைது செய்வது போல எங்களை கைது செய்து அழைத்து சென்றார்கள். சம்பவத்தில் நடந்தவற்றை செல்போனில் ஒளிப்பதிவு செய்த என்னுடைய ஓட்டுநரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டன.

நேற்று காவல் துறை நடத்தியது மனிதாபமானமற்ற செயலாகும். காவல் துறை கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. காவிரி டெல்டா போராட்டத்தில் எதிர்கட்சியாக இருந்த திமுக எங்களை முன்னிறுத்தி தான் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக முன்னால் வரவில்லை.

பல்வேறு போராட்டங்களில் எங்கள் பின்னால் வந்த திமுக, தற்போது காவல் துறையை வைத்து எங்களை மிரட்டும் தொணியில் நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏகளாபுரம் கிராமத்தின் போராட்டக்குழுவை சேர்ந்த 8 விவசாய சங்க தலைவர்கள் இங்கு வந்துள்ளனர். 13 கிராமங்களின் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.

4700 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. 2600 ஏக்கர் பொன் விளையும் பூமியாக இருக்கும் நிலமாகும். இந்த பரந்தூர் ஏரி தான் செம்பரம்பாக்கம் ஏரியின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாகும். 1350 ஏக்கர் இந்த ஏரியின் அளவாகும். பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் ஆதாரம் முழுமையாக அழிக்கப்படுகிறது.

பரந்தூர் விமான நிலையத்திற்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் அரக்கோணம் விமான படைத்தளம் அமைந்துள்ளது. விமான நி்லையம் அமைப்பதில் பல்வேறு விதிகள் மீறப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள விமான நிலையத்திற்கு ஏற்ற விமானங்கள் பறக்கிறதா? என்ற ஆய்வு உள்ளதா?, சென்னையில், கன்னியாகுமரியும் தமிழகத்தின் கடைக்கொடி பகுதியாகும்.

உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைத்தால் தமிழக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இதற்கு திமுக அரசு மறுத்து, நாட்டின் வளர்ச்சியை தடுத்து, சென்னையை சுற்றியுள்ள விவசாய கிராமங்களை அழிப்பதன் நோக்கம் என்ன..? முள்ளிவாய்க்கால் பகுதியில் எப்படி தமிழர்கள் அடைக்கப்பட்டார்களோ, அதேபோல் தான் ஏகளாபுரத்தில் திமுக ஆட்சியில் கிராம மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்து தான் இந்த நடவடிக்கை ஏகளாபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறார். ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதா? என முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.

சுயநலத்திற்காக விவசாயிகளை அச்சுறுத்தி திமுக தமிழகத்தில் ஆட்சியை நடத்தலாம் என இருந்தாலும் பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பை திமுக பெற்றுள்ளது. வாக்குகளை பெற பணம் ஒன்று தான் வழி என குறிக்கோளாக மக்களை அழித்து பணத்தை வைத்து வாக்குகளை பெற்று விடலாம் என திமுக நினைத்தால், அதனை விவசாயிகள் பார்த்து கொண்டு இருக்க மாட்டோம்.

பரந்தூர் விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை திமுக அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் விவசாயிகளின் போராட்டத்தை திமுக அரசு சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறோம். ஏகளாபுரத்தில் விமான நிலையம் அமைப்பதை விட்டுவிட்டு உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைக்க திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட போராட்டங்கள் பாஜகவிற்கு எதிராகவே நடத்தப்பட்டன. ஆனால், தற்போது தமிழக மக்களின் நலனுக்காக திமுக அரசை எதிர்த்து போராட வேண்டிய நிலை உள்ளது. 10 ஆண்டு காலமாக பெறப்பட்ட உரிமையை திமுக ஆட்சிக்கு வந்த உடனே பறிக்கப்பட்டுள்ளது. திமுக மீது அனுதாபத்தில் பேசுகிறேன். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சையில் செராமிக்ஸ் தொழிற்சாலை அமைக்க அனுமதியளித்தது யார்?

மக்களுக்கு நல்லது செய்வோம் என ஆட்சிக்கு வந்துவிட்டு ஆட்சிக்கு வந்தபின்பு பொதுமக்களையும், விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயலில் திமுக ஈடுபடுவதை தோலுரித்து காட்டுவோம். சொன்னதையும் செய்யவில்லை. சொல்லாததையும் செய்யவில்லை, இருப்பவைகளையும் தடுத்து நிறுத்தும் அரசாக திமுக இருந்து வருகிறது, என அவர் தெரிவித்தார்.

Views: - 177

0

0