வரவர தமிழகம் ரொம்ப மோசம்… கர்ப்பிணிமார்களை காப்பாற்றுங்க : தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Author: Babu Lakshmanan
14 March 2022, 2:31 pm
stalin - anbumani - updatenews360
Quick Share

சென்னை : மகப்பேற்றின் போது இறக்கும் தாய்மார்களின் இறப்பு அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;- 2017-18 காலத்தில் மகப்பேற்றின் போது தாய்மார்கள் இறக்கும் விகிதத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கேரளம், மராட்டியத்துக்கு அடுத்த படியாக இருந்த தமிழகம் இப்போது தெலுங்கானாவுக்கு பின் சென்றிருப்பது கவலையளிக்கிறது!

2016-17ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த விகிதம் (ஒரு லட்சம் மகப்பேறுகளில்) கேரளத்தில் 13, மராட்டியத்தில் 8, ஆந்திரம் தெலுங்கானம் தலா 7 குறைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 2 மட்டுமே குறைந்துள்ளது. ஆந்திரத்துடன் சமநிலையில் உள்ள தமிழகம் விரைவில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்படலாம்!

தமிழகத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் 58 ஆக உள்ள நிலையில், அதை 2023-ஆம் ஆண்டில் 25 ஆக குறைக்க வேண்டும். இது மிகவும் சவாலானது. ஆரம்ப சுகாதார நிலையங்களையும், 108 அவசர ஊர்திகளையும் அதிகரிப்பது உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும்!

யூ-ட்யூப் வழிகாட்டுதலில் மகப்பேறு பார்க்கும் அறிவீனம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதை அகற்றுவதுடன் மகப்பேறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மகளிருக்கான மகப்பேறு கால நிதியுதவியை ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 652

0

0